”எதிர்பாராததைத் தேட முடியாத ஒருவனால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், தெரிந்த வழி ஒரு முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது” – ஹெராகிளைட்டெஸ்
மக்கள் மனத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றி இடம்பெற்றுள்ள பிம்பம் இதுதான்: துணிகரமான, தடாலடியான இராணுவத் தளபதி; மற்ற அனைவரையும்விட உயர்ந்து நிற்பவர்; அமெரிக்காவை ஆக்கிரமித்திருந்த கொடுங்கோன்மையான ஆங்கிலேயரை ஓட ஓட விரட்டியடித்தவர். ஆனால் அது முழுக்க முழுக்க உண்மையல்ல. வாஷிங்டன் ஒரு கொரில்லா போராளி அல்ல. ஆனால் அவர் கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தார். அவர் ஒரு தந்திரக்காரராகவும், சூழ்ச்சிக்காரராகவும், பல நேரங்களில், போரிட மறுத்தவராகவும் இருந்தார்.
ஜார்ஜ் வாஷிங்டனின் படை சிறியதாகவும், சரியாகப் பயிற்றுவிக்கப்படாததாகவும், போர்த்தளவாடங்கள் குறைவாக இருந்த ஒன்றாகவும் இருந்தது. அவர் பெரும்பாலும் தற்காப்பு யுத்தத்திலேயே ஈடுபட்டார். ஆங்கிலேயரின் பெரும் படையை நேரடியாக எதிர்ப்பதை அவர் தவிர்த்தார். திடீரென்று வந்து தாக்கிவிட்டு ஓடிவிடுகின்ற உத்தியைத்தான் அவர் கடைபிடித்தார்.

தாங்கள் எங்கே தாக்கப்படலாம் என்று எதிரி அறிந்திருக்கிறானோ அந்த இடத்தில் தாக்க வேண்டாம் என்று வாஷிங்டன் தன் படைகளுக்கு அறிவுறுத்தினார். எதிரி எதிர்பார்த்திராத இடத்தில் தாங்கள் தாக்கினால் அவனுக்கு மரண அடி தரலாம் என்று அவர் எடுத்துரைத்தார். எந்தச் சிறிய தாக்குதல் பெரும் தாக்குதலைப்போலத் தோன்றும் என்பதை அவர் நன்கு அறிந்து வைத்திருந்தார்.
வாஷிங்டன், தாக்குவதைவிடப் பின்வாங்குவதில் வெற்றிகரமாகத் திகழ்ந்தார். அவர் ஒருபோதும் எதிரியின் வலைக்குள் சிக்கவே இல்லை. இந்த உத்தியின் மூலம் அவர் எதிரியை வெகுவாகக் களைப்புறச் செய்தார்.
பெரும்பாலும் இரண்டு நாடுகளின் படைகள் சண்டையிடும்போது அவை நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் என்பதுதான் நம்முடைய கற்பனையாக இருக்கிறது. வரலாற்றுப் புனைகதைகளும் திரைப்படங்களும் இக்கற்பனையை ஊட்டி வளர்த்துள்ளன. ஆனால் போர்கள் உண்மையில் அப்படி நடப்பதில்லை.
பழங்காலத்திலிருந்து நவீன காலம்வரை நடைபெற்றுள்ள 280 இராணுவ மோதல்களை ஆய்வு செய்த வரலாற்றியலாளர் பி.எச்.லிடல் ஹார்ட், அவற்றில் ஆறு சண்டைகளில் மட்டும்தான் நேரடி மோதல் வெற்றியைப் பெற்றுத் தந்தது என்பதைக் கண்டுபிடித்தார்.
6 நேரடி மோதல்களில் மட்டுமே வெற்றி! அது வெறும் 2 சதவீதம்தான்.
நேரடி மோதல்களில் இல்லையென்றால் வேறு எங்கிருந்து வெற்றி கிடைக்கிறது?
எதிரிகளின் பலவீனமான பகுதிகள் தாக்கப்படும்போது வெற்றி கிடைக்கிறது. எதிர்பாராத தாக்குதல்களில் வெற்றி கிடைக்கிறது. உளவியல்ரீதியாக எதிரியைத் தாக்கும்போது வெற்றி கிடைக்கிறது. எதிரியை அவனுடைய பாதுகாப்பு அரணிலிருந்து வெளியே வரவழைக்கின்றபோது வெற்றி கிடைக்கிறது. பாரம்பரியப் போர்முறையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புதுமையான முறையில் சண்டையிடும்போது வெற்றி கிடைக்கிறது.
ஒரு சவாலை எதிர்கொள்ளும்போது உடனடியாக உங்களுக்கு என்ன தோன்றும்? நேரடியாக எதிரியோடு மோத வேண்டும் என்று தோன்றுமா? அப்படியெனில், யுலிசீஸ் எப்படி விக்ஸ்பர்க்கைக் கடந்து சென்று எதிரியைப் பின்பக்கமாகத் தாக்கினார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
நாம் கற்றுக்குட்டிகளாக இருந்து, நாம் இறங்கவிருக்கின்ற தொழிலில் ஊறிப் போயுள்ளவர்களோடு நாம் போட்டி போட வேண்டுமென்றால், நேரடி மோதல் அங்கு சரிப்பட்டு வராது. அதனால் அதை முயன்று பார்ப்பது கூட மடத்தனம்தான்.
பணம் குறைவாக இருப்பது, பின்புறமாகச் சென்று தாக்குவது, எதிரியோடு ஒப்பிடும்போது வளவசதிகள் மிகவும் குறைவாக இருப்பது போன்றவை உங்களுக்குச் சாதகமற்றவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அவை வரப்பிரசாதமாக இருக்கலாம். அவை நம்மைப் படைப்புரீதியாகத் தூண்டலாம், மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க நமக்கு உத்வேகம் ஊட்டலாம், உங்களுடைய அகங்காரத்தைக் குறைக்கலாம்.
சில நேரங்களில் பெரும் ஆற்றலுடன் இருப்பது பலவீனத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கலாம் . நீங்கள் வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்கும்போது, சிறந்த உத்திகளை உருவாக்குவது உண்மையிலேயே சிரமமாகத்தான் இருக்கும். சாதகமான அளவை அல்லது வலிமையை அல்லது அதிகாரத்தைக் கொண்டிருக்கின்ற மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் செயல்முறையைக் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. அது அவர்களுக்கு ஒரு கட்டம்வரை வேலை செய்கிறது. புதிதாக ஒருவர் சிறிய அளவில் களத்தில் இறங்கும்வரை அவர்களுக்குப் பிரச்சனைகள் எதுவும் வருவதில்லை. ஏனெனில், அப்புதியவர்கள் நேருக்கு நேர் மோதுவதைத் தவிர்த்துவிடுகின்றனர்.
ஆனால், நம்மை ஒருவர் தள்ளிவிடும்போது, அவரைத் திருப்பித் தள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய இயல்பான உணர்வாக இருக்கும். ஆனால் அந்த உள்ளுணர்வை அலட்சியம் செய்ய வேண்டும் என்று தற்காப்புக் கலைகள் நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன. ஒருவர் உங்களைத் தள்ளிக் கொண்டிருக்கும்போது, பதிலுக்கு அவரைப் பின்னுக்குத் தள்ளாமல், நீங்கள் பின்னுக்கு நகர்ந்து அவரை நிலைகுலைய வைப்பதுதான் நல்ல உத்தி, பின் நாம் அவரை நோக்கிப் பாயலாம்.
பக்கவாட்டுக் கதவு அல்லது பின்கதவு வழியாக நுழைகின்ற உத்தி, போர்களுக்கும் வணிகத்திற்கும் விற்பனைக்கும் மட்டுமே பொருந்துகின்ற ஒன்றல்ல.
மாபெரும் தத்துவவியலாளரான சோரன் கீர்கேகார்டு ஒரு விஷயத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்குத் தன்னுடைய விவாதத் திறமையைப் பயன்படுத்த விரும்பியதில்லை. மாறாக, அவர் வேறொரு முறையைக் கடைபிடித்தார். அதை ‘மறைமுகமான தகவல் பரிமாற்றம் என்று அவர் அழைத்தார். அவர் பல புனைபெயர்களில் தன் கருத்துகளைப் பல கோணங்களில் சுவாரசியமாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதினார். நீங்கள் இப்படிச் செய்ய வேண்டும் என்றோ அல்லது இப்படி யோசிக்க வேண்டும் என்றோ அவர் கூறியதில்லை. உலகத்தைப் பார்க்கவும் அதைப் புரிந்து கொள்ளவும் அவர் புதிய வழிகளைக் காட்டினார்.
மக்கள் நீண்டகாலமாக உறுதியாகப் பற்றி வந்துள்ள அபிப்பிராயங்களுக்கு சவால்விடுவதன் மூலம் அவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவர முடியாது. உங்களுக்கு இடையே இருக்கின்ற பொதுவான அம்சங்கள் எவையென்று கண்டுபிடித்து, நீங்கள் அங்கிருந்து தொடங்க வேண்டும். அல்லது ஒரு மாற்றைக் கண்டுபிடித்து, அதற்கு ஏராளமான ஆதரவைத் திரட்டி, இறுதியில் எதிராளியை உங்களுடைய அணிக்கு வரவழைக்க முயற்சி செய்யலாம்.
இப்படிப்பட்ட வழிகள் சில சமயங்களில் உங்களுக்குப் பெருமித உணர்வைக் கொடுக்காமல் போகக்கூடும். நீங்கள் குறுக்கு வழியில் பயணிப்பதுபோலவும் நியாயமற்று நடந்து கொள்வதுபோலவும்கூட உங்களுக்குத் தோன்றக்கூடும். உங்களுடைய போட்டியாளர்களுக்கு நிகராக நீங்களும் காய்களை நகர்த்துகின்றபோது, சில சமயங்களில் நீங்கள் மேற்கொள்கின்ற காரியங்கள் ஒரு ஏமாற்று வேலைபோலத் தோன்றக்கூடும். ஆனால் அதை அப்படி எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உங்களுக்கு நீங்களே கசையடி கொடுத்துக் கொள்ளவோ அல்லது குற்றவுணர்வால் கூனிக்குறுகவோ தேவையில்லை.
நீங்கள் ஓர் உத்தியாளரைப்போலச் செயல்படுகிறீர்கள். அவ்வளவுதான். நீங்கள் உங்கள் அதிகாரத்தைக் காட்டுவதற்காக அதைச் செய்யவில்லை. உங்களுடைய அகங்காரத்தைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காக நீங்கள் இதில் குதிக்கவில்லை.
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இது ஒரு கடினமான வழிதான். அதனால்தான் இது வேலை செய்கிறது.
சில சமயங்களில், சுற்றுவழியே நீங்கள் உங்களுடைய வீட்டை விரைவில் அடைவதற்கான வழியாக அமையக்கூடும்.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எது சரியோ அதுவே பலனளிக்கிறது – ரயன் ஹாலிடே


