அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு, செங்கோட்டையன் கெடு விதித்து இருக்கும் நிலையில், அவருடன் சென்ற மற்ற 5 பேர் வாய் திறப்பார்களா? என்பதை பொருத்தே அதிமுகவில் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு, எதிராக செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்துள்ளதன் பின்னணி அரசியல் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரபல தொலைகாட்சி விவாத நிகழ்ச்சியில் பேசியதாவது:- கடந்த 1989ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் செங்கோட்டையனுடைய தனிப்பட்ட செல்வாக்கு தான், ஜெயலலிதாவை எதிர்க்கட்சி தலைவராக ஆக்கியது. ஈரோடு மாவட்டத்தில் முத்துச்சாமி ஜானகி அணியை மீறி, மொடக்குறிச்சி சுப்புலெட்சுமி ஜெகதீசன், கணேச மூர்த்தி ஆகியோரை மீறி அதிக இடங்களை அதிமுகவுக்கு பெற்றுத் தந்து, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை ஜெயலலிதாவுக்கு வழங்கியவர் செங்கோட்டையன் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் அவர் நிரூபித்துவிட்டார்.
இந்த நிகழ்வில் கூடிய கூட்டம், மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆர்வம், அடுத்தபடியாக அந்த பகுதியில் உள்ள ஒன்றிய, நகர செயலாளர்கள் 90 சதவீதம் பேர் செங்கோட்டையனுடன் நிற்பது, இந்த கூட்டத்தை நடத்த விடாமல் எடப்பாடியால் செய்ய முடியாமல் போனது இவை அனைத்தும் ஈரோடு மாவட்ட அதிமுக என்பது செங்கோட்டையன்தான் என்பதை நிரூபித்துவிட்டார்.
இது தொடர் தோல்வியில் இருக்கக்கூடிய, தோற்றுப்போன ஒரு கட்சியில் இருக்கக் கூடிய பிரச்சினையாகும். ஓபிஎஸ்-ன் பிரிவு, தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் டெபாசிட் இழந்து அதிமுக 20 சதவீத வாக்குகளை எடுத்திருக்கிறது. அதில் ஈரோட்டில் இருக்கும் ஒரு முக்கியமான தலைவர் செங்கோட்டையன். அவர் போர்க்கொடி தூக்கியுள்ளார் என்றால் அந்த 20 சதவீத வாக்குகளிலும் ஒரு பிரச்சினை உள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்கும் விவகாரம் தொடர்பாக தான் உள்ளிட்ட 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக செங்கோட்டையன் சொல்கிறார். ஆனால், எடப்பாடி அப்படி சந்திக்கவில்லை என்று சொல்கிறார்.
இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொய்யர் என்று சொல்கிறார். அடுத்தபடியாக செங்கோட்டையன் ரோடு ஷோ சென்ற வாகனத்தில் அதிமுகவின் தற்போதைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லை. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் தான் இருந்தன. மேலும் செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே அவர் சொல்லவில்லை. இதன் மூலம் அதிமுகவில் கலகம் ஏற்பட்டுள்ளது என்பது முடிவாகிவிட்டது.
செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளது அதிமுகவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று அனைவரும் சொல்கிறார்கள். ஆனால், அவர் ஈரோடு மாவட்ட அதிமுகவில் பாதிப்பை ஏற்படுத்திவிட்டார் என்றுதான் நான் சொல்கிறேன். அதிமுக தலைமைக்கு செல்வாக்கு இருக்கும் என்றால், இந்த செய்தியாளர் சந்திப்பையே நடத்தி இருக்க விட்டிருக்க கூடாது. அதிமுக நிர்வாகிகள், செங்கோட்டையனிடம் சென்று எடப்பாடிக்கு ஆதரவாக கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். அல்லது செங்கோட்டையன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவருக்கு எதிராக எந்த தலைவராவது அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் செய்யவில்லை என்றால், இது மேலும் பெரிதாகும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால்? எடப்பாடி பழனிசாமியை 6 முன்னாள் அமைச்சர்கள் சந்தித்தார்கள் என்று செங்கோட்டையன் சொல்கிறார். அதேபோல், மற்ற 5 பேரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது உண்மைதான் என்று சொல்ல முன்வருவார்களா? அப்படி அவர்கள் 5 பேரும் வரவில்லை என்றால், இந்த பிரச்சினை ஈரோடு மாவட்டத்துடன் முடிந்துவிடும்.
சசிகலா, தினகரன் போன்றவர்கள் முதல் பிரிவின் போதே 7 சதவீத வாக்குகளை பெற்று விட்டனர். ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் வாக்கு வங்கியில் 13 சதவீதத்தை சேதப்படுத்திவிட்டு போய்விட்டார். தற்போது அதிமுகவிடம் இருக்கும் 20 சதவீத வாக்குகளில் இருந்து தான் கலகம் வர முடியும். அதில் பெரிதாக இருப்பவர்கள் செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன், காமராஜ், நத்தம் விஸ்வநாதன் போன்றவர்கள் தான். டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் வெளியேறிய நிலையில், அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
அதிமுக பலவீனமடைந்த போதும் எடப்பாடி பழனிசாமிதான் அதன் தலைவர். எம்ஜிஆரை போன்று ஒரு தலைவராக அவர் முயற்சிப்பார். அதில்தான் எடப்பாடி செல்வார் என்று சொன்னேன். ஆனால் செங்கோட்டையன் விவகாரம் அதிமுகவை சேதப்படுத்தும். ஈரோட்டில் சேதப்படுத்திவிட்டது. இதை தாண்டி செங்கோட்டையன் சொன்ன 5 பேரில் எத்தனை பேர் வாய் திறப்பார்கள் என்பது வரும் நாட்களில் தெரியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.