தமிழகத்தில் SIR நடவடிக்கையின்போது வாக்காளர் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கவும், போலியான நபர்களை சேர்க்கவும் முயற்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகள் தொடங்க உள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- SIR நடவடிக்கையால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளருக்கும் அபாயம் தான். இந்த நடவடிக்கையால் பாஜக என்கிற ஒரு கட்சிக்கு மட்டும் தான் சாதகம். இந்த நடவடிக்கையில் டார்கெட் செய்து வாக்குகளை சேர்ப்பது. டார்கெட் செய்து வாக்குகளை நீக்குவது ஆகியவை பாஜகவுக்கு சாதகம், பாதகம் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. SIR நடவடிக்கை எப்படி ஒரு மாதத்தில் செய்துவிட முடியும் என்று அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அது ஒரு முகத்திரை தான்.
அதிகாரிகள் வீடு வீடாக வந்து வாக்காளர்களின் விவரங்களை சரிபார்ப்பார்கள் என்று பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் அரசு அதிகாரிகள் இதை செய்கிறபோதே, தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணினியில் எல்லாவற்றையும் செய்து விடுவார்கள். அதற்கான வசதிகள் இணையதளத்தில் இருக்கிறது. வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் எப்படி பெயர்களை சேர்க்கிறார்கள்?. எப்படி நீக்குகிறார்கள்? என்கிற விவரம் யாருக்கும் தெரியாது. தேர்தல் ஆணையம் வெளியிடுகிற வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து வாக்காளர்களும் சென்று பார்க்க வேண்டும். ஆனால் அப்படி அனைவரும் சென்று பார்ப்பது சாத்தியமில்லாதது.

2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நாட்டில் உள்ள 12 கோடியே 70 லட்சம் பேர் சட்டத்திற்கு புறம்பாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். அதில் 4 கோடி பேர் இஸ்லாமியர்கள். 3 கோடி பேர் பட்டியலினத்தவர். மற்றவர்கள் ஆங்காங்கே உள்ள பாஜகவுக்கு எதிரான சமுதாயத்தினர். கன்னியாகுமரியில் 2019 மக்களவைத் தேர்தலின்போது 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 52 ஆயிரம் கிறிஸ்தவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டன. இது இருப்பவர்களை நீக்குவதாகும். மற்றொன்று இல்லாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது.
அது ராகுல்காந்தி மகாதேவபுரா தொகுதியில் சுட்டிக்காட்டிய முறைகேடுகள் ஆகும். அந்த முறைகேடுகள் எல்லாம் பீகாரில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையின்போது நடைபெற்றன. ஒரே முகவரியில் 20-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளதாக கூறி சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் 1.32 கோடி பேர். அம்மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 7.42 கோடியாகும். எனவே 6ல் ஒரு பங்கு வாக்காளர்கள் இப்படி சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சிகள் எல்லாம் SIR-ஐ எதிர்க்க காரணம் இதுதான்.

விஜய், அன்புமணி, டிடிவி தினகரன் போன்றவர்கள் SIR-ஐ ஏன் ஆதரிக்கிறார்கள் என்று கேள்வி எழலாம். நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவோ, அல்லது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவோ தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. தேர்தல் ஆணையம் திட்டமிட்டு ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். அதில் குறைகள் இருப்பின் நீதிமன்றத்தை நாடலாம். தற்போதும் குறைகளை சுட்டிக்காட்டி தான் உச்சநீதிமன்றத்தை நாட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு அதிகாரிகள் SIR- பணிகளில் ஈடுபடுகிறபோது, அதில் எப்படி நடைபெறும் என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்புகிறார். மகாதேவபுரா தொகுதியில் வாக்காளர்களின் பெயரை அதிகாரிகள் நீக்கவில்லை. தனியார் கணினி மையத்தை சேர்ந்தவர்களுக்கு காசு கொடுத்து வாக்காளர்களின் பெயர்களை முறைகேடாக நீக்கம் செய்தார்கள். பின்வாசல் வழியாக தான் அவர்கள் வாக்காளர்களின் பெயர்களை நீக்குகிறார்கள். அதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு வழிகளை ஏற்படுத்தி வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் SIR- நடவடிக்கைக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளதன் மூலம் அதற்கு தடை கிடைக்காது. நாட்டில் நடைபெறுகிற பல குளறுபடிகளுக்கு உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகள் தான் காரணமாகும். பீகாரில் இறந்ததாக சொல்லப்பட்ட வாக்காளர்களை நேரில் அழைத்து வந்து நிறுத்தியபோது, உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. மாறாக நாடு முழுவதும் SIR நடத்த அனுமதி வழங்கினார்கள். அதன் காரணமாகவே மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அதிகாரிகள் வீட்டிற்கு வந்து விசாரிக்கும்போது இறந்தவர்களின் பெயர்களை கூறி நீக்குங்கள். இருப்பவர்கள் யார் என்று காட்டுங்கள். புதிதாக வாக்காளர்களை சேர்க்க சான்றிதழ்களை தயாராக வைத்திருங்கள்.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பெயர் இருக்கிறதா? என்று உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அதேநேரத்தில் அரசு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரவில்லை எனில், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அப்போது நீங்கள் கட்டாயம் வரைவு பட்டியலை பார்க்க வேண்டும். உங்களுடைய பெயர் நீக்கப்பட்டிருந்தால் அதை ஊடகங்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். மக்கள் எழுச்சி தான் முறைகேடுகளை தடுப்பதற்கான ஒரே வழியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


