கரூர் துயரம் தொடர்பான விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோ மூலம், அவர் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக் கொண்டாரா? என்றுதான் பார்க்க தோன்றுவதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்ட வீடியோ பதிவு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :- விஜய் வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்தால் ஏதோ 2, 3 நாட்களாக துக்கமும், சோகமும், அவரை வாயை, வார்த்தைகள் வெளிவர விடாமல் கட்டிப்போட்டு விட்டது என்று கூட நான் நம்பிவிட்டேன். வாயை திறக்கிறபோது சில புரிதல்களோடு, சுய பரிசோதனையோடு விஜய் வருவார் என்று எதிர்பார்த்தேன். அவர்கள் கொடுத்த இடத்தில் பேசியதை விட நாங்கள் வேறு எந்த தவறும் செய்யவில்லை என்று சொன்னபோதே விஜயிடம் நேர்மை இல்லை என்று நான் சொல்வேன். விஜய் எந்த தவறுமே செய்யவில்லையா? திருச்சி தொடங்கி நாமக்கல், கரூர் என 6 மாவட்டங்களில் நடந்த பிரச்சாரங்களில் எங்கேயும் அவர் நேரத்திற்கு வந்தது கிடையாது. நாமக்கல் கூட்டத்திற்கு காலை 8.45 மணிக்கு பிரச்சாரம் செய்வதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும், கட்சியின் பக்கத்திலும் தெரிவிக்கிறார். போலீசாரிடம் அனுமதி வாங்குகிறார்கள். தொண்டர்களிடமும் சொல்லி வைக்கிறார்கள்.
அதை நம்பி மக்களும் வருகிறார்கள். ஆனால் காலை 8.50 மணிக்குதான் சென்னையில் இருந்தே கிளம்புகிறார். கிட்டத்தட்ட 4 மணிநேரம் தாமதமாகப் போகிறது என்று தெரிந்து இருந்தே, நாம் இப்படி கிளம்பினோமோ. இது என்னை அறியாமல் செய்திருந்த தவறு என்று விஜய் வீடியோவில் சொல்லி இருந்தார் என்றால்? அவருடைய நேர்மையை பாராட்டுகிற முதல் ஆள் நானாக தான் இருப்பேன். 4 மணிநேரம் தாமதமாகப் போகிறது என்று தெரிந்துவிட்டதால், அந்த நேரத்தில் காத்திருக்கும் தொண்டர்களுக்கு என்ன என்ன? செய்து தர வேண்டும் என்று நான் நிர்வாகிகளிடம் அறிவுரை சொல்லி இருந்தேன் என்று பொய்கூட சொல்வதற்கு விஜய் விரும்பவில்லை. அப்போது நான் எந்த தப்பும் செய்யவில்லை என்பது எந்த வகையில் நியாயம்?
என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள். ஆனால் என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று விஜய் சொன்ன டயலாகை நாம் கடைசியாக கூலி படம் வரை பார்த்துவிட்டோம். இது சட்டத்தின் ஆட்சி நடக்கிற நாடு என்கிற புரிதலே விஜயிடம் இல்லை. எப்.ஐ.ஆரில் விஜயின் பெயரே கிடையாது. அருணா ஜெகதீசன் ஆணையம் விஜய் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைத்தாலோ, அல்லது இதுபோன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு வழிகாட்டு நெரிமுறைகளை வகுக்கலாம் என்றாலோ தான் அவர் உள்ளே வருவார். கரூரில் நடந்த நிகழ்வுகளுக்கு தார்மீக பொறுப்பேற்கிறேன் என்று கூட விஜய் மனசாட்சியோடு எங்கும் சொல்லவில்லை. சட்டம் சட்டம் என்று பேசிசுகிற விஜய் நான் வருகிறேன் சி.எம். என்கிறார். அவர் எங்கே பழி வாங்கினார்? அப்போது தவறாக திசை திருப்புகிறீர்கள். தான் துணிச்சலாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக ஒரு கோழைத்தனத்தை விஜய் பதுக்கி வைத்திருக்கிறார் என்றுதான் நான் பார்க்கிறேன். இத்தனை லட்சம் மக்கள் ஆராதிக்கும் ஒரு தலைவன் இப்படி ஒரு பொய்யை சொல்கிறார் என்றால்? அதை நிச்சயமாக கோழைத்தனம் என்றுதான் பார்க்கிறேன்.
விஜய் வீடியோ வெளியிட்டதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் தொண்டர் உயிரிழப்பதை விரும்ப மாட்டார் என்று சொல்லியிருப்பார். கிட்டத்தட்ட விஜயை பாதுகாக்கும் விதமாக, துக்கத்தில் இருக்கும் விஜய்க்கு ஆறுதல் சொல்கிற விதமான வார்த்தைகள் அது. அப்படி சொன்ன முதலமைச்சரை பழிவாங்குகிறார் என்று சொல்கிறார் விஜய். எங்கேயும் நடக்காதது கருரில் நடக்கிறது என்று விஜய்க்கு முன்பாக தவெக ஐ.டி. விங் சொல்லிக் கொண்டிருக்கிறது. 15 பேர் கத்தியை வைத்து பொதுமக்களின் முதுகில் கிழித்தார்கள் என்று வதந்தி பரப்புகிறார்கள். உயிரிழந்த யாராவது ஒருவருடைய உடலிலாவது இரத்தத்தை பார்த்தோமா? பிரேத பரிசோதனை செய்து உடல் முழுவதும் சுற்றுப்பட்ட உடல்களில் எப்படி ரத்தம் தெரியும்? ஆனால் கிட்டத்தட்ட 7.45 மணி முதல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டுவரப்பட்ட எந்த உடலிலாவது ரத்தம் இருந்ததா? மின்சாரம் எப்படி தடைபட்டதாக சொல்கிறார்கள். அந்த ஜெனரேட்டர் மீது தவெக தொண்டர்கள் போய் விழுகிறார்கள். சட்டத்தை மீறி, அதை துளி மதிக்காமல் தொண்டர்கள் நடந்துகொள்கிறார்கள். விஜயின் ஆலோசனையின் பேரில்தான் அப்படி நடந்துகொள்கிறார்கள்.
தவெகவின் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த அறிவழகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டவர்கள், அந்த நிகழ்ச்சியில் இருந்துதான் அழைத்துவரப்பட்டவர்களா? பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்ட உடல்கள் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களா? அல்லது மருத்துவமனையில் ஏற்கனவே வேறு விதமாக உயிரிழந்தவர்களா? என்று கேட்டுள்ளார். மனசாட்சி இல்லையா? இவ்வளவு பேசுகிற விஜய் நேரடியாக நீலாங்கரை காவல் நிலையத்திற்கு சென்று சரணடைய வேண்டியது தானே. கரூர் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்கிறேன். சட்டத்திற்கு என்னை ஆட்படுத்திக் கொள்கிறேன் என்று வீடியோவை உடகார்ந்து பேசிய பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சென்று சரணடையலாம் அல்லவா? தவறே செய்யாதபோது எதற்காக என்னை பிடித்துக்கொள்ளுங்கள் என்று சவால் விடுகிறீர்கள்?. ஒவ்வொரு கூட்டத்திற்கு சரியான நேரத்திற்கு போகாதீர்கள் என்று சொன்ன நபரை அவர் இழுத்து கன்னத்தில் அரைய வேண்டும்.
விஜய்க்கு எந்த அரசியல் கட்சி தலைவர் வேண்டும் என்றாலும் ஆறுதல் சொல்லட்டும். ஆனால், நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று விஜய் சொன்ன பிறகும், அவர் பின்னால் எடப்பாடி, அண்ணாமலை என யார் நின்றாலும் அது தமிழ்நாட்டிற்கும், கூட்டநெரிசலில் பலியான 41 பேருக்கும் செய்கிற பச்சை துரோகமாகும். கரூர் விவகாரத்தை ஒரு சாக்காக வைத்து அவரை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுகிறது. வெளிப்படையாக வெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள், என்டிஏ கூட்டணிக்கு வந்துவிடுங்கள். இங்கே போனால்தான் உங்களுக்கு வாய்ப்பு. அதிகாரம் கையில் இருந்தால் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. எடப்பாடியிடம் சென்றால்தான் எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்கிறார்கள். இந்த மாய வலைக்குள் விஜய் சிக்கிவிட்டாரோ என்று நினைக்கிறேன்.
அவர் அரசியல் ரீதியாக பாஜகவிடம் செல்லட்டும். குருமூர்த்தியை பார்க்கட்டும் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு, திரைக்கு பின்னால் அவர்கள் சொல்கிற ஆலோசனைப்படி செயல்படுகிறார்கள். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தவெக வழக்கறிஞர் அறிவழகனுக்கு பக்கத்தில் பாஜக வழக்கறிஞர் நிற்கிறார். என்னை விஜய் சந்திக்கவில்லை என்று குருமூர்த்தி ட்விட் போட்ட பிறகும் பாஜக வழக்கறிஞர் போய் நிற்கிறார் என்றால்? ஏதோ நடக்காமல் போய் நிற்குமா? சந்தேகம் வரும் அல்லவா? அதனால்தான் மனசாட்சியே இல்லாமல், ஒரு நேர்மை அற்றவராக இன்னொருமுறை தன்னை காட்டிக்கொண்டாரா விஜய் என்று தான் நான் அந்த வீடியோவை பார்க்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார்.