தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்தும், முதலமைச்சரின் லண்டன் பயணம் மற்றும் புதிய தொழில் முதலீடுகள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் முன்னணி தலைவருமான ஆர்.பி. உதயகுமார் முன்வைத்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் எழுப்பிய அதிரடியான மற்றும் சுவாரஸ்யமான கேள்விகளின் தொகுப்பு இதோ,

பிரிக்ஸ் மாநாடும்… லண்டன் பயணத்தின் அரசியல் உள்நோக்கமும்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட பிரிக்ஸ் (BRICS) மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தமிழக முதல்வர் வெளிநாடு சென்றது குறித்து ஆர்.பி. உதயகுமார் கடும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசிய பிரதமரின் சந்திப்பு தவிர்ப்பு: பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா வந்திருந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேச விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் அந்த சந்திப்பைத் தவிர்த்துவிட்டு முதல்வர் லண்டன் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மலேசிய பிரதமர் சந்திப்பு நடந்திருந்தால் தமிழகத்திற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்திருக்க வாய்ப்பிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்திய கம்பெனியுடன் ஒப்பந்தமா?: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ‘மதர்சன்’ (Motherson) நிறுவனத்துடன் ரூ. 11,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் லண்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து லண்டன் வரை செல்ல வேண்டிய அவசியமென்ன? தலைமைச் செயலகத்திலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை எளிதில் போட்டிருக்கலாமே என்ற கேள்சியையும் எழுப்பியுள்ளார்.
கார் ரேஸ் மற்றும் தனிப்பட்ட குழு பயணம் குறித்த சர்ச்சை
முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியும், மு.க. ஸ்டாலினும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் சம்பந்தப்பட்ட தொழில் துறை அமைச்சர்களையும், துறைச் செயலாளர்களையும் உடன் அழைத்துச் சென்றதை ஆர்.பி. உதயகுமார் சுட்டிக்காட்டினார்.
தொழில் துறை அமைச்சர் ஏன் செல்லவில்லை?: தவெக ஆட்சியின் முதல் வெளிநாட்டுப் பயணத்தில் தொழில் துறை அமைச்சரோ அல்லது தொழில் துறை செயலாளரோ உடன் செல்லவில்லை. மாறாக, முதல்வரின் தனி உதவியாளர் ராஜேந்திரன் மற்றும் நண்பர்கள் ஜெகதீஷ் பழனிச்சாமி, விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட தனிப்பட்ட குழுவினர்தான் உடனிருந்தனர் என்ற சர்ச்சை வெடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
அஜித் பங்கேற்ற கார் ரேஸ் நிகழ்வு: கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற நடிகர் அஜித் பங்கேற்ற கார் ரேஸ் நிகழ்வில் முதல்வர் விஜய் கலந்துகொண்டதும், அங்கு நடைபெற்ற நிகழ்வுகளும் உலக அளவில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளதாக அவர் விமர்சித்தார்.
வெள்ளை அறிக்கை கோரிய பத்திரிகையாளர்கள் சந்திப்பு
வெளிநாடு சென்றுவிட்டு திரும்பும் முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள், பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஈர்க்கப்பட்ட முதலீடுகள், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசு வழங்கும் சலுகைகள் குறித்த புள்ளிவிவரங்களை வழங்குவது வழக்கமான நடைமுறை என்றார். ஆனால், லண்டன் பயணம் முடிந்து திரும்பிய முதல்வர் விஜய்யோ அல்லது உடன் சென்ற அமைச்சர்களோ இதுவரை எந்தவொரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தி விவரங்களை வெளியிடவில்லை என்று குற்றம்சாட்டினார்.
“பத்திரிகையாளர்களைச் சந்தித்து அரசின் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கம் அளிப்பது தேசக்குற்றம் அல்ல; உண்மையைச் சொன்னால் மக்களிடம் தெளிவு பிறக்கும்” என்று ஆர்.பி. உதயகுமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நான்கு மாதத்தில் ரூ. 40,000 கோடி கடன்!
தொழில் முதலீடுகள் குறித்த அறிவிப்புகள் வெறும் அலங்கார விளம்பரங்களாக மட்டுமே இருப்பதாகவும், செயல்பாட்டில் எதுவும் இல்லை எனவும் அவர் சாடினார். தவெக அரசு பதவியேற்ற இந்த நான்கு மாத காலத்திற்குள் ரூ. 40,000 கோடி கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், அந்தத் தொகை முழுக்க முழுக்க வருவாய் செலவினங்களுக்கே சென்றுவிட்டதாகவும் பகீர் தகவலை வெளியிட்டார்.
வெறும் அலங்கார அறிவிப்புகளை வெளியிட்டுவிட்டு இதுதான் அரசின் சாதனை என்று மக்களை ஏமாற்றினால், வரவிருக்கும் இடைத்தேர்தல்களில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இரட்டை இலை அணி இவற்றுக்கெல்லாம் தகுந்த பாடம் புகட்டும் என்று எச்சரித்தார்.
ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை
“முதல்வர் நினைத்தால் தலைமைச் செயலகத்திலேயே ஒப்பந்தங்களைச் செய்திருக்கலாம். வெளிநாட்டுப் பயணத்தின் உண்மையான விவரங்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் இதற்கான சரியான தீர்ப்பை வழங்குவார்கள்.”
தவெக அரசின் ஆரம்பக்கட்ட பொருளாதார நகர்வுகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் தொடர்ச்சியான கேள்விகள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு ஆளுங்க தரப்பு என்ன மாதிரியான விளக்கத்தை அளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மதுரை எய்ம்ஸில் முக்கிய அறிவிப்பு! ஜனவரி 1 முதல் முழுமையான OPD சேவை – மத்திய அரசு தகவல்
