கூட்டணி தொடர்பான பாஜகவின் நிபந்தனைகளை எடப்பாடி பழனிசாமி நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்றும், அவருக்கு வேறு வாய்ப்பு இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி மற்றும் செங்கோட்டையன் கலகத்தின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை தொடர்ந்து செங்போட்டையன் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொள்கிறார். அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. செங்கோட்டையன் எந்த காலத்திலும் கலகம் செய்தவரும் அல்ல. புரட்சி செய்தவரும் அல்ல. 2011 அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்டது புரட்சி கிடையாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது பெரிய சாதனை எதையும் படைக்கவில்லை. 2017ல் யார் முதலமைச்சர் என்கிற கணக்குகள் வருகிறபோது செங்கோட்டையன் சீனியர். அவரை கொண்டுவரலாம் என்று முயற்சித்தனர். ஆனால் அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபடவில்லை. மீண்டும் ஓபிஎஸ் போன்ற ஒரு நபரை கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவது என்ன நியாயம்? இதனால் அதிமுக – பாஜக தொண்டர்கள் இணக்கமாக செயல்படுவார்களா?
மகாராஷ்டிராவை போன்று தமிழ்நாடு கிடையாது. தமிழ்நாட்டில் திமுகவை, அதிமுகவை வீழ்த்த வேண்டும். பாஜக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது எடுபடவே எடுபடாது. அதை உணர்ந்திருந்தும் திருந்தாமல், மீண்டும் செங்கோட்டையனை கையில் எடுத்துக்கொண்டு அவரை கூப்பிட்டு கூப்பிட்டு பேசுகிறார்கள். செங்கோட்டையனை 2வது முறை அழைத்தது என்பது, எடப்பாடி பழனிசாமி சில நிபந்தனைகளை ஒத்துக்கொள்ளவில்லை. அவரை சமாதானப் படுத்துவதற்காக தான் கூப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. அப்போது தான் ஒரு கலகம் செய்யும் நபராக உருவெடுத்துவிட்டேன் என்று சொல்லியதால், சரி ஒய் பிரிவு பாதுகாப்பு வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டனர்.
செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது மவுனமே ஒரு பெரிய செய்தி என்று சொல்கிறார். அவர் ஒரு விஷயத்தை தெளிவு படுத்த வேண்டும். தான் கட்சிக்கும், தலைமைக்கும் விசுவாசமாக இருப்பேன். டெல்லிக்கு இதற்காக போனேன் என்று சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தனது பெயரை பயன்படுத்தி ஊடகங்கள் அரசியல் செய்கின்றன என்று விளக்கம் அளிக்க வேண்டும். மவுனமே நன்மைக்கு என்று சொன்னால் எதற்காக டெல்லி போகிறீர்கள். கட்சியை பொதுச்செயலாளர் போய் தமிழ்நாட்டின் பிரச்சினைகளை சொல்லிவிட்டு வந்த பிறகு, நீங்கள் எதற்காக போனீர்கள் என்று சொல்ல வேண்டாமா? பொய்யாக கூட ஏதாவது காரணத்தை சொல்ல சமாளித்துவிடலாம். ஆனால் எதற்காக இப்படி அவசியமின்றி பிரச்சினைகளுக்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள்.
எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கு உள்ளுக்குள் எப்போதும் உரசல் இருந்துகொண்டே தான் இருக்கும். இருவரும் அருகருகே உள்ள மாவட்டம். செங்கோட்டையன், தனது அருகில் உள்ளவர்கள் அமைச்சர்கள் ஆனால் அவர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலை ஏற்படும் என்று கருதுபவர். இதனால் பலரை சிக்கலில் ஆழ்த்தியுள்ளார். ஈரோட்டில் 2 பேருக்கு கட்சி பதவி கொடுத்துவிட்டார். கட்சியில் மூத்தவரான செங்கோட்டையன் குறைந்தபட்சம், இது தொடர்பாக எடப்பாடியிடம் பேசி இருந்தால் பிரச்சினை சரியாகி இருக்கும். அமித்ஷாவின், அனைத்து கோரிக்கைகளையும் எடப்பாடி ஏற்றுக்கொண்டால் செங்கோட்டையன் என்ன ஆவார்? தேர்தலுக்கு 10 மாதங்களுக்கு முன்னதாக ஏன் அதிமுக – பாஜக கூட்டணி சேர்கிறார்கள் என்றால், இரு கட்சி தொண்டர்களும் இணக்கமாக செயல்படுவதற்காக தான். எடப்பாடி ஏன் தள்ளி போகினார் என்றால், அவர் எதிர்பார்த்தது விஜய். இந்த விஷயம் பாஜகவுக்கு தெரியவந்ததால் எடப்பாடியின் உறவினர் வீட்டில் நடைபெற்ற சோதனையை வைத்து கூப்பிட்டு பார்த்தார்கள். சரியாக வரவில்லை. அதன் பிறகும் செங்கோட்டையன் 2 முறை நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார். இதன் பிறகு தங்கமணி அழைக்கப்படுகிறார்.
அப்போது தான் எடப்பாடி உஷராகிறார். தொடர்ச்சியாக நமக்கு கருத்து வேறுபாடு இருக்கிற முன்னாள் அமைச்சர்களை வைத்து நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று அவரே சரணடைந்தார். ஆனால் அவர்கள் வைத்த சீட்டுகளை அவரால் உறுதி சொல்ல முடியவில்லை. 100 இடங்களை பாஜகவினர் கேட்டனர். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்களை சேர்க்க மாட்டீர்கள். அதனால் 100 கொடுங்கள் என்று சொல்கிறார். அது கட்சியை கபளிகரம் செய்யும் முயற்சி என்று புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி கால அவகாசம் கேட்டுள்ளார். அதனால்தான் அமித்ஷா என்.டி.ஏ கூட்டணி அமையும் என்று அமித்ஷா சொன்னபோது அது அவருடைய கருத்து என்று சொன்னார். அதனால் தான் செங்கோட்டையனை மீண்டும் அழைக்கிறார்கள். அதிமுக என்ற கட்சியை வைத்து தமிழ்நாட்டிற்குள் கால் பதிக்க வேண்டும். அது மோடி இருக்கும்போதே நடைபெற வேண்டும். பாஜக எந்த உருவத்தில் வந்தாலும் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்வார்களா? கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 100 நாள் வேலைத்திட்டத்தில் 39 ஆயிரம் கோடி ஊழல் உள்ளது என்று சொல்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி யோசிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும் என்றுதான் சொல்கிறார்.
பாஜக – அதிமுக கூட்டணி அதிமுகவுக்கு பயனளிக்குமா? என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டும் என்றால் இந்த கூட்டணி பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு நெருக்கடி உள்ளது. 2021லேயே எடப்பாடி பாஜக கூட்டணி வேண்டாம் என்று இருந்திருக்கலாம். ஆனால் அன்றைய தினம் சின்னத்தை முடக்கி இம்சை கொடுத்ததால் கூட்டணிக்கு போய்விட்டார். 2024ல் அவர் பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்ததற்கு காரணம் மத்தியில் காங்கிரஸ் கட்சி வரும் என்று கூட அவர் எதிர்பார்த்து இருக்கலாம். அதனால்தான் இந்த தேர்தல் அல்ல எந்த தேர்தலிலும் கூட்டணி இல்லை என்று சொன்னார். அதன் விளைவு என்னவாகியது என்றால் பாஜக ஆட்சிக்கு வந்துவிட்டது. மீண்டும் சின்னம் பிரச்சினை. தனது உறவினர்கள் மீது உள்ள வழக்குகள் பிரச்சினை. அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை.
திமுகவை எதிர்க்கிற வலிமையான ஒரு கட்சி அதிமுக. ஓபிஎஸ் பிரச்சினையை எடப்பாடியே தீர்த்து கொண்டிருக்க முடியும். அதை சமயோஜிதமாக பேசி தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் மீண்டும் மீண்டும் துரோகி என்கிறார். தென் மாவட்டங்களில் உங்களுக்கு வலிமையான வாக்கு வங்கியை காட்டி விட்டால், ஏன் உங்களை மிரட்ட போகிறார்கள். பிளவு என்கிற அடிப்படையில் தான் பாஜக உள்ளே வருகிறது. முதலில் கட்சியை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஏன் பஞ்சாயத்து செய்ய வேண்டும். இது அடிப்படையிலேயே தவறு அல்லவா? கேட்டால் நாங்கள் தான் பிளவு படுத்தினோம். நாங்கள் சேர்த்து வைத்து பரிகாரம் செய்கிறோம் என்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வழியில்லை. அவர் பாஜகவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்வார். இதற்கு மேல் அவருக்கு போராட எதுவும் இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.