spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எது சரியோ அதுவே பலனளிக்கிறது - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எது சரியோ அதுவே பலனளிக்கிறது – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”வெள்ளரிக்காய் கசக்கிறது என்றால், அதைத் தூக்கியெறிந்துவிடுங்கள். நீங்கள் செல்கின்ற பாதையில் முட்கள் இருந்தால், சுற்றிச் செல்லுங்கள். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அது மட்டும்தான்” – மார்கஸ் ஆரீலியஸ்தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - எது சரியோ அதுவே பலனளிக்கிறது - ரயன் ஹாலிடே1915ல் மத்திய அமெரிக்காவின் அடர்ந்த காடுகளுக்குள் தொலைதூரத்தில், இரண்டு அமெரிக்கப் பழச்சாறு நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி உச்சகட்டத்தை அடைந்திருந்தது. இரண்டு நிறுவனங்களும் ஒரே ஐயாயிரம் ஏக்கர் நிலத்தை வாங்க மல்லுக்கு நின்று கொண்டிருந்தன.

பிரச்சனை இதுதான். அந்த நிலத்திற்கு இரண்டு உள்ளூர் குழுக்கள் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருந்தன. கவுதமாலா நாட்டிற்கும் ஹோன்டுராஸ் நாட்டிற்கும் இடையில், அவ்விரண்டு நாடுகளுக்கும் சொந்தமாக இல்லாதிருந்த ஒரு பகுதியில் அந்த நிலம் இருந்தது. அந்த இருவரில் யார் அதற்கான உண்மையான உடமையாளர்கள் என்பதை அந்த இரு அமெரிக்க நிறுவனங்களால் நிரூபிக்க முடியவில்லை.

we-r-hiring

ஆனால் அப்பிரச்சனையை அந்த இரு நிறுவனங்களும் கையாண்ட முறை அவற்றின் நெறிமுறையைப் பறைசாற்றியது. அதில் ஒரு நிறுவனம் பெரியது, அதிகாரமிக்கது. மற்றொன்று சிறியது, ஆனால் தந்திரமானது.

முதல் நிறுவனம் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய நிறுவனமான யுனைட்டெட் ஃபுரூட்ஸ். இரண்டாவது நிறுவனம் அப்போதுதான் தொடங்கப்பட்டிருந்தது. அதன் உரிமையாளரின் பெயர் சாமுவேல் செம்மூரே.

பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, யுனைட்டெட் ஃபுரூட்ஸ் நிறுவனம், ஒரு பெரிய சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் குழு ஒன்றை நியமித்தது. தாங்கள் வெற்றி பெற அந்நிறுவனத்தினர் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருந்தனர்.

ஆனால் சிறிய நிறுவனத்தின் சொந்தக்காரராக இருந்த சாமுவேல் பெரிதாகப் படித்தவர் அல்ல. அப்பெரிய நிறுவனத்துடன் தன்னால் போட்டி போட முடியாது என்பதைக் கண்டுகொண்ட அவர், அந்த இரண்டு உள்ளூர்க் குழுவினரிடமும் சென்று, அவர்களுக்குத் தனித்தனியாகப் பணம் கொடுத்து அந்த ஐயாயிரம் ஏக்கர் நிலத்தை வாங்கிவிட்டார். அவர் அதற்காக இரண்டு மடங்கு விலை கொடுத்திருந்தாா் என்பது  உண்மைதான். ஆனால் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருந்தார். நிலம் அவருக்குச் சொந்தமாகியிருந்தது. விதிமுறைகளை வீசியெறியுங்கள், பிரச்சனையைத் தீருங்கள் என்பதே அவருடைய தாரக மந்திரமாக இருந்தது.

சாமுவேல் தடைகளை எப்போதும் இந்த வழியில்தான் கையாண்டார். அவர் தன் தொழில் தொடர்பாக ஓர் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்ட முயன்றார். ஆனால் அவருடைய போட்டி நிறுவனமான யுனைட்டெட் ஃபுரூட்ஸ் நிறுவனம், அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து, பாலம் கட்டுவதைச் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆக்கியது. சாமுவேல் தன் பொறியாளர்களைக் கொண்டு, ஆற்றின் இரு கரைகளிலிருந்தும் ஆற்றின் நடுப்பகுதிவரை, இரயில்கள் ஓடக்கூடிய விதத்தில் இரண்டு நீண்ட பாதைகளை அமைத்தார். பின் அவற்றை இணைக்கின்ற தற்காலிக அமைப்பு ஒன்றை ஒரு பக்கம் நிறுவினார். தேவையானபோது அவற்றை இணைத்தால் அது ஒரு பாலம்போல ஆகிவிடும். இதற்கு யுனைட்டெட் ஃபுரூட்ஸ் நிறுவனம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, சாமுவேல், “இது ஒரு பாலமல்ல. படகுகள் ஒதுங்கிக் கொள்வதற்கான பாதைகள்,“ என்று கூறி அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

விஷயங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும், விதிமுறைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பற்றியும் யோசிப்பதற்கு நாம் ஏராளமான நேரத்தைச்  செலவிடுகிறோம், அனைத்தையும் கச்சிதமாகச் செய்ய விழைகிறோம். சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தவுடன் நாம் அதைத் தொடங்கிவிடலாம் என்று நமக்கு நாமே கூறிக் கொள்கிறோம். அல்லது ஏதோ ஒன்று நம்பகமானது என்பது உறுதியாகத் தெரிந்தவுடன் நம் வேலையைத் தொடங்கினால் எல்லாம் வேகமாக நகரும் என்று நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்கிறோம். ஆனால் தற்போது கையில் என்ன இருக்கிறதோ அதை வைத்துக் கொண்டு தொடங்குவதுதான் நல்லது. செயல்முறைகள்மீது அல்லாமல் விளைவுகள்மீது நாம் நம்முடைய கவனத்தைக் குவிக்க வேண்டும்.

சாமுவேல் ஒருபோதும் தன்னுடைய இலக்கிலிருந்து தன் பார்வையை அகற்றவில்லை. அவருடைய இலக்கு, தான் வாங்கியிருந்த வாழைப்பழங்களை ஆற்றின் மறுகரைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான். அவை ஒரு பாலத்தின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டாலும் சரி, அல்லது ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அமைப்பின் வழியாகக் கொண்டு செல்லப்பட்டாலும் சரி, அதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. வாழைப்பழச் சாகுபடியில் இறங்குவதற்கு அவருக்கு தேவைப்பட்டபோது, அந்த நிலத்திற்கு யார் உண்மையான ஒரு நிலம் உரிமையாளர் என்று அவர் கவலைப்படவில்லை. சட்டப்படி அவர் அந்த நிலத்தின் உரிமையாளராக ஆக விரும்பினார், அவ்வளவுதான்.

உங்களுக்கும் ஓர் இலக்கு இருக்கலாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சூழ்நிலை நீங்கள் நினைத்ததுபோல இல்லை என்கிறபோது, நீங்கள் அதற்காக எந்த அளவு முயற்சி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?

குறை கூறுவதை நிறுத்துங்கள். பயத்திற்கு அடிபணிய மறுத்துவிடுங்கள். இப்பிரச்சனையை எவ்வாறு தீர்க்கப் போகிறீர்கள் என்று சிந்தியுங்கள். உங்களைத் தடுத்துக் கொண்டிருக்கின்ற விதிமுறைகளின் பிடியில் சிக்காமல் எப்படி முன்னே செல்வதென்று யோசியுங்கள்.

ஒருவேளை, உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்ற அளவுக்கு நீங்கள் இன்னும் அதிகத் தந்திரமாக நடந்து கொள்ள வேண்டியிருக்கலாம். அதற்கு, காலாவதியான சில விதிமுறைகளை நீங்கள் மீற வேண்டியிருக்கலாம். பின்னர் அதற்காக மன்னிப்புக்கூடக் கேட்டுக் கொள்ளலாம். உங்களிடம் ஒரு முக்கியமான இலட்சியம் இருந்தால், அதை அடைவதுதான் மற்ற அனைத்தையும்விட முக்கியம்.

பின்னாளில் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய ரிச்சர்டு ரைட், ஓர் இருபத்தொரு வயது இளைஞராக இருந்தபோது, பரம ஏழையாக இருந்தார். அவர் ஒரு கறுப்பரும்கூட. தன்னுடைய நிலைமையை மேம்படுத்திக் கொள்வதற்குத் தன்னால் முடிந்த அளவு படிக்க வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். ஆனால் அவர் வாழ்ந்து வந்த சமயத்தில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பர்களால் நூலகங்களில் உறுப்பினர்களாக ஆக முடியாத நிலைமை இருந்தது. அதனால் அவர் வேறு ஒருவருடைய நூலக உறுப்பினர் அட்டையைத் திருடி, அந்த நபருக்குப் புத்தகம் எடுத்துச் செல்வதுபோல நடித்துப் புத்தகங்களைப் பெற்றுப் படித்து வந்தார்.

சூழல் உங்களுக்குச் சாதகமாக இல்லாமலிருந்து, நீங்கள் ஒரு பெரிய இலட்சியத்தைச் சாதிக்க விரும்பினால், விதிமுறைகளை வளைக்க அல்லது வித்தியாசமாக எதையாவது செய்யத் தயாராக இருக்க வேண்டும். அது, “என்ன? பாலமா? நான் கட்டினேனா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிகாரிகளின் முகத்திற்கு நேராகக் கூறுவதாக இருக்கலாம். அல்லது திருட்டு நூலக அட்டையில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதாக இருக்கலாம். அல்லது பாரபட்சமான விதிமுறைகளைக் காட்டி உங்களைக் கீழே தள்ளித் தரையோடு தரையாக நசுக்க விரும்புபவர்களிடம், “போடா, உன்னால் ஆனதைப் பார்!” என்று வீராப்பாகக் கத்துவதாக இருக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்வதற்குப் பல பாதைகள் இருக்கலாம். அது ஒரு நேர்க்கோட்டில் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் தோ்ந்ததெடுக்கின்ற வழி உங்களை அங்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் முக்கியம். ஆனால் நம்மில் பலர் ஒரு செம்மையான தீர்வுக்காகப் பல காலம் காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கிடையே பல நல்ல வாய்ப்புகள் நம்மைக் கடந்து செல்வதை நம்மால் கவனிக்க முடியாமல் போய்விடுகிறது.

டெங் சியாவோப்பிங் ஒரு முறை, “பூனை கருப்பா அல்லது  வெள்ளையா என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை  – அது எலியைப் பிடித்துக் எனக்கு கொண்டிருக்கும்வரை!’ என்று கூறினார்.

நீங்கள் எதிர்பார்க்கின்ற கச்சிதத்தை நீங்கள் ஒருபோதும் கண்டறியப் போவதில்லை. அதனால் உங்களிடம் இப்போது என்ன இருக்கிறதோ அதைக் கொண்டு உங்களால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்படுங்கள் முதல் ஐபோன் புரட்சிகரமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு விஷயத்தைக் கத்தரித்து மற்றோர் இடத்தில் ஒட்டுவது போன்ற சில முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருக்கவில்லை. கச்சிதத்தின் மொத்த உருவமாக விளங்கிய ஸ்டீவ் ஜாப்ஸே சில நேரங்களில் வளைந்து கொடுத்துப் போக வேண்டியிருந்தது.

ஒரு புரட்சிகரமான எதார்த்தவாதியைப்போலச் சிந்திக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் உங்களுடைய இலட்சியங்களை நீங்கள் விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. நீங்கள் உங்களுடைய சிந்தனையைக் குறுக்கிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் எது இன்றியமையாதது என்பதற்கும், எது கூடுதல் அனுகூலம் அளிக்கவல்லது என்பதற்கும் இடையேயான வேறுபாட்டை உணர்ந்திருங்கள்.

கச்சிதத்தைப் பற்றிச் சிந்திக்காதீர்கள், முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.

இப்படிப்பட்ட அணுகுமுறையின் ஆற்றலில் முட்டுக்கட்டைகள் முறிந்து போகும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் வேலையைச் செய்யுங்கள், அதைச் செவ்வனே செய்யுங்கள் – ரயன் ஹாலிடே

MUST READ