அதிமுக – தவெக இடையே கூட்டணி அமைவதற்கு முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதுதான் தடையாக உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.

தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு மற்றும் அதிமுக – தவெக கூட்டணி தொடர்பாக எழுந்துள்ள வதந்திகளுக்கு விளக்கம் அளித்து அரசியல் விமர்சகர் ராஜம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜயிடம், சினிமா நடிகர் என்பதை கடந்து பொதுவாழ்க்கைக்கான எந்தவித தகுதியும் கிடையாது. விஜய்க்கு கொள்கையும், கோட்பாடும் கிடையாது. அனிதா மரணம், அஜித்குமார் மரணம் என்று எல்லோருடைய வீட்டிற்கும் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அனிதா மரணத்திற்கு செல்வதும், நீட் தேர்வுக்கு எதிராக தொடர் இயக்கம் நடத்துவதும் ஒன்று கிடையாது. நீட் தேர்வை நிரந்தரமாக ஒழிக்கும் வரை விடமாட்டேன் என்று விஜய் தொடர் போராட்டம் நடத்தினால்தான் அரசியல்வாதி ஆக முடியும். ஒருநாள் துக்கவீட்டிற்கு சென்றுவந்தால் அரசியல்வாதி ஆகிட முடியாது. ஆதிக்க இந்தியை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிக்கை வெளியிட்டு விட்டு திமுகவை சேர்ந்த யாரும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. தண்டவாளத்தில் தலை வைக்கும் போராட்டம் வரை இருந்து, மாணவர்கள் உயிர் தியாகம் செய்யக் கூடிய அளவுக்கு போராட்டத்தை அதிரச் செய்ததால்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. விஜய் களத்திற்கு வந்து அரசாங்கத்தை அதிரச் செய்த ஒரு போராட்டத்தை சொல்ல முடியுமா? பரந்தூர் போராட்டத்திற்கு செல்வதாக கூறி ரோடு ஷோ சென்றார்.
காவல் சித்ரவதை மரணங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அதிலும் கூட திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற காவல் சித்ரவதை மரணங்களை மட்டுமே பேசினாரே தவிர, ஒட்டுமொத்தமாக காவல் சித்ரவதை மரணங்களை தடுப்பதற்கான போராட்டமாக ஏன் அதை மாற்றவில்லை? பாதிக்கப் பட்டவர்களுக்காக மூன்றரை நிமிடங்களுக்கு மனப்பாடம் செய்துவிட்டு வந்த வசனத்தில், அதற்கு மேலே நீட்டிக்க முடியாவிட்டால் உங்களிடம் என்ன பேச்சாற்றல் உள்ளது? மத்திய பாஜக அரசுக்கு எதிரான டங்ஸ்டன் போராட்டம், திருப்பரங்குன்றம் போராட்டம் போன்றவற்றின்போது விஜயின் குரல் என்னவாக இருந்தது? பாஜகவை எதிர்க்காமல் எப்படி நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னால் மட்டும் போதுமா? பெரியார் குறித்து கட்சி தலைவன் என்கிற போர்வையில் ஒருவர் விமர்சித்த போது, விஜயிடம் இருந்து ஒரு கண்டனம் உண்டா? அப்போது பெரியாரை தவெகவின் கொள்கை வழிகாட்டி என்று சொல்லலாமா?
அதிமுக என்பது மாபெரும் கட்டமைப்பு வைத்திருக்கிற பிரம்மாண்டமான கட்சியாகும். அங்கு எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய வசீகரத் தலைவர்கள் இருந்த நிலையில், அந்த வசீகரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அந்த இடத்தில் தன்னை எம்ஜிஆராக கருதிக்கொள்ள கூடிய இடத்தில் விஜய் இருக்கிறார். வாழும் எம்ஜிஆர் ஆகிய விஜய் அதிமுகவுக்கு வந்துவிட்டால், அதிமுக – தவெகவின் வாக்கு வங்கி இணைந்தால் ஆட்சி மாற்றத்திற்கு பெரிய விளைவை உண்டாக்கிவிடும் என்கிற அரசியல் கணக்கு இருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்பதுதான் அதற்கு தடையாக உள்ளது. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவு காண்கிற இடத்தில் விஜய் உள்ளார். ஆனால் உண்மையிலேயே எடப்பாடி 4.5 வருடங்கள் முதலமைச்சராக இருந்துள்ளார். அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எடப்பாடி பழனிசாமியின் மகன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.மேலும் அவரது சம்பந்தி வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால், பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி சென்றார். அப்போது அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை லாக் செய்துவிட்டார். தற்போது தவெக தடுமாறிக் கொண்டிருக்கிறது.
தவெக உடன் கூட்டணி வைக்க எடப்பாடி பழனிசாமியும் விரும்பினார். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தினால் கட்சியின் தனித்தன்மை பாதிக்கப்படுமா? என்கிற நெருடல் இருந்தது. சுழற்சி முறையில் துணை முதலமைச்சராக இருப்பதா? கூடுதல் தொகுதிகள் கேட்பதா? என்று தவெக தரப்பில் பேராசை பட்டார்கள். முடிவுக்கு வராத ஒரு இடத்தில் பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே போகிறபோது திடீரென அமித்ஷா வந்து கதவை சாத்திவிட்டார். எடப்பாடி பழனிசாமி மாட்டிக்கொண்டார். தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது உயிருக்கு ஆபத்து என்று சொல்லியுள்ளார். இதற்கு பின்னணியில் குடும்ப பிரச்சினைகள் காரணமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. மார்ட்டினுடைய மருமகன் என்று சொல்லி அவருடைய சொத்துக்களை மொத்தமாக அபகரிக்க ஆதவ் முயற்சிக்கிறார் என்றும் ஆதவுக்கும், மார்ட்டினுடைய மகன்களுக்கும் முரண்பாடு உள்ளது. அவர்களுக்குள்ளே உறவு முறை சீராக இல்லை. அனைத்துக்கட்சிகளுக்கும் தேர்தல் நிதி கொடுக்கிற இடத்தில் உள்ள மார்ட்டினுக்கு, அவருடைய மருமகன் என்கிற பெயரில் எந்தவித உழைப்பும் இல்லாமல் அவருடைய சொத்துக்களை நிர்வகிக்கூடிய இடத்திற்கு ஆதவ் அர்ஜுனா நுழைகிறார். அதனால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது அரசியல் பிரச்சினை அல்ல. ஆதவ் அர்ஜுனாவை யார் என்றே மக்களுக்கு தெரியாது.
சென்னையில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை சரிசெய்வதாக விஜய் தரப்பில் சொல்லப்படுகிற நிலையில், அதனை மேயர் பிரியா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். தவெகவின் முதல் மாநில மாநாடே எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. திமுகவின் கொள்கைகளை காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அடுத்தபடியாக நேரடியாக நான்தான் என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க கொள்கைகள் தான் எடுபடும் என்பதற்காக அந்த கொள்கைகளை பேசிவிட்டு திமுகவை வீழ்த்துவேன் என்று சொல்கிறார். ஏற்கனவே பேஷன் ஷோ போன்று ஒன்று நடத்தினார். தற்போது மறுபடியும் பேஷன் ஷோ நடத்தப்போகிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.