சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 மாதங்களே உள்ள நிலையில், அடுத்து வரும் மாதங்களில் திமுக அரசுக்கு பாஜக பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.
1996 சட்டமன்ற தேர்தலில் பொருத்தமில்லா அதிமுக – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது போல, நடப்பு தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியை சந்திக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- திமுகவை பொருத்தவரை தமிழ்நாட்டில் அண்ணாமலையும் நீடிக்க வேண்டும். ஆளுநரும் நீடிக்க வேண்டும். திமுகவின் வாக்கு வங்கியை இவர்கள்தான் கூர்மைப் படுத்துகிறார்கள். ஆளுநர் என்ன சொல்கிறார் என்று யாருக்கும் தெரியாது. வள்ளலாரை சனாதனவாதி என்பார்’. கம்பரை எல்லாரும் மறந்துவிட்டார்கள் என்று சொல்வார். எதிரிகளின் தவறுகளை ஏன்? திமுக ஏன் திருத்த வேண்டும். அதுபோல அண்ணாமலையின் தவறுகளையும் நாம் திருத்த வேண்டியது இல்லை. பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரனையோ அல்லது அதிமுகவுக்கு அணுக்கமான ஒருவரையோ கொண்டுவந்து விட்டால் அண்ணாமலை செய்த எல்லா தவறுகளும் காலத்தால் மறக்கப்பட்டு விடும். அதனால் அண்ணாமலை மாற்றப்படாமல் இருப்பது திமுகவுக்கு நல்லது என்று நினைக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை தொடர்ந்தால் அதிமுக பாஜக கூட்டணிக்கு வராது. அண்ணாமலையை மாற்றுவது குறித்து அமித்ஷா தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் மோடி இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஒருவேளை மோடி மாற்றம் இல்லை என்று சொல்லிவிட்டால் அண்ணாமலையின் கைகள் ஓங்கிவிடும். இதற்கு பின்னரும் அண்ணாமலை நீடித்தால் அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்களே அச்சப்படுவார்கள்.
அதிமுக பாஜக கூட்டணி என்பது 2023 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலே முறிந்துவிட்டது. அதற்கு பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து என்டிஏ கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பிரதமருக்கு அருகில் உட்கார வைத்து, அவருக்கு மாலை போடும் இடத்தில் நிறுத்தி தென்னிந்தியாவின் முகம் என்று பிரதமரால் பாராட்ட செய்து, முயற்சித்தார்கள். அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் சேர்ப்பதில் எடப்பாடி பழைய நிலைப்பாட்டிலேயே உள்ளார். அவர் பிரிந்தவர் என்று சொல்வது ஓ.பி.எஸ்-ஐ தான். டிடிவி தினகரன் தனிக்கட்சி வைத்துள்ளார். டிடிவி எந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ளாரோ அந்த கூட்டணியில் எடப்பாடி இணைய போகிறார். இதில் கேள்வி என்பது ஒபிஎஸ் மட்டும்தான். அப்படி என்றால் ஓபிஎஸ்-ஐ பாஜக தியாகம் செய்திட வேண்டும். அல்லது அவர் பாஜகவில் இணைந்திட வேண்டும். சசிகலாவுக்கு, கட்சியில் கவுரவ பொறுப்பு வழங்கினால் போதும்.
மேலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நீக்கம். அதை பாஜக நிறைவேற்றிதான் ஆக வேண்டும். அண்ணாமலை அளித்த பேட்டி என்பது ஏமாற்றத்துடன் தான் அமைந்திருந்தது. பிரதமர் பீகார் உள்ளிட்ட மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று சொல்லியுள்ளார். இதனால் அவருக்கு மத்திய அமைச்சராகும் வாய்ப்பு உள்ளது. அண்ணாமலைக்கு, தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை எம்.பி. ஆகும் வாய்ப்பில்லை. பாஜக ஆளும் அசாம் அல்லது பீகாரில் இருந்து அவர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படலாம்.
1996 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும், காங்கிரசும் தொடர்ச்சியாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி அமைந்தது. அப்போது அந்த கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு ஏற்பட உரிய கால அவகாசம் இல்லை. தற்போது அதிமுக – பாஜக கூட்டணிக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஒரு வருட கால அவகாசம் இருக்கிறது. இந்த காலகட்டத்திற்குள் 2 கட்சிகளும் தங்களுடைய வேறுபடுகளை மறந்துவிடுவார்கள். அவர்களது பழைய காயங்கள் எல்லாம் மறைந்துவிடும். 1996ஆம் ஆண்டு அந்த கால அவகாசம் இல்லாமல் போனது பெரிய குறைபாடு ஆகும்.
மற்றொன்று ஜெயலலிதா ஆட்சி மீது இருந்த வெறுப்பும் அதிகம். வளர்ப்பு மகன் திருமணம் என்று போட்டி போட்டிக்கொண்டு அவர்களே சொந்த வெறுப்பை வளர்த்துக்கொண்டார்கள். இதற்கு இன்னொரு உதாரணமும் உள்ளது. 2011 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் திமுகவின் கையை முறுக்கி கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட சீட்டுகளை வாங்கியது. ஆனால் 6 க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெற்றார்கள். அதுவும் பொருந்தாக்கூட்டணி. பொதுவாக பொருந்தாக்கூட்டணி, அவசர கூட்டணி போன்றவை சரியாக வராது தான். அதனால் தான் ஒரு வருடத்திற்கு முன்னதாக உருவாக்குகிறார்கள். தொண்டர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்துகொள்ளும் போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படும் என நினைக்கிறார்கள்.
பொதுவாக தமிழ்நாடு அரசியலில் பாஜக என்பது மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகும். அதனுடன் கூட்டணி சேர்வது என்பது இழப்புதன். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அடுத்து வரும் 12 மாதங்களில் இந்த ஆட்சி என்ன என்ன பிரச்சினைகளை சந்திக்க போகிறது என்று தெரியவில்லை. 12 மாதங்கள் என்பது மிகவும் நீண்ட காலகட்டமாகும். ஏனென்றால் 2006- 2011 ஆட்சி காலத்தில் மின்சார வெட்டு என்பது முக்கிய பிரச்சினையாகும். ஆனால் உண்மையான பிரச்சினை 2-ஜி விவகாரத்தில் தான் வந்தது. 2ஜி வழக்கு தமிழ்நாடு தேர்தலில் பின்னடைவாக மாறியது. கடைசியில் அந்த வழக்கில் இருந்து இருவரும் விடுதலையானார்கள். 2011ல் தோற்றது மீண்டும் 2021ல் தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஒரு மாதத்தில் ஏற்பட்ட பின்னடைவு 10 வருட ஆட்சியையே காலி செய்துவிட்டது.
அடுத்த 10 முதல் 12 மாதங்கள் எப்படி போக போகிறது என்று நமக்கு தெரியாது. இந்த 12 மாத காலத்தில் திமுக அரசுக்கு பாஜக பல்வேறு குடைச்சல்களை கண்டிப்பாக கொடுக்கும். 1996 காங்கிரஸ் கூட்டணி நிர்பந்தப்படுத்துவதற்கு முன்பு வரிசையாக அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றன. சசிகலா மீது வழக்கு, ஜேஜே டிவியில் சோதனை நடத்தி நெருக்கடி கொடுத்தார்கள். அதுபோல நெருக்கடிகளை தாண்டி தான் திமுக வர வேண்டும். அடுத்த 10 மாதங்கள் தமிழ்நாடு அரசியலை பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டம். அதைநோக்கிய பயணம்தான் இது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.