சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை புகாரை ரத்து செய்த சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ‘யங் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு தொடர்பான பண மோசடி வழக்கில் 2,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி & ராகுல் காந்தி உள்ளிட்ட பலருக்கு தொடர்பு உள்ளது என கூறி சுப்பிரமணிய சுவாமி அமலாக்கதுறையில் புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணை கடந்த 16ம் தேதி டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தனிநபர் அளித்த புகார் அடிப்படையிலே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் முதல் தகவல் அறிக்கையின் (FIR) அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் அமலாக்கத் துறையின் புகாரை தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தை அமலாக்கத்துறை நாடி உள்ள நிலையில் இன்றைய வழக்கின் விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா, டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தின் உத்தரவு பி.எம்.எல்.ஏ சட்டத்தின் மீறுவதாகவும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு நீடித்தால் பி.எம்.எல்.ஏ சட்டம் பயனற்றதாகவும், தேவையற்றதாகவும் மாறிவிடும் சூழல் ஏற்படும் என வாதிட்டார்.

மேலும் வழக்கில் உள்ள உண்மைகளை நீதிமன்றத்திற்கு எடுத்துரைக்கிறேன் எனக் கூறியதோடு 50 லட்சம் ரூபாய் மதிப்புடைய தொகைக்கு 2000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்தை சோனியா காந்தி & ராகுல்காந்தியின் நிறுவனம் பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் டெல்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை முன்பு நடைபெற்ற போது அதற்கு எதிராக இதே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் அந்த மனுக்களை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
கடந்த 16ம் தேதி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தின் நீதிபதி வழங்கியுள்ள இந்த வழக்கை மட்டும் அல்லாமல் பிற வழக்குகளையும் பாதிக்கக்கூடும் என அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதோடு, தனிநபரின் புகாரை எடுத்துக் கொள்ளாமல் அமலாக்கத் துறையால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். அப்போது தனிநபர் அளித்த புகார் அல்லது நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை செய்யும் வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும் மனுதாரர் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்டவரையும் நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரித்து உள்ளதா? என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு சுப்ரமணியசுவாமி மட்டுமின்றி சாட்சிகளையும் விசாரணை நீதிமன்றம் விசாரித்ததாக அமலாக்கத்துறை தெரிவித்தது. தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்து உள்ள மேல்முறையீட்டு மனு மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து தரப்பும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை 2026 மார்ச் 12ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஆபத்தான நிலையில், வெள்ளவாரி கால்வாய் பாலம்!! உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


