spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

விஜய், பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது! பத்திரிகையாளர் ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் பாஜக பக்கம் செல்வது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், இதனால் பாஜக அணி – பாஜக எதிர்ப்பு அணி என்கிற தெளிவான நிலை ஏற்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் மரணம் குறித்த நடிகர் விஜயின் வீடியோ பதிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கரூர் கூட்டநெரிசல் விவகாரம் விஜயின் அரசியலுக்கு ஒரு வேகத்தடை போன்று அமைந்துவிட்டது. ஒரு அரசியல் தலைவராக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விஜய் சந்தித்து இருக்க வேண்டும். நடுநிலையாளர்கள் மத்தியில் விஜய்கு குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லையா? என்கிற கேள்வி எழுகிறது. விஜய் நேரில் செல்லாததை விஜயின் ரசிகர்கள் வேண்டுமானால் நியாயப்படுத்தி கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற ஒரு சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்க வேண்டியதுதான் ஒரு அரசியல் தலைவரின் கடமையாகும். கரூரில் நடந்தது ஒரு துயர சம்பவம். இந்த சம்பவத்தை விஜய் அரசியலாக்குகிறார். என்னை என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்கள். என் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று வீடியோவில் விஜய் சொல்கிறார். தனக்கும், மக்களுக்கும் உண்மை தெரியும் என்று விஜய் சொல்கிறார். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. தவெக தரப்பிலும் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மக்கள் சொல்கிறதை பார்க்கிறபோது கடவுளே தன்னிடம் வந்து சொன்னது போன்று இருப்பதாக விஜய் சொல்கிறார். இந்த சதி போன்ற விவகாரங்கள் அரசியல் ரீதியாக  அவருக்கு கை கொடுக்குமா? என்பது போக போக தான் தெரியும். ஆனால் இது முழுக்க முழுக்க இது ஒரு விபத்து. அவரை பார்க்க ஒரு பெருங்கூட்டம் வந்தது. விஜய் நேரம் தவறி வந்தார். கூட்டம் அதிகரித்து, அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் பலர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு பின்னால் எந்த சதியும இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இதுவரை 5 கூட்டங்கள் நடத்தினோம். இங்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று விஜய் கேட்கிறார். இவர்களுடைய நோக்கம், கருரில் செந்தில் பாலாஜி மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். எனவே விஜய் கரூருக்கு சென்று அவரை விமர்சித்து பேசுவார் என்பது அனைரும் அறிந்த ஒன்றுதான். செந்தில் பாலாஜியின் ஆட்சியில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கியதாக சொல்கிறார். ஏன் தங்கமணி ஆட்சிக்காலத்தில் பாட்டிலுக்கு பணம் வாங்கவில்லையா? அவர் நேர்மையான தலைவர் என்றால் பொதுவாக இரண்டு கட்சிகளையும் சேர்த்து தான் பேசி இருக்க வேண்டும். ஆனால் விஜய் செந்தில் பாலாஜியை மட்டும் குறிவைத்து பேசுகிறார் என்றால், அப்போது அதிமுக ஊழலை கண்டுகொள்ளவில்லை என்று தானே அர்த்தம். அது என்ன விதமான கண்ணோட்டம்.

முதலமைச்சர் பழிவாங்குகிறார் என்று விஜய் சொல்வது முழுக்க முழுக்க அரசியல் தான். இந்த சோக சம்பவத்திற்கு தானும் ஒரு காரணம் என்பதை முற்றிலும் மறைத்துவிட்டு முதலமைச்சர்  மீது குற்றம்சாட்டுவதன் மூலமாக அவருடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார். இப்படி செய்தன் மூலமாக நடுநிலையாளர்களின் அனுதாபங்களை அவர் இழக்கிறார். கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஆனால் அதைவிட கூடுதல் பொறுப்புகள் விஜய்க்கு உள்ளது.  விஜய் இன்னும் வலிமையாக கட்சியை நடத்துவேன் என்று சொல்வது நல்ல விஷயம். அதேசமயம் பாஜக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு விஜய் நன்றி சொல்கிறார். பாஜக – அதிமுகவை பொறுத்தவரை இந்த விஷயத்தை திமுக அரசுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் இந்த விஷயத்தை கையில் எடுக்கிறபோது, இயல்பாகவே விஜய்க்கு ஆதரவாக பேசுகிற நிலைமை உருவாகி விடும். அதுமட்டுமின்றி திமுகவை வீழ்த்த எப்படியாவது தங்களுடைய கூட்டணிக்குள் விஜயை கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் உள்ளது. அதனால் விஜய்க்கு ஆதரவாக பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

விஜய், என்டிஏ கூட்டணிக்கு செல்வதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய் தனது கரூர் மாநாடு வரை பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்று சொன்னார். பாசிச பாஜக என்று சொல்கிற விஜய், கரூர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பயந்து பாஜகவிடம் கூட்டணிக்கு செல்கிறார் என்றால் அது தமிழ்நாட்டு அரசியலுக்கு நல்லது. அப்போதுதான் பாஜக கூட்டணி, பாஜக எதிர்ப்பு கூட்டணி என்கிற தெளிவான அணிகள் ஏற்படும்.

விஜய் – பாஜக – அதிமுக கூட்டணி உருவாகிறது என்றால்? இந்த அணியை எதிர்க்க திமுக இன்னும் வலிமையாக வரும். விஜய், பாஜக அணிக்கு செல்லும் வாய்ப்புகள் மிக மிக குறைவாகும். பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு முதல் தேர்தலிலேயே அந்த கட்சியுடன் கூட்டணிக்கு சென்றால், மக்கள் விஜய் மீதான நம்பிக்கையை இழப்பார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகும் விஜயின் ரசிகர்கள் அவர்களுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவருடைய  ரசிகர்கள் என்கிற பெயரில் அதிமுக, பாஜக ஐ.டி.விங் நன்றாக வேலை செய்கிறார்கள். வி ஸ்டாண்ட் வித் விஜய் ட்ரெண்ட் செய்தது அவர்கள்தான். அதேவேளையில் நடுநிலையான மக்களின் மனநிலை மாறிவிட்டது.

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தமிழ்நாட்டில் கூட்டணிகளை கூர்மைப்படுத்துமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அணிகள் சேர்கிற போது விஜய், அதிமுக – பாஜக கூட்டணியில் இணைகிறார் என்றால் அதுதான் விஜயின் அடுத்த பின்னடைவாகும். தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவுக்கு எதிரான ஒரு வாக்கு வங்கி உள்ளது. அதுதான் திமுகவுக்கு முக்கியமான வாக்கு வங்கியாகும். அப்போது விஜய் அதிமுக – பாஜக அணிக்கு செல்கிறபோது நிச்சயமாக தோல்வியை சந்திப்பார். பாஜக – அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டிய நெருக்கடியான சூழல் விஜய்க்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சிவகங்கை இளைஞர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக, தற்போது சிபிஐ விசாரணை கேட்கிறது. ஒருவேளை பாஜக – அதிமுக கூட்டணி இருப்பதால், சிபிஐ விசாரணை வந்தால் சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைக்கலாம்.

மாநில அரசு விசாரித்தால் தங்களை கைது செய்துவிடுவார்கள் என்கிற அச்சம் இருக்கலாம். இந்த விவகாரத்தின் உள்ளே ஒரு அரசியல் விளையாட்டு இருக்கிறது. ஆனால் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள விஜய் தயாராக இருந்தால், அவர் பின்னாடி கட்சி கட்டுக்கோப்பாக நிற்க வாய்ப்பு உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை அடுத்த 6 மாதத்தில் தேர்தல் இருக்கிறது. எனவே அவர் ஒவ்வொரு அடியாக பார்த்து வைக்கிறார். ஆனால் பொது இடத்தில் 41 பேர் உயிரிழந்திருக்கக்கூடிய நிலையில், இதில் விஜயை விசாரணைக்கு உட்படுத்த வேண்டி இருக்கிறது. ஆனால் விஜய் மீது வழக்குப்பதிவு செய்வதால், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டினார் என்கிற பெருமை வரலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ