திராவிடச் செல்வி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு என்ற கிராமத்தில் மே 5. 2025 அன்று இரவு இரு ஜாதிப் பிரிவினர்களிடையே மோதல் ஏற்பட்டது. அம்மோதல் தீவிரமடைந்து ஒரு பேருந்து உடைப்பு, நான்கு இருசக்கர வாகனங்கள் எரிப்பு, பட்டியலின மக்களின் குடிசை எரிப்பு, மேலும் 3 வீடுகள் சேதம், அரிவாள் வெட்டு என்ற வகையில் மிகப்பெரிய சாதிக் கலவரமாக மாறியது. இக்கலவரத்திற்குக் காரணம் இருபது ஆண்டுகளுக்கும் மேலான கோயில் தொடர்பான பகையானாலும் கூட கலவரம் நடந்த அன்று முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பட்டியலினப் பறையர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை ஜாதிப் பெயர் சொல்லி இழிவாகப் பேசியதுதான் காரணம் எனக் கூறப்படுகிறது.இந்நிலையில் 13 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் நீதிமன்றம் விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையும் வழங்கும் என நம்புவோம். இந்த உலகை அறிவியல் ஆண்டு கொண்டிருக்கும் இந்தக் காலத்திலும் கூட ஜாதிக் கலவரங்கள் நடக்க என்ன காரணம்?
அண்ணல் அம்பேத்கரின் ஆய்வுப்படி ஜாதி என்பது ஒரு நோயுற்ற மனநிலை. பாா்ப்பனியக் கோட்பாட்டை உள்வாங்கிய மனநிலை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற படிநிலையைக் கற்பிக்கும் மனநிலை, பாா்ப்பனியக் கோட்பாடு என்பது அறிவற்ற மனநிலையின் பொருளற்ற, பகுத்தறிவற்ற, உணர்ச்சிகளின் கொந்தளிப்புகள் என தன் ஆய்வு அறிக்கையில் அம்பேத்கர் குறிப்பிடுகிறாா். சமூகத்தில் தன்னை மேல் ஜாதிக்காரன் என்று கருதிக்கொள்ளும் எவளும் தன்னை உயர்ந்தவன் என்றும், ஜாதியப் படிநிலையில் தனக்குக் கீழ் இருப்பவனைத் தாழ்ந்தவன் என்றும், கருதும் இரண்டாயிரம் ஆண்டுகால, பிறப்பின் அடிப்படையிலான பேதம் இன்னும் வீரியம் குறையாமல் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.

இரண்டாயிரம் ஆண்டுகாலமாக கல்விகற்கும் மற்றும் கற்பிக்கும் உரிமையை வலுக்கட்டாயமாகப் பெற்று சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பார்ப்பனர்கள் தங்கள் கருத்தாக்கத்தால் பார்ப்பனர் அல்லாத அனைத்து மக்களையும் சமூகத்தில் மிகவும் கீழ் நிலையில் தள்ளி இருக்கிறோம் என்ற எந்தவொரு குற்ற உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார். பஞ்சமர், தீண்டப்படாதோர் என்ற அய்ந்தாவது வருணம் உருவாகும் வரை சூத்திரர்கள் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய தாழ்ந்தவர்களாகவே பார்ப்பனர்களால் கருதப்பட்டு வந்தனர். சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் உள்ள பார்ப்பனர்களின் செயல்பாடுகள் அடுத்தடுத்த வருணங்களுக்குக் கடத்தப்படுகின்றன.
இதனை அம்பேத்கர் “போல செய்தல்” என்று குறிப்பிடுகிறார் பார்ப்பனர்கள் செய்த அனைத்துக் கொடுமைகளையும் ஒவ்வொரு இந்துவும் தனக்கு அடுத்த படிநிலையில் உள்ள இந்துக்கள் மீதும் செய்து வந்திருக்கின்றனர். ஆனாலும் அவற்றில் பஞ்சமர்கள் அல்லது தீண்டப்படாதோர் அடைந்த கொடுமைகள் மிகப்பெரியது.
ஜாதி இந்துக்கள் செய்யும் செயல்களை தீண்டப்படாதோர் செய்யும் போதும், அவர்களுக்குச் சமமாக நடக்கும் போதும் அச்செயல் அவர்களை அவமானப் படுத்துவதாகக் கருதுகின்ற ஒரு கீழ்த்தரமான மனநிலையின் வெளிப்பாடுதான் இத்தகைய கொடுமைகளுக்குக் காரணம் என சில உதாரணங்களை அண்ணல் அம்பேத்கர் பட்டியலிடுகிறார். அவை:
1. குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க உரிமை கோரியதற்கு
2. பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்க உரிமை கோரியதற்கு
3. திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளையை குதிரை மீது அமர வைத்ததற்கு
4. நல்ல துணிமணிகளை அணிந்து கொண்டதற்கு
5.செம்பு போன்ற உலோகப் பாத்திரங்களைப் பயன்படுத்தியதற்கு
6. விவசாய நிலங்களை வாங்கியதற்கு
7. உடம்பில் பூணூல் அணிந்ததற்கு
8. செத்த மாடுகளைத் தூக்க மாட்டோம், அழுகிப்போன இறைச்சியை உண்ண மாட்டோம் என மறுத்ததற்கு
9. வீதிகளில் காலுறையோடும் செருப்போடும் நடந்ததற்கு
10. ஜாதி இந்துக்களை முதுகை வளைத்து வணங்காததற்கு
11. மலம் கழிப்பதற்காக செப்புக் குவளையில் நீர் கொண்டு போனதற்கு
12. இரவு விருந்தில் கோதுமை ரொட்டி சாப்பிட்டதற்கு, என்பன போன்ற மேற்கண்ட அற்பக் காரணங்களுக்காக தீண்டப்படாதோர் தாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 31.5.1936 இல் பம்பாய் தாதரில் நடந்த மாநாட்டில் அண்ணல் அம்பேத்கர் உரையாற்றி இருக்கிறார். 89 வருடங்கள் கடந்த பிறகும் கூட இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்களும் கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையாலும், போராட்டங்களாலும், திராவிட இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளாலும் இன்று இத்தகைய தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவு நீர்த்துபோகச் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் முழுமையாகத் தீர்ந்த பாடில்லை.
தீண்டாமைக் கொடுமைகள் சமூகத்தில் நிகழாவண்ணம் ஜாதிய இந்துக்கள் பார்ப்பனியக் கோட்பாடுகளைக் கைவிட்டு பெரியார் கூறியதைப் போல தேசாபிமானியாகவோ பாஷாபிமானியாகவோ இல்லாமல் மனிதாபிமானியாக கண்டிப்பாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. சக மனிதனை சகோதரனாகப் பார்க்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிறப்பால் ஒருவனை இழிவுபடுத்தும் பார்ப்பனியச் சிந்தனையில் இருந்து பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவச் சிந்தனைக்கு மாற வேண்டும்.
மனித சமூகத்திற்குக் கேடாக இருக்கும் ஜாதியையும் தீண்டாமையையும் விட்டு மனதளவில் மாற்றம் காண வேண்டும். ஜாதியற்ற சமத்துவ, சகோதரத்துவ, சுதந்திர வாழ்வு வாழ, ஒவ்வொருவரும் நம் சிந்தனையை பெரியாரிய அம்பேத்கரிய வழியில் கூர் தீட்டுவோம். எதிர்கால இந்தியா ஜாதியற்ற இந்தியாவாக மாறட்டும்.
பெண்கள் பாதுகாப்புக்கான “ஒன் ஸ்டாப் சென்டர்” (One Stop Centre – SAKHI)