ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்கும் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அவருடைய நிலைப்பாட்டை பாஜகவும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா உடனான எடப்பாடி பழனிசாமியின் சந்திபபு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- பாஜக – அதிமுக கூட்டணிக்கு இனி எதற்காக முகமூடி? தேவைப்படுகிறது. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றிக்கொடுத்த பாஜகவுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக சொல்கிறார். தலைமை கழகத்தை அடித்து நொறுக்கிய ஓபிஎஸ்-ஐ எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? என கேட்கிறார். எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் ஓபிஸ் தலைமையிலான அணி வாக்கு அளித்தது. ஆனால் பாஜகவின் ஏற்பாட்டில் அதை எல்லாம் மறந்து, மன்னித்து கட்சியில் சேர்த்துக் கொண்டார்கள். ஓபிஎஸ், துணை முதல்வராகவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஆகவும் ஆகினார். அது குற்றமா? அல்லது தலைமை கழகத்தை சேதப்படுத்தியது பெரும் குற்றமா? என்னை பொருத்தவரை அதிமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் வாக்களித்தது தான் மிகப்பெரிய துரோகமாகும்.


எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வசதிக்கு ஏற்ப பேசுகிறார். அதிமுக – பாஜக கூட்டணியால், திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது. அதற்கு காரணம் அவர்களிடம் 45 சதவீதம் வாக்குகள் உள்ளன. விஜய் போர்சாக வருகிறார். அதனால் திமுக எதிர்ப்பு வாக்கு வங்கி பிளவு படுகிறது. அப்போது இயல்பாகவே திமுகவுக்கு சாதகமான நிலைமை உள்ளது. அதிமுகவில் பிரிந்தவர்களை சேர்க்க முடியாது என்று எப்பாடி சொல்லி வருகிறார். அப்போது அதிமுக இன்னும் பலவீனம் அடையும். எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன். பாஜக உடன் கூட்டணி என்பதில் தெளிவாக உள்ளார். பாஜகவும், கிட்டதட்ட அந்த நிலைப் பாட்டிற்கு போய் விட்டதாகவே தோன்றுகிறது. தங்களை நம்பி இருந்த ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களை கைவிட்டு விட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

பாஜகவில் எடப்பாடி பழனிசாமியை பெரிய அளவுக்கு எதிர்த்தவர் அண்ணாமலை. ஆனால் இன்றைக்கு அவர் பம்மிவிட்டார். அப்போது அதிமுக உடன் கூட்டணி. எடப்பாடி பழனிசாமிதான் கூட்டணியின் தலைவர். இதுகுறித்து யாரும் பேசக்கூடாது என்று மறைமுகமாக அவர்கள் உணர்த்திவிட்டார்கள். பாஜக மையக் கமிட்டி கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெறும் தினத்தன்று டெல்லியில் எடப்பாடி பழனிசாமி அழைத்து பேசுவதன் மூலமாக அந்த செய்தியை திருப்பி திருப்பி சொல்லியாகிவிட்டது. அடுத்தபடியாக திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஒரே அணியில் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது சாத்தியம் இல்லை. விஜய்க்கான வாய்ப்பு என்பது எந்த அணியிலும் இடம் கிடைக்காத சிறிய சிறிய கட்சிகள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அது திமுக எதிர்ப்பு வாக்கு வங்கியாகும்.
எடப்பாடி – அமித்ஷா விரும்புவது போல திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லாம் ஓரணிக்கு வர வேண்டும் என்றால், எடப்பாடியை முதலமைச்சராக்க நாங்கள் பாடு பட வேண்டுமா? என கேள்வி எழுப்புவார்கள். எடப்பாடியை முதல்வராக்க பாஜகவே பாடுபடவில்லை. எடப்பாடி தான் முதலமைச்சர் என்று நயினாரும் சொல்லவில்லை. அமித்ஷாவும் சொல்லவில்லை. அதிமுகவில் இருந்து ஒருவர் என்று தான் சொன்னார். அவர்களே தெளிவாக சொல்லாத போது, பிற கட்சிகள் அல்லது அதிமுகவில் உள்ள அதிருப்தியாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, திமுக அரசு வரக்கூடாது என்பதற்காக தங்களுடைய அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கி விடுவார்களா? இது என்ன மாதிரியான கற்பனை.

திமுக முப்பெரும் விழாவை ஏன் கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான கரூருக்கு கொண்டு சென்றார்கள் என்றால், அதில் கண்டிப்பாக அரசியல் நோக்கம் இருக்கும். திமுக முப்பெரும் விழாவால் அந்த பகுதியே பரபரப்பாக இருக்கும். தமிழ்நாடு முழுவதும் செய்திகள் பரவும். தமிழக பாஜகவில் நயினார் நாகேந்திரனும், அண்ணாமலையும் நேர் எதிர் நிலைப்பாட்டில் உள்ளனர். இருந்தாலும் பாஜக மேலிடம் சமரசம் செய்கிறது. அண்ணாமலை தனக்கு டெங்கு ஜுரம் நான் வரவில்லை என்று பொதுவெளியில் அவர்தான் சொன்னார். பாஜக கூட்டத்திற்கு அவர் பாதியில்தான் வந்தார். நயினார் தற்போது டிராக்கில் மாட்டிக்கொண்டிருக்கிறார். அக்டோபர் மாதம் முதல் தொகுதி வாரியாக சுற்றுபயணம் போக உள்ளதாக நயினார் அறிவித்துள்ளார். விஜய் ஒருபுறம் சுற்றுபயணம் மேற்கொள்வதால், நயினாருக்கு அவ்வளவு பெரிய கூட்டம் வராது. அது பாஜகவுக்கு பலவீனமாகும். அந்த தொல்லையில் நயினாரை அண்ணாமலை மாட்டிவிட்டுள்ளார்.
மழைக்காலம் என்பதால் புரோகிராம்கள் ரத்தாகும். அண்ணாமலை டூர் போனதன் மூலம் அவருடைய பதவி பறிபோனது. திமுக முப்பெரும் விழா ஒற்றுமையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். பாஜக போன்ற கட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு தலைவரை மாற்றுகிற போது இயல்பாகவே மாநில அரசியலில் ஜொலிக்க முடியாமல் போகிறது. தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்களில் மாநில கட்சிகளுக்கு அடங்கிதான் தேசிய கட்சிகள் அரசியல் செய்ய வேண்டும். அமித்ஷாவே எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டுவிட்டு, பஞ்சாயத்து பேசும்போது தமிழ்நாட்டில் எரிச்சல் ஏற்படும். அவசியம் என்றால் தொலைபேசி மூலம் பேசி இருக்கலாம். இன்றைக்கு பெரியார் பிறந்தநாளை எடப்பாடி புறக்கணித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


