சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 12 ஆம் தேதி சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி கூடியது. ஆளுநர் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் உரையை வாசிக்க தொடங்கிய போது, சட்டப்பேரவை தொடங்கும் முன்பும், முடியும் போது தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என்ற தனது வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறினார்.
அதுமட்டுமல்லாமல் ஆளுநர் உரையில் தன்னால் ஏற்ப முடியாத பகுதிகள் இருந்ததாகவும் கூறி ஆளுநர் உரையை வாசிக்க மறுத்துவிட்டார். இதன்பின் ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் அதற்கு அடுத்த நாள் கொண்டு வரப்பட்டு, விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் தமிழ்நாடு பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்கள் நடந்தன. இதன்பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்படுவதற்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி கூட உள்ளது. அதற்கு முன்னதாக அலுவல் ஆய்வு குழு கூடி சட்டப்பேரவையை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என சபாநாயகர் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
சிறப்பு திறன் பயிற்சி பெற லண்டன் சென்ற தமிழக மாணவா்கள் (apcnewstamil.com)
அதன்படி, அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் ஜூன் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் துறைவாரியாக எந்தெந்த நாட்களில் எந்த மானிய கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படலாம் என்பது குறித்தும், எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்தலாம் என்பது தொடர்பாகவும் முடிவு செய்யப்படும். குறிப்பாக, 25 நாட்கள் வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.