HomeBreaking Newsமுன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜர்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜர்!

-

- Advertisement -

தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக, முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு விசாரணைக்காக ஆஜரானார்.

we-r-hiring

வழக்கின் பின்னணி

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தர உயர்வு, DTCP அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பி.டி. அரசகுமார், சுரேஷ் மற்றும் ராஜா ஆகிய 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அன்பில் மகேஷ் மீது வழக்குப்பதிவு

வழக்கின் தொடர் விசாரணையில் பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சி இடங்கள், அவரது உதவியாளர்களான வாலாடி கார்த்திக், அருண் பிரகாஷ், பிரகாஷ் ஆகியோருக்குச் சொந்தமான இடங்கள் உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

118 ஆவணங்கள் பறிமுதல்

இந்த சோதனையின்போது, சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்ட வழக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 118 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 18 செல்போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், 2 டெஸ்க்டாப் கணினிகள், ஒரு டேப்லெட் மற்றும் ஒரு ஆப்பிள் ஐபேட் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விசாரணை

இந்த நிலையில், மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகியுள்ளார். அவரிடம் வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக அரசின் 4 மாத கால சாதனை வெறும் ‘அலங்கார அறிவிப்புகளா?’: லண்டன் பயணம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

MUST READ