Homeசெய்திகள்கட்டுரைஎம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்

எம்ஜிஆர், நாங்களே தேடிக் கொண்ட வினை- கவிஞர் கண்ணதாசன்

-

புரட்சி தலைவர் எம்ஜியாரைப் பற்றி நாம் இதற்கு முன்பு அறிந்ததை காட்டிலும் கவிஞர் கண்ணதாசன் கூடுதலாகவே அவரை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் எழுதிய எம்ஜிஆரின் உள்ளும் புறமும் என்ற நூல் திருமாறன் நிலையம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதன் இரண்டாம் பதிப்பு 1977ல் வெளிவந்துள்ளது. ஆனால் அந்த நூல் பெருவாரியான மக்களுக்கு சென்றடையாமல் முடக்கப்பட்டுள்ளது. அந்த அறிய நூலில் உள்ள தகவல்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கவிஞர் கண்ணதாசன் எழுதியதை அப்படியே வெளியிடுகிறோம். இதில் உள்ள கருத்துகள் கவிஞர் கண்ணதாசன் அவர்களை சார்ந்தது.

                                                                       ஆசிரியர்- என்.கே.மூர்த்தி.

நாங்களே தேடிக் கொண்ட வினை

சுபாவத்திலேயே எம்ஜிஆருக்கு ஆணவம் உண்டு அவரது ஒரு படம் வெற்றிகரமாக ஓடிவிட்டால் மற்ற தயாரிப்பாளர்களை சித்திரவதை செய்து விடுவார். யாரையும் அலட்சியமாகவே பார்ப்பார்.

அதே நேரத்தில் அவரது பலவீனமும் அவருக்கு தெரியும். தான் ஒரு திறமையான நடிகன் இல்லை என்பதை அவர் உணர்ந்து இருந்தார் அதனால் மற்ற நடிகர்களின் படங்கள் வெளிவரும்போது தனது ரசிகர்களை அனுப்பி கேலி செய்வது… மற்ற போஸ்டர்கள் மீது சாணி வீச செய்வது.

தன் படங்களுக்கு முன் கூட்டியே டிக்கெட் வாங்கித் தந்து ரசிகர்களை கைதட்ட செய்வது ஆகிய அனைத்தும் செய்வார். கதைகளில் உருக்கமான சீன்கள் இருந்தால் தன்னால் நடிக்க முடியாது என்று கதாசிரியருக்கு தெரியாமலே சீன்களை மாற்றிவிடுவார். கதாசிரியர்களிடம் சொல்லும் போது நீங்கள் எழுதியதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பார். ஒவ்வொரு படத்திலும் தன்னை புகழ்ந்து பாடலை எழுதுவது விரும்புவார். அத்தகைய பாடல்களுக்குதான் முதலிடம் தருவார். இந்த வகையில் அவரது திறமையை  மெச்சுகிறேன். ஜனங்களை எதிலே மயங்க வைப்பது எப்படி நீண்ட நாள் வசூல் சக்கரவர்த்தியாக இருப்பது என்பதெல்லாம் அவருக்குதெரியும். சிலரை பலகாலம் ஏமாற்றலாம் பலரை சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என்றொரு பழமொழி உண்டு. அந்த பழமொழியை பொய்யாக்கியவர் எம்.ஜி.ஆர்.

திட்டமிட்டு வேலை செய்தால் எல்லோரையும் நீண்ட காலத்துக்கு ஏமாற்ற முடியும் என்பதற்கு எம்.ஜி.ஆர். உதாரணம்.

1960 இல் கட்சியில் தகராறு வந்த போது நடிகர்களுக்கு பெரிய மரியாதை தருவது தலை வேதனையாக முடியும் என்று எழுதி இருக்கிறேன்.

பாவமன்னிப்பு என்றொரு கற்பனை சித்திரமும் தீட்டி இருக்கிறேன்.

திருவொற்றியூர் காவலர் கூட்டத்தில் சமரசம் ஏற்பட்ட பிறகு அறிஞர் அண்ணா என் வீட்டுக்கு வந்திருந்தார்.

அவரிடம் நான், கட்சியில் நாம் எல்லாம் பணத்தை இழந்து கஷ்டப்பட்டு வேலை செய்கிறோம்.

அழுக்கு படாமல் அலங்கார பொம்மை போல காட்சி அளிக்கும் நடிகர்கள் உற்சவமூர்த்திகள் ஆகிவிடுகிறார்கள்.

தொண்டர்களும் எங்களை எல்லாம் ஏறிமிதித்து கொண்டு அவர்களை தொட்டுப் பார்க்க போய் விடுகிறார்கள். இதை எப்படி அண்ணா தாங்கி கொள்வது என்று கேட்டேன்

அவர் சொன்னார்:

இந்தா கண்ணதாசா, எம்.ஜி.ஆரை கட்சிக்குள் இழுத்தது கருணாநிதி, அவரை மக்கள் திலகம் புரட்சி வீரர் என்றெல்லாம் அழைத்தது நீங்கள் தான்.

இப்போது அவருக்கு கட்சியில் உள்ள செல்வாக்கெல்லாம் உங்களால் வந்த வினை தான்.

இனி நான் எதை காரணம் காட்டி கட்சிக்கு அவர் வேண்டாம் என்று சொல்ல முடியும்? ஏதாவது வழி யிருந்தால் சொல்லு.

அவர் சொன்னது சரிதான்.

மனதறிய ஒருவன் தவறானவன் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு என்று சேர்ந்துவிட்ட கூட்டத்திற்காக அவனை செயற்கையாக புகழ்ந்தது தவறுதான்.

அந்த பாவத்திற்கு நாங்கள் தண்டனை அடைந்து கொண்டிருக்கிறோம்

எப்படியோ எம்.ஜி.ஆரின் ஜாதகம் அசுரர் ஜாதகமாவதற்கு நானும் கருணாநிதியும் பிரக்ஞா இல்லாமலே ஒத்துழைத்து விட்டோம்.

இப்போது நாங்கள் எம்.ஜி.ஆர் மீது என்ன குற்றம் கூறினாலும் ஜனங்கள் அதை யோசித்து தான் நம்புவார்கள்.

இன்றைய உணர்ச்சியில் நாங்கள் உண்மையை சொன்னாலும் அவை  எங்களுக்கு எதிராகத்தான் நிற்கின்றன.

தேறாமல் தேராமல் தேர்ந்த சிறுமைக்காக வருந்துகிறோம்.

ஆனால் இன்று நாங்கள் சொல்வதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்து காலம் கடந்தாவது உண்மையை புரிந்து கொள்வார்கள்.

எங்களுக்கே காலம் கடந்து கண் திறக்கும் போது அப்பாவி ஜனங்களுக்கு அதிக காலம் கடந்து ஞானம் பிறப்பதில் தவறில்லை.

முதலில் நாங்கள் எங்கள் வாக்கு மூலங்களை முடித்து விடுகிறோம்.

தீர்ப்பை ஜனங்களுக்கு விட்டு விடுகிறோம்.

இனிமேல் எழுதும் தீர்ப்பாவது நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும்.

(தொடரும்)….

MUST READ