spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைநூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!

நூல்வெளியீட்டு விழாவில் திட்டமிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்த சீமான்!

-

- Advertisement -

சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமான் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டு உள்ளது, சீமானின் கடந்த கால செயல்பாடுகளே இதனை வெளிச்சம் போட்டி காட்டியுள்ளன.

we-r-hiring

சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் தமிழ் தேசியம் ஏன், எதற்கு? எப்படி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நூலாசிரியர் பாலமுரளிவர்மன்,  டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் வேடியப்பன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நுலை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நீராருங் கடலுடுத்த’பாடல் பாடப்படாமல், புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் வாழ்த்து பாடப்பட்டது. இது புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சீமான் திமுக அரசு  குறித்தும், முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் குறித்தும் காட்டமாக பேசினார். நூல் வெளியீட்டு விழா ஒன்றை சீமான் அரசியல் மேடையாக மாற்றிக் கொண்டார் என பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்தது. பல்வேறு தரப்பினரும் அவரது செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர்.

சீமான் மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசி,  புத்தகக் கண்காட்சியில் புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடியதற்கும் தங்களுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பதிப்பகங்களின் புத்தக வெளியீட்டிற்கு வழங்கப்படும் வழக்கமான நடைமுறைப்படி டிஸ்கவரி புக் பேலஸ்க்கு புத்தக வெளியீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும், அந்த நிகழ்வில் சீமான் இன்றைய அரசியல் சார்ந்தும், தமிழ்நாடு அரசு, முதலமைச்சர், மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோரை ஒருமையில் பேசியதற்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றம் கூறியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக பபாசியின் அவசர செயற்குழு கூடி டிஸ்கவரி புக் பேலஸ் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சூழ்நிலையை இந்த நிகழ்வு ஏற்படுத்தியிருப்பதாகவும், தமிழ்நாடு அரசின் மீது தங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்றும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழ்தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ‘டிஸ்கவரி’ வேடியப்பன் வெளியிட்ட அறிக்கையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சீமானை, நூலாசிரியரின் பரிந்துரையின் பேரில் பதிப்பாளர் என்ற முறையில் அழைத்து, அரங்கு அமைத்துக் கொடுத்தாகவும், அரசியல் தாக்குதல், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பேசக் கூடாது என்கிற அறிவுறுத்தலுடன் அரசியல் பாரபட்சம் இல்லாமல் பபாசி இதற்கான அனுமதியை வழங்கியதாகவும் தெரிவித்திருந்தார். விழா மேடையில் பெரும்பான்மையான திட்டங்களை நூலாசிரியர் பாலமுரளிவர்மன் பார்த்துக் கொண்டதாகவும், சீமானின் விருப்பத்தின் பேரில் பாரதிதாசனின் வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே பாடல் ஒலிக்கப் பட்டதாகவும் பாரதிதாசன் பாடல் என்பதால் இதை தான் எளிதாக எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பாடல் புதுச்சேரி அரசின் வாழ்த்து என்றோ இதன் மூலம் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் புறக்கணிக்கப்படுகிறது என்கிற அரசியல் தெளிவோ அப்போது இல்லாதது தனது அறியாமைதான் என்றும், அதற்காக வருந்துவதாகவும் வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் சீமான், நல்ல ஒரு இலக்கிய மேடையை அரசியல் மேடையாக நினைத்துப் பேசிய கருத்துகள் தனக்கோ, பபாசி அமைப்புக்கோ விருப்பம் இல்லாதது என்றும்; நாங்கள் ஒருபோதும் இதை ஆதரிக்கவில்லை என்றும் வேடியப்பன் விளக்கம்  தெரிவித்துள்ளார். பொதுமேடையில் சீமான் பேசும்போது குறுக்கிடுவது நாகரிகம் இல்லை என்பதால் அமைதி காத்தோம் என்றும் தெரிவித்திருந்தார்.  கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் சார்பற்று வாசிப்பை மட்டும் நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் டிஸ்கவரி வேடியப்பன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலில் ‘திராவிடர் நல் திருநாடு’ என்ற வரிகள் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பாடலை அண்மைக்காலமாக திட்டமிட்டே புறக்கணித்து வருகிறார். நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அரசின் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்படுவது வழக்கமாகவே உள்ளது. மேலும் திராவிடர் நல் திருநாடு என்ற வரிகளுக்கு மாற்றாக தமிழர் நல் திருநாடு என்று மாற்றி பாடும் நிகழ்வுகளும் அரங்கேறி வந்துள்ளன. இதன் தொடர்ச்சியாகவே சீமான், சென்னை புத்தகக் கண்காட்சியிலும் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்துள்ளார் என்பது டிஸ்கவரி வேடியப்பன் அறிக்கை வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதேபோல், பல்வேறு தரப்பினரும் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவை அரசியல் சார்பு மேடையாக சீமான் பயன்படுத்தி கொண்டதற்கும், திமுகவையும், முதலமைச்சர் போன்றோரை இழிவு படுத்தியதற்காகவும் பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையல்ல.

 

MUST READ