பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு ஒப்பிட்டு சொல்ல இந்தியாவிலே யாருமில்லை. அதிலும் அரைகுறை அண்ணாமலையை ஒப்பிட்டு பேசுவது அபத்தம் என கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளாா்.
சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனர் கருணாஸ் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சோழபுரம், கருங்காலக்குடி, ஒக்கூர், மதகுபட்டி, சலுகைப்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். பல இடங்களில் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, செல்ஃபி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சிவகங்கை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. குறிப்பாக பெண்கள் முதலமைச்சர் மீது நன்றி உணர்வுடன் உள்ளனர். அவரின் பெயரைச் சொன்னாலே மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்” என்றார். திருப்பத்தூரில் நடைபெற்ற முதல்வர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றது தனது பிரச்சாரத்திற்கு கூடுதல் பலம் சேர்த்ததாகவும் குறிப்பிட்டார்.
எதிரணி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த முக்கியப் பணியும் செய்யவில்லை என்ற அதிருப்தி மக்களிடையே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். அதேசமயம், முன்னாள் திமுக எம்.எல்.ஏ த. கிருஷ்ணன் செய்த பணிகள் இன்னும் மக்களால் நினைவுகூரப்படுகின்றன என்றார்.
மேலும், இந்த பகுதி வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை உள்ளதாகவும் கருணாஸ் கூறினார். இங்கு தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குவதே தனது முக்கிய நோக்கம் எனவும் தெரிவித்தார்.
அண்ணாமலையைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அண்ணாமலையை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருடன் ஒப்பிட்டு பேசுவது கடுமையாக விமர்சித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரோடு செல்லூர் ராஜு ஒப்பிட இந்தியாவில் யாரும் இல்லை. அண்ணாமலையை அவருடன் ஒப்பிடுவது முற்றிலும் அபத்தம்” என்று அவர் கூறினார். இதுபோன்ற கருத்துகளை வெளியிட்ட செல்லூர் ராஜு மீது கடும் கண்டனமும் தெரிவித்தார்.
திரைப்படங்கள் இணையத்தில் கசிவு ஆகும் விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, இது பொதுவாக நடைபெறும் விஷயம் என்றும், இதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். “என்னுடைய படங்களும் இதுபோல் வெளியானதே உள்ளது” எனவும் கூறினார்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, எம்ஜிஆர் மற்றும் என்டி ராமராவ் போன்றோர் நடிகர்களாக இருந்து வெற்றிகரமாக ஆட்சி செய்ததை நினைவுகூர்ந்தார். ஆனால் அரசியலில் முன்னேற அரசியல் அனுபவமும் அறிவும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அண்ணாமலையை விமர்சித்த அவர், “IPS படித்தவர் என்பதால் மக்களுக்கு பல நன்மைகள் செய்திருக்க முடியும். ஆனால் அதை செய்யாமல் அரசியலுக்கு வந்துள்ளார். சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை மட்டும் கொண்டு பேசும் பழக்கம் அவரிடம் உள்ளது” என குற்றம்சாட்டினார்.
இதேபோல் எடப்பாடி கூறிய “திமுக இரண்டு முறை வெற்றி பெறவில்லை” என்ற கருத்தையும் கருணாஸ் விமர்சித்தார். “1967ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சி அமைந்தது. அதன் பிறகு கருணாநிதி பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் என்பதை கூட அறியாமல் பேசுவது அரசியல் அறிவின் குறைவு” என்று அவர் கடுமையாக பதிலளித்தார்.
மொத்தத்தில், சிவகங்கை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் கருணாஸ், எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்து, தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
