பீகார் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி இருந்தபோதும், பாஜக கொடுத்த 10 ஆயிரம் பணத்திற்காக மீண்டும் ஆள அனுமதித்து விட்டனர் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பீகாரில் கடந்த தேர்தலை விட 79 லட்சம் பேர் அதிகமாக வாக்களித்து இருப்பதாக தேஜஸ்வி சொல்கிறார். ஆனால் ஆளும் கட்சி – எதிர்க்கட்சி இடையிலான வித்தியாசம் என்பது 9.2 சதவீதமாக தொடர்கிறது. பாஜக தேர்தலுக்கு முன்பாக ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 கொடுத்துவிட்டார்கள். அவர்கள் அந்த தொகையை எந்த காலகட்டத்தில் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமாகும். வறுமையில் இருக்கும் மக்களுக்கு ரூ.10000 கொடுத்தால், தங்கள் வறுமைக்கு காரணமானவர்களே மீண்டும் ஆளட்டும் என்று வாக்களித்துவிட்டார்கள். பீகாரின் மக்கள் தொகை 13.10 கோடியாகும். இதில் 3 கோடி பேர் வெளி மாநிலங்களில் வேலை பார்க்கிறார்கள். நிதிஷ்குமார் அரசால் அவர்களுக்கு எந்த பலனும் கிடையாது. இருந்தபோதும் அதே அரசு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம், ரூ.10,000 பணம் கொடுத்த பிறகும் இரு கூட்டணிகளுக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 56 லட்சம் தான். என்டிஏ கூட்டணி 46.7 சதவீதம். இந்தியா கூட்டணி 37.5 சதவீதம்.

இவை மட்டும் இன்றி பாஜக சில கட்சிகளை தேர்தலில் போட்டியிட வைக்கிறது. ஜன் சுராஜ் கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் 3 சதவீதத்திற்கும் மேலாக வாக்குகளை எடுத்துவிட்டது. மற்றொருபுறம் ஒவைசி கட்சி. அவர் 2 சதவீதம் வாக்குகளை வாங்கினார். இவை மட்டுமின்றி மற்றவர்கள் எல்லாம் 10 சதவீதம் வாங்கினார்கள். ஒட்டுமொத்தத்தில் 15 சதவீதம் வாக்குகளை பிரித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் பீகாரில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஜேடியு – பாஜக கூட்டணி அரசால் இதுவரை எதுவும் செய்ய முடியாதபோது அவர்கள் எப்படி செய்வார்கள்?. தேர்தல் பிரச்சாரத்தின்போது ஜேடியு, பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தபோதும் அவர்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள். அதற்கு காரணம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களாகும். மக்கள் பட்டனை அழுத்திவிட்டு வந்துவிடுகிறார்கள். ஆனால் அது யாருடைய கணக்கில் சேர்கிறது என்று யாருக்கும் தெரியாது. ரகசியமாக இருக்கக்கூடிய ஒரு கருவியை வைத்துக்கொண்டு ஜனநாயக முடிவுகளை நாம் தீர்மானிக்கிறோம்.

எஸ்.ஐ.ஆர் மனுவை நிரப்பி வழங்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் செல்கிறது. அப்போது உங்களுடைய நோக்கம் என்பது என்ன? நான் விண்ணப்பத்தை கொடுக்காவிட்டால் நீக்குவேன் என்று தேர்தல் ஆணையம் எப்படி சொல்ல முடியும்? மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக தான் இப்படி பேசுகிறார்கள். இளைஞர்கள், தங்களுடைய குடும்பத்தினர் அனைவரது விண்ணப்பங்களையும் நிரப்பிட வேண்டும். அதேபோல் பக்கத்து வீட்டினர், உறவினர்கள் என்று எல்லோருடைய விண்ணப்பங்களும் நிரப்பப்பட்டு விட்டதா? என்று பாருங்கள். அதேபோல், உங்கள் பகுதியில் உள்ளவர்களிடம் விண்ணம் நிரப்பிவிட்டார்களா என்று கேட்டு, அதை நிரப்பிட உதவி செய்யுங்கள். இது நமது நாட்டை காப்பாற்றுவதற்கான ஒரு கடமையாகும். இதை தேர்தல் ஆணையம் செய்ய விரும்பவில்லை. நாம் செய்ய வேண்டும். நான் வலியுறுத்துவது பிகாரில் நடைபெற்றது போன்று இங்கு எதையும் நடைபெற அனுமதிக்கக்கூடாது.

பீகார் தேர்தலில் ஆர்.ஜே.டி – காங்கிரஸ் கூட்டணி சரியாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையது அல்ல. பிகார் மக்கள் தங்களை வறுமையில் வைத்திருக்கக்கூடிய அரசை எதிர்த்து வாக்களிக்க நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுத்த ரூ.10000 அவர்களுக்கு தேவைப்படுகிறது. பணம் வாங்கிய 1.25 கோடி பேரில், 65 லட்சம் பேர் வாக்களித்தாலே முடிந்துவிட்டது. பீகார் தேர்தலில் அதிகளவில் பெண்கள் வாக்களித்துள்ளனர். 3.91 கோடி ஆண்கள், 3.51 லட்சம் பெண்கள் வாக்காளர்களாக உள்ளனர். ஆனால் பெண் வாக்காளர்களே அதிகளவில் வாக்குகளை செலுத்தினர்.

பீகார் தேர்தல் வெற்றி தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்று பாஜக தலைவர்கள் சொல்கின்றனர். எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் நாம் செய்வதை பொறுத்து தான் அவர்கள் எச்சரிக்கை அடைவார்கள். விளக்கு எரிகிற வீட்டில் திருடன் ஏன் திருடப் போகிறான்? வீட்டிற்கு வெளியே ஒரு திருடன் காத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு மனுக்களை நிரப்ப வேணடும். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கினார்கள். உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதால் 18 லட்சம் பேரை மட்டும் சேர்த்தார்கள். இதை மோடிக்காக தான் அவர்கள் செய்தார்கள். அதற்கு காரணம் கார்ப்பரேட் அரசியல். பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகியபோது கூட ராகுல்காந்தி இங்கில்லை. அதை கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக சொல்கிறது. வாக்காளர்களுக்கு ரூ.10000 கொடுக்காமல் அவர் வெற்றி பெற்றிருந்தால் இதை நாம் ஏற்றுக்கொள்ளலாம். எஸ்ஐஆர் நடத்தாமல், விவிபேடில் பதிவான வாக்குகளை எண்ணி பாஜக வெற்றி பெற்றிருந்தால் அவர் சொல்வதை ஒத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் அவர் களவாணி. அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


