spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஹமாஸ் கொடுத்த லிஸ்ட்! அதிரடியாக இறங்கிய துருக்கி! ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் நேர்காணல்!

ஹமாஸ் கொடுத்த லிஸ்ட்! அதிரடியாக இறங்கிய துருக்கி! ஐ.நா. முன்னாள் அதிகாரி கண்ணன் நேர்காணல்!

-

- Advertisement -

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது, பாலஸ்தீனர்களுக்கு தனி நாடு உருவாக்குவதுதான். இனி வரும் தலைவர்கள் அதை நோக்கி நகர்வார்கள் என்று நம்புவோம் என முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முன்னாள் ஐ.நா. அதிகாரி கண்ணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த போர் முடிவுக்கு வந்துள்ளது வரவேற்புக்குரியது. பாலஸ்தீனர்களும், பணயக் கைதிகளும் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. கடந்த புதன்கிழமை இரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புதல் தெரித்துள்ளதாக செய்தி வந்திருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, வியாழக்கிழமை எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தோஹாவில் இருந்து ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் ஹலில்-அல்-ஹைய்யா கலந்து கொண்டார். இஸ்ரேல் தரப்பில் பிரதமர் நெதன்யாகுவின் ஆலோசகர் மற்றும் இரு தரப்பிலும் தொழில்நுட்ப அணிகள், கடந்த திங்கட்கிழமை முதல் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கினார்கள். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிபர் டிரம்ப், இந்த பாரத்தை தன் மீது ஏற்றிக்கொண்டார்.

போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும், அரபு நாடுகளின் தலைவர்களிடமும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளலாம் என்று வலியுறுத்தினார். அதனால் புதன்கிழமை இரவே போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வெளிச்சம் தென்பட்டது. அதற்கு முன்னதாக அதிபர் டிரம்ப் தன்னுடைய மருமகன் ஜேரட் கூஷ்னர், தனித்தூதர் ஸ்டீவ் விட்காப் ஆகியோரை அனுப்பிவைத்தார். அவர்கள் பெரிய அளவில் பேச்சுவார்த்தைகள் நடத்தி அமைதி ஒப்பந்தத்திற்கு சம்மதிக்க வைத்தனர். வியாழக்கிழமை காலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அன்று நள்ளிரவுக்கு மேல் இஸ்ரேலிய நாடாளுமன்றம் இந்த 20 அம்ச திட்ட தற்காலிக போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து காசாவில் தற்காலிகமாக போர் நிறுத்தப்படும். காசா மக்களுக்கு, உணவு, உடைகள், குடிநீர், பால் பொருட்கள், போர்வைகள், மருந்து பொருட்கள் போன்ற மனிதாபிமான உதவி பொருட்கள் மீண்டும் கிடைக்கும். தாக்குதல்கள் நிறுத்தப்படும். போர் நிறுத்தம் ஒப்பந்தம் கையெழுத்தாகி 72 மணி நேரத்திற்குள்ளாக உயிருடன் இருக்கும் சுமார் 20 பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள். மேலும் இறந்துபோன 28 பேரின் சடலங்கள் ஒப்படைக்கப்படும். இறந்தவர்களில் 9 பேரின் உடல்களை கண்டுபிடிக்க கால அவகாசம் வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் தரப்பில் அதற்கு பதிலாக 250 ஆயுள் தண்டனை பெற்ற பாலஸ்தீன  கைதிகளை விடுவிக்கிறது.  மேலும் 1,700 போர்க் கைதிகளையும் விடுதலை செய்கிறது. விடுதலை செய்யப்படுபவர்களின் பட்டியலை ஹமாஸ் வழங்கியுள்ளது. கைதிகள் ஒப்படைக்கப்பிட்ட பின்னர் மஞ்சள் கோடு என்ற ஒன்றை இஸ்ரேல் ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதிக்கு இஸ்ரேலிய படைகள் சென்றுவிடும். அதற்கு பிறகு சர்வதேச ஸ்திரப்படுத்தும் படைகள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அந்த படை சென்ற பிறகு இஸ்ரேலிய படைகள், மஞ்சள் கோட்டில் இருந்து சிகப்பு கோட்டிற்கு நகரும். இஸ்ரேல் மஞ்சள் கோட்டிற்கு செல்கிறபோது 58 சதவீதம் காசா நிலப்பரப்பு இஸ்ரேல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பின்னர் அவர்கள் சிகப்பு கோட்டிற்கு செல்கிறது இன்னும் கொஞ்சம் குறையும். மூன்றாவது கட்டமாக இரண்டு பகுதிகளுக்கும் நடுவில் ஒரு தாங்கல் மண்டலம் அமைக்கப்படும். அப்போது கிட்டத்தட்ட 20 சதவீத காசா நிலப்பரப்பு, இஸ்ரேலிடம் இருக்கும். இந்த போரில் ஹமாசுக்கு பாதி வெற்றி தான் கிடைத்திருக்கிறது. அவர்கள் இந்த கசப்பு மருந்தை சாப்பிட வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டனர்.

இரு தரப்பும் சோர்ந்து போய்விட்டனர். இஸ்ரேல் மக்களே போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். குறிப்பாக பிணைக் கைதிகளின் குடும்பத்தினர் பெரிய அளவில் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஜனவரி தொடக்கத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 பணய கைதிகள் விடுவிக்கப் பட்டனர். ஆனால் நெதன்யாகுவுக்கு பணயக் கைதிகள் மீது அக்கறை இருந்ததாக தெரியவில்லை. அவருக்கு ஹமாஸ் இயக்கத்தை நிர்மூலமாக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் இருந்தது. எப்போது தொடரக்கூடிய ஒரு போராக நெதன்யாகு நடத்திக்கொண்டிருந்தார். அவர் செய்த தவறு என்ன எனில், கத்தார் மீது செப்டம்பர் 1ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதல் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. அவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டது. டிரம்ப்புக்கு நோபல் பரிசு மீது தணியாத ஆசை உள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் கொண்டு வந்ததற்காக டிரம்புக்கு அடுத்த வருடம் நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது வரலாற்று ரீதியான பெரிய திருப்புமுனையாகும்.

போர் நிறுத்தத்தில் கத்தார், எகிப்து நாடுகளின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. கத்தாரின் பிரதமர், அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிற இடத்திற்கு சென்றார். ஹமாசுக்கு அவர் தான் அடைக்கலம் கொடுத்தார்கள். காசாவை ஒட்டி அமைந்திருக்கும் எகிப்துக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு உள்ளது. அவர்கள் இருவரும் தான் அமைதி பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டிருந்தார்கள். இது தவிர்த்து துருக்கிக்கும் முக்கிய பங்கு உள்ளது. துருக்கியின் உளவுப்பிரிவு தலைவரை கெய்ரோவுக்கு அனுப்பினார். போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவிக்க எர்டோகன் மூலம் அழுத்தம் கொடுத்தார்.  இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் காசாவின் மறு வளர்ச்சியாகும். இதற்கிடையே ஹமாஸ் ஆயுதங்களை கைவிட சம்மதிக்கவில்லை. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை ஆயுதப் போராட்டம் தொடரும் என்றே நினைக்கிறேன். சிறிய அளவில் இருக்கலாம்.

இலங்கை போன்று ஒரு ராணுவ தீர்வை, இஸ்ரேலால் சாதிக்க முடியாது. அதற்கு காரணம் காசாவில் மட்டும் 23 லட்சம் பாலஸ்தீனர்களும், மேற்கு கரையில் 25 லட்சம் பாலஸ்தீனர்களும் இருக்கின்றனர். அவர்களிடம் விடுதலை உணர்வு இருக்கும் வரை அவர்களுடைய எதிர்ப்புணர்வையோ, ஆயுதப் போராட்டத்தையோ மழுங்கடிக்கச் செய்யய முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஹமாஸ் தேர்தலில் பங்கேற்கக் கூடாது என்று பல அரபு நாடுகளும் சொல்கின்றன.  எனவே இந்த பிரச்சினைக்கு காலம் தான் பதில் சொல்லும். இஸ்ரேல், பாலஸ்தீனம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது, பாலஸ்தீனர்களுக்கு என்று தனி நாடு வேண்டும். அதை நோக்கி நகர வேண்டும். அதற்கு நெதன்யாகு இஸ்ரேல் பிரதமராக இருக்கக்கூடாது. ஒரு மிதவாதி அந்த பொறுப்புக்கு வர வேண்டும். அந்த இடத்திற்கு அவர்கள் வந்துவிட்டால் பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நாடும், இஸ்ரேலியர்களுக்கு நிரந்தர அமைதியும் எட்டிவிடும். இனி வரும் தலைவர்கள் அதை நோக்கி நகர்வார்கள் என்று நம்புவோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ