திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காவல்துறையின் அனுமதி இன்றி திருவிழா போல் இரவு, பகலாக ஆயிரம் முதல் லட்சம் வரை பந்தயம் கட்டி நடைபெறும் சூதாட்டம்.திண்டுக்கல் மாவட்டம், நந்தம் தொகுதிக்கு உட்பட்ட சாணார்பட்டி அருகே மஞ்சநாயக்கன்பட்டி, தோத்தம்பட்டி, மருனுத்து, கோட்டைப்பட்டி ரோடு ஆகிய பகுதிகளில் தனியார் தோட்டங்களில் சேவல் கட்டு சூதாட்டம் நடைபெற்றது வருகிறது.
தற்போது மஞ்ச நாயக்கன்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் திருவிழா போல் டியூப் லைட் வெளிச்சத்தில் இரவு பகலாக சேவல் சண்டை சூதாட்டம் நடைபெற்று வருகிறது. இதில், சேவலின் ஒரு காலில் சிறிய கத்தி ஒன்றும் கட்டப்பட்டு இருக்கும். போட்டி 5 நிமிடத்திற்கு மேல் நடைபெறாது. சேவல்கள் ஆக்ரோசத்துடன் ஒன்றுடன் ஒன்று மோதும் போது கத்தி பட்டு சேவல் இறந்துவிடும்.

போட்டியில் மோதும் 2 சேவல்கள் மீதும் ஆயிரம் முதல் லட்சக்கணக்கில் சூதாட்ட பந்தயம் கட்டுவார்கள். வெற்றி பெறும் சேவல் மீது பணம் கட்டியவர்களுக்கு ஒரு மடங்கு சேர்த்து திரும்ப வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியின் போதும் ஆயிரம் முதல் லட்சம் வரை சூதாட்டம் நடைபெறுகிறது.
ஒரு நாள் முழுவதும் நடைபெறும் சேவல் கட்டு சூதாட்டம் மூலம் கோடி கணக்கில் பணம் புரளும். இங்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக நின்று சேவல் சண்டையை வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்தப் போட்டிகள் இரவு பகலாக விடிய விடிய நடைபெற்று வருகிறது ஆனால் காவல்துறையினர் இதைக் கண்டு கொள்வது இல்லை. எனவே இது போன்ற சட்டவிரோத போட்டிகளை நடைபெறாமல் காவல்துறை பார்த்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.