தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலையை நீக்குவதற்கு நாள் குறித்தாகிவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக வெளியான தகவலின் பின்னணி குறித்து மூத்த பத்திகையாளர் தராசு ஷியாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஒரு கூட்டணி அமைக்கிறபோது தேசிய கட்சிகளில் மாநில தலைவர்களை மாற்றுவது என்பது இயல்பானதாகும். காங்கிரஸ் கட்சியில் செல்வப் பெருந்தகை வந்தது கூட அப்படியான ஒரு முயற்சியின் விளைவுதான். அண்ணாமலை மாற்றப்படுவார் என்றுதான் நானும் நினைக்கிறேன். அவர் ஏன் மாற்றப்படுவார் என்றால் கண்டிப்பாக அதிமுக – பாஜக கூட்டணி வருகிறது என்றுதான் நினைக்கிறேன். வெறும் கூட்டணி மட்டும் அல்ல. அதில் தொகுதி பங்கீடு உள்ளது. எந்த எந்த தொகுதிகள் என்கிற கணக்கும் இருக்கிறது. அதுவந்து இறுதிகட்ட பேச்சுவார்த்தை. பாஜகவின் மேலிடத்தில் இருந்து வந்து எத்தனை தொகுதிகள் என்று இறுதி செய்துவிடுவார்கள். ஆனால் பல தொகுதிகளை இருதரப்பும் கேட்கும். அப்போது ஒன்றை விட்டுக்கொடுத்து மற்றொன்றை பெற வேண்டும். கட்சிகளுக்கிடையே ஓட்டு பரிமாற்றம் செய்ய கூட்டணி கட்சி தலைவரும், கூட்டணியின் மாநில தலைமையும் இணக்காமாக இருக்க வேண்டும். இது தன்னால் முடியாது என்று அண்ணாமலையே ஒப்புகொண்டுவிட்டார். எடப்பாடி பழனிசாமியாலும் அண்ணாமலையுடன் ஒத்துபோக முடியாது. அப்போது அண்ணாமலை மாற்றப்படுவார். இதற்கு தேதி எல்லாம் குறித்துவிட்டார்கள். ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி மாற்றப்படுகிறார். பாஜக தேசிய தலைவரை இம்மாதம் 2வது வாரத்துக்குள் நியமிக்கப்பட வேண்டும் . அதற்கு முன்பாக மாநில தலைவர்களை நியமிக்க வேண்டும். எனவே அண்ணாமலை மாற்றம் தொடர்பான தகவலை இன்னும் ஒரு சில நாட்களில் எதிர்பார்க்கலாம்.

பாஜக மாநில தலைவரை மாற்றாமல் தொடரலாமா? என்றால் பாஜகவின் முடிவு ஆகும். ஆனால் அதிமுகவும் அது கொஞ்சம் இடிக்கும். ஏனென்றால் இருவரும் ஒரே சமுதாயம், ஒரே பின்னணி உடையவர்கள், ஒரே மாதிரியான இடத்தில் இருந்து வருகிறார்கள்.இருவரும் விவசாயி மகன்கள் ஆவர். தலைமை தாங்குவது என்றால் மாநில தலைவர் பதவியில் இருந்துதான் தாங்குவது கிடையாது. தொண்டனாக இருந்தும் பணியாற்றத் தயார் என்று அண்ணாமலை சொல்லிவிட்டார். கூட்டணி பேச்சுவார்த்தையில் பங்கேற்க தொண்டர்களை யாரும் அழைக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்க வேண்டும். அண்ணாமலையை வைத்துக்கொண்டு அதிமுக கூட்டணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியாது. அப்போது எடப்பாடி பழனிசாமியை மாற்ற முடியுமா?செங்கோட்டையனை வைத்து அப்படி ஒரு முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் செங்கோட்டையன் அந்த அளவுக்கு வலிமையான தலைவர் கிடையாது. இல்லாவிட்டால் அதிமுக உடையும். உடைந்த அதிமுகவால் பாஜகவுக்கு என்ன லாபம் உள்ளது?
ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் உள்ள இரட்டை இலை வழக்கு போன்றவற்றை பயன்படுத்தி ஆட்டத்தையே மாற்றிவிட்டார்கள் என்றால், அதிமுக என்னவாக இருக்கும்?. இரட்டை இலை சின்னம் இல்லாவிட்டாலோ, செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்கள் வந்தாலோ அதிமுக உடைந்துவிடும். ஒரு சிறு துண்டு உடைந்தாலும், ஒருங்கிணைந்த அதிமுக என்கிற கட்டமைப்புக்குள் வராது. புதிதாக இன்னொரு குழப்பத்தை ஏற்படுத்தி பாஜகவுக்கு என்ன லாபம் இருக்கிறது?. பாஜகவின் ஒரே இலக்கு என்பது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதாகும். திமுகவை வீழ்த்த எந்த எல்லைக்கும் செல்வோம் என்று பாஜக சொல்வது ஏன்? மோடி தோற்கடிக்க முடியாத இரும்பு தலைவர் என்றும், 400 சீட்டுகள் வரை வெல்வார் என்றும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 400 சீட்டுகளில் 160 சீட்டுகள் குறைந்து 240 இடங்களைதான் பெற்றார். அதற்கு பிறகு பாஜகவிலேயே மோடியின் காலம் முடிந்துவிட்டது என்று பேச தொடங்கி விட்டார்கள்.அந்த சிந்தனை வரும்போதுதான் ஹரியானா தேர்தலும், மகாராஷ்டிரா தேர்தலும் மோடிக்கு பெரிய அளவில் கை கொடுத்தது.
தற்போது வரிசையாக தேர்தல் நடைபெற உள்ளது. முதலில் பீகார் மாநிலம். வக்பு வாரிய மசோதா நிறைவேற்றப்பட்டால், அங்குள்ள இஸ்லாமிய அமைப்பு பெரிய அளவில் எதிர்ப்பு வாக்குகளை செலுத்தும். அடுத்த சில மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வந்துவிடும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை பிடிக்காவிட்டாலும், திமுக 200 இடங்களில் வெற்றி பெற்றால் அது பெரிய தோல்வியாகத்தான் கருதப்படும். திமுகவை குறைந்தபட்சம் 120 அல்லது மைனாரிட்டி அரசாங்கமாகவோ மாற்றினால் அது மோடியின் வெற்றியாக பார்க்கப்படும். இநநிலையில் 75 வயதாகிவிட்டதால் பிரதமர் மோடி ஓய்வுபெற்று புதிய தலைமைக்கு வழிவிட வேண்டும் என்றால், இல்லை இன்னும் அவர் வலிமையாக இருக்கிறார். பாருங்கள் வரிசையாக அனைத்து மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறார் என்று சொல்வார்கள்.
2026 மற்றும் 2027 முழுமையும் தேர்தல்கள்தான். பாஜகவை சேர்ந்த எனது நண்பர்கள் 2029ஆம் ஆண்டில் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார். அடுத்த ஜனாதிபதி அவர்தான். அமித்ஷா அடுத்த பிரதமர் என்று சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை வைத்து சாதாரணமாக கணக்கு போட வேண்டாம். தேசிய அரசியலுக்கு தகுந்தாற்போல் இங்கு காய் நகர்த்தப்படுகிறது. அப்போது அதிமுக – பாஜக கூட்டணி வந்தால், குறைந்தபட்சம் திமுகவை 200 சீட்டுகளை பெற முடியாமல் தடுக்கலாம். 100 சீட்டுகளுக்குள் நிறுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அதிமுக ஆட்சியை பிடித்துவிடும் என்பது அவர்களது நம்பிக்கை. ஆனால் தமிழ்நாட்டின் கள நிலவரம் என்பது வேறு என்பது எல்லோருக்கும் தெரியும். \திமுகவே இதனை அச்சுறுத்தலாக தான் நினைக்கிறது. அதனால் தான் நீண்ட நாளாக கிடப்பில் போடப்பட்ட கச்சத்தீவு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. அதற்கு காரணம் திமுக வாக்குவங்கியை கூர்மையாக்குகிறது.
எந்த ஒரு வாக்கு வங்கியையும் உருவாக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும்போது எந்த அரசு மீதும் அதிருப்தி வந்துவிடும். 10 சதவீத வாக்குகள் போய்விடும். அதை ஈடுகட்ட சித்தாந்த ரீதியாக 4 சதவீதம் வரை உயர்த்தலாம். அதன் பிறகு அச்சுறுத்தும் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகவும் ஆபத்து என்கிற கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதை நோக்கி திமுக நடைபோடுகிறது. அந்த இடத்தில் திமுகவின் எழுச்சியை தடைபோட வேண்டும் என்றால் அதிமுக – பாஜக கூட்டணி 100 இடங்களிலாவது வெல்ல வேண்டும். ஏன்னென்றால் அதிமுக, பாஜக , பாமக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. திமுக கூட்டணிக்கும் ஒரு வாக்கு வங்கி உள்ளன. திமுக எதிர்ப்பு அணிக்கு ஒரு வாக்கு வங்கி இவர்கள். ஒரே ஒரு தவறவிட்ட இடம் விஜய்தான். அவருக்கான வாக்குகளை குறைக்க வேண்டும் என்றால் திமுக ஆட்சியை அகற்றக்கூடிய வல்லமை பெற்ற கூட்டணி அதிமுக – பாஜக கூட்டணி என்கிற கட்டமைப்பை உருவாக்கிட வேண்டும். அப்போதுதான் எனது அதிருப்தி வாக்குகளை இவர்களுக்கு போடுவேன். அதை செட் செய்கிறார்கள். அப்படி என்றால் அண்ணாமலை அந்த இடத்தில் ஒரு தடைக்கல்லாக தான் இருப்பார்,