நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம். நாட்டின் ஒற்றுமைக்காக எங்கள் தலைவர்கள் இந்திரா, ராஜிவ் தங்களது உயிரை தியாகம் செய்தார்கள். எ நீங்கள் (பா.ஜ.க., ) என்ன செய்தீர்கள்? குடும்ப உறுப்பினர்கள் யாராவது தியாகம் செய்திருக்கிறார்களா? இல்லையே” என்று கூறினார்.


எல்லையில் சீனாவின் ஊடுருவலை தடுக்க முடியாததால், மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தத் தயங்குகிறது. பிரதமர் வெளியில் சிங்கம் போல பேசுகிறார், ஆனால் உண்மையில் அவர் உள்ளே ‘எலி’ போல் செயல்படுகிறார் என்று விமர்சித்தார். இந்த நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று கூட்டம் தொடங்கியதுமே பா.ஜ.க தரப்பினர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். இதற்கு மாநிலங்களவையில் கண்டனம் தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மல்லிகார்ஜுன அநாகரீகமாக பேசியதாகவும், அவர் பயன்படுத்திய வார்த்தைகள் துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.

மேலும், அவர் ஆதாரமற்ற விஷயங்கள் பேசியதோடு , நாட்டு மக்களிடையே பொய்களை தேசத்தின் முன்வைக்க முயற்சிப்பதாகவும் கூறிய அவர், அதனை கண்டிப்பதாகவும் தெரிவித்தார். ஆகையால் நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் , கார்கே தனது மனநிலை மற்றும் பொறாமையை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். இந்நிலையில் இதற்கு பதிலளித்த கார்கே, “நாடாளுமன்றத்துக்கு வெளியே ராஜஸ்தானின் அல்வாரில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போதுதான் நான் இதனை பேசினேன். அரசியல் ரீதியாக நான் பேசியது அவைக்கு வெளியே தான். இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. எனவே அது பற்றி இங்கு விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டாவதாக, சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்குப் பங்கு இல்லை என்று என்னால் இன்னும் சொல்ல முடியும்” என்று திட்டவட்டமாக பதிலளித்தார்..