2026 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு செல்லாமல் பிரிப்பது தான் விஜய்க்கு, பாஜக கொடுத்துள்ள அஜெண்டா என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் டெல்லி பயணம் குறித்து தவெக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- ஸ்டாலின் டெல்லி சென்றதன் மூலம் திமுக – பாஜக இடையே மறைமுக கூட்டணி உள்ளதை உறுதிபடுத்தி உள்ளதாக தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் டெல்லிக்கு போனதே சுப்ரீம் கோர்ட்டில் தடை வாங்கிய பிறகுதான். அதன் பிறகு தான் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த பயணம் காரணமாக பாஜக உச்ச நீதிமன்றத்தில் திமுகவுக்கு ஆதரவாக மூவ் செய்ததா?
ஆனால் விஜய் சொல்வதில் ஒரு உண்மை உள்ளது. பாஜக எப்போதும் நேரடி கூட்டணி உடன் மட்டும் தேர்தலை சந்தித்தது கிடையாது. ஆசாதுதீன் ஓவைசி என்கிற இஸ்லாமிய தலைவரை வாக்குகளை பிரிப்பதற்காக பயன்படுத்தும். முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரசுக்கு செல்லாமல் தடுக்க அவரை பயன்படுத்தும். அதேபோல் தலித் வாக்குகளை விழாமல் தடுக்க ராம்தாஸ் அத்வாலே, சிராக் பாஸ்வான், மாயாவதி போன்ற தலைவர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி வைத்துள்ளனர். விஜய் சொல்வது போல பாஜக மறைமுக கூட்டணி வைத்திருப்பது உண்மைதான். ஆனால் அந்த மறைமுக கூட்டணி திமுக அல்ல. தவெக.
விஜய், பிறப்பிலேயே ஒரு கிறிஸ்தவர். அதிமுகவின் வெற்றிக்காக அணிலாக உழைத்துள்ளேன் என்று ஏற்கனவே சொல்லியுள்ளார். ஜெயலலிதா முன்பாக கையை கட்டிக்கொண்டு நின்றுள்ளார். நரேந்திர மோடியை நேரில் சென்று சந்தித்துள்ளார். விஜய், அரசியல் எண்ணம் கொண்ட ஒரு நபர் ஆவார். பகல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. அதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக விஜய் ஏதாவது கருத்து சொல்லியுள்ளாரா? பாஜகவுக்கு எதிராக செயல்படுவதாக சொல்லுகிற விஜய், ஆபரேஷன் சிந்தூர் குறித்து சந்தேகம் எழுப்பாதது ஏன்?
வக்பு சட்டத்திற்கு எதிராக விஜய் வழக்கு தொடர்ந்து, ஒரு வழக்கறிஞரை நியமிக்கிறார்கள். அபிஷேக் மனு சிங்வியை நியமித்துள்ளதாக ஆதவ் அர்ஜுன் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார். திமுக இந்த விவகாரத்தில் இன்னும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு போட்டு தடையே வந்துவிட்டது. இவர்கள் மனு எண்ணிடப் படவே இல்லை. அதனை தொடர்ந்து எழும்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் திமுகவுக்கு எதிராக கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதற்கு பின்னர் விஜயிடம் இருந்து இந்த அறிக்கை வருகிறது.
இவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து பாருங்கள். நாட்டில் நடைபெறுகிற பகல்காம் போன்ற பெரிய தாக்குதல் சம்பவங்களுக்கு பதில் அளிப்பது கிடையாது. அதன் பிறகு வக்பு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்தோம் என ஆதவ் அர்ஜுனா மூலம் செய்தியாளர் சந்திப்பு. அதன் பிறகு முஸ்தபா என்பவர் மூலம் கருத்தரங்கம் ஏற்பாடு செய்கிறார். காவல் துறை அந்த கருத்தரங்கிற்கு அனுமதி தரவில்லை. இன்னும் 10 நாட்களில் அந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. அதன் பிறகு விஜய், பாஜக – திமுக கள்ளக்கூட்டணி என்று அறிக்கை விடுகிறார். அதிமுகவுக்கு முஸ்லிம்கள் ஏன் வாக்களிக்கவில்லை? என்றால் அதிமுக – பாஜக கள்ளக்கூட்டணி என்பதால்தான். அவர்கள் பின்னால் எஸ்டிபிஐ கட்சி தான் போனது. மற்ற இஸ்லாமிய கட்சிகள் செல்ல வில்லை. ஆனால் தற்போது விஜய் இப்தார் நோன்பு ஏற்பாடு செய்வது. கலீமா சொல்வது. அதற்கு பிறகு வக்பு கருத்தரங்கம் நடத்துவது. இதன் மூலம் பிறப்பால் ஜோசப் விஜயாக இருந்தவர், தற்போது விஜய் அப்துல்லாவாக மாறிவிட்டார். இது ஏன் என்றால்? அஜெண்டாவை செட் செய்வது பாஜக ஆகும்.
பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவ முடியாததற்கு சில விஷயங்கள் உள்ளன. அவற்றில் தமிழ் உணர்வு, தமிழ் தேசிய விவகாரங்கள் போன்றவை திமுகவில் வலிமையாக உள்ளது. திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களும் உறுதியாக உள்ளனர். அந்த தமிழை காலி செய்வதற்கு அண்ணன் சீமான். அவருக்கு ஒரு அஜெண்டா. 200 கோடி வாங்கிக்கொண்டு தனித்து போட்டியிடுங்கள் என்பது சீமானுக்கு கொடுக்கப்பட்ட அஜெண்டாவாகும். விஜய், பிறப்பால் கிறிஸ்தவர். அவருக்கு கிறிஸ்தவர்கள் வாக்குகள் எல்லாம் விழும். 11 சதவீத சிறுபான்மை வாக்குகளில் ரோமன் கத்தோலிக்கர்களின் வாக்குகள் குறிப்பிடத்தக்க அளவு ஆகும். மற்றொன்று இஸ்லாமிய சிறுபான்மையினரின் வாக்குகளை அவர் பெற வேண்டும். அப்போது முஸ்லிம்களின் வாக்குகள் சுட்டுப் போட்டாலும் அதிமுக – பாஜக கூட்டணிக்கு விழாது. அதே நேரத்தில் அந்த வாக்குகள் திமுக கூட்டணிக்கும் விழாமல் தடுக்க வேண்டும். இதுதான் அவர்களுடைய அஜெண்டா ஆகும்.
அதற்காக ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசாமல் வக்பு பற்றி பேசுகிறார். தமிழ்நாட்டில் 30 சதவீதம் வரை உள்ள தெலுங்கு வாக்காளர்களை கவருவதற்காக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணை அழைத்து வருகிறார்கள். அதேபோல் இஸ்லாமியர்களை கவர விஜயை வைத்து முயற்சிக்கிறார்கள். அவர் தேர்தல் அரசியலில் வேறு எந்த ரோலுக்கும் செட் ஆக மாட்டார். நாகையில் அவர் போட்டியிட உள்ளதாக சொல்கிறார்கள். விஜயின் இந்த நடவடிக்கைகள் காரணமாக சிறுபான்மை மக்கள் டிஸ்டர்ப் ஆகவே மாட்டார்கள். எடப்பாடி உடன் எஸ்டிபிஐ கட்சி நின்றது. யாரும் அவர்களை திரும்பி பார்க்கக்கூட இல்லை.
விஜய் ஒரு வருமான வரித்துறையின அடிமை ஆவார். ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிறார். 100 கோடி ரூபாய் கருப்பு பணமாகும். அவற்றை மேனேஜ் செய்பவர் ஆடிட்டர் வெங்கட்ராமன். அவர் ஒரு ஆர்எஸ்எஸ்-காரர் ஆவார். அதன் பிறகு புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள். புஸ்ஸி ஆனந்த் ரெங்கசாமியின் ஆள் ஆவார். ஐஆர்எஸ் அதிகாரி ஒரு தவெகவின் பொதுச்செயலாளர் ஆக போகிறார். அவரும் பாஜக உடன் தொடர்புடைய நபராவார். விஜயின் பயணம் முழுக்கவே, அவர் தன்னை காப்பாற்றி கொள்வதற்கானது தான் உள்ளது.
பிரிட்டோ 5 ஆயிரம் லாரிகள் வைத்துள்ளார் என்றால், அவருக்கு மத்திய அரசின் அழுத்தம் அதிகம் உள்ளது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் விஜய் சினிமாவை முடித்துவிட்டு வருகிறார் என்று. அவர் சினிமாவை முடிக்கவே இல்லை. அவர் அடுத்த படத்திற்கு கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். நெல்சன் உள்ளிட்ட 2, 3 பேரிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். வாழ்நாள் முழுக்க அவர் ஒரு நடிகர்தான். அவர் அரசியலுக்கு வருவதாக இருந்தால் 2024 மக்களவை தேர்தலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அவர் வரவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.