மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.

மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில் (பெருமாள் கோவில்களில்) திருப்பாவையும், சைவ சமய கோவில்களில் (சிவன் கோவில்களில்) திருவெம்பாவையும் பாடப்படுகிறது.


மார்கழி மாதம் தெய்வ வழிபாட்டுக்காகவே உருவான மாதம் என்பதால் இந்த மாதத்தில் மங்கள காரியங்கள் எதுவும் நடத்தப்படுவதில்லை.மார்கழி மாதத்தின் தனி சிறப்புகள் வீதி எங்கும் வண்ணக் கோலங்கள் மின்னுவதும் விடியற்காலையில் ஒலிக்கும் பஜனை பாடல்களும் ”மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம்” என்று கோதை நாச்சியார் திருப்பாவையில் ஆராதனை செய்த மாதம் இது. மணம் ஆகாத பெண்கள் அவர்கள் நினைத்தபடி வரணமைய மார்கழி மாதத்தில் அதிகாலையில் நீராடி திருப்பாவை பாடல்களை மனமுருக பாடுவதை காண முடிகிறது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களை பொருத்தவரை ஒருநாள் கால அளவே ஆகும். அந்த வகையில் கணக்கிட்டால் நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே. அதாவது ஒரு மாதத்திற்கு இரண்டு மணி நேரம் விகிதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் ஒரு நாள். இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது இந்த காலத்தை உத்திராயணம் என்று அழைக்கிறோம், ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை 6 மாத காலம் இரவு பொழுதாக அமைகிறது.
இவற்றை தேவர்களின் பகல் பொழுது, இரவு பொழுது என்றே கூறுவர். இதை தட்சிணாயணம் என்று அழைகிறோம். இதற்கு வடக்கு, தெற்கு என்று பொருள்.
தேவர்களை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் ஆறு மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலம் இட்டு,கோலத்தின் நடுவே விளக்கேற்றி, சாணத்தில் பூசணிப்பூ வைப்பர். இந்த அதிகாலை நேரத்தில் வீசும் காற்று உடலுக்குப் பல நன்மைகளைச் செய்யக்கூடியது என்பதாலேயே அந்த வேளையில் எழுந்து கோலமிட்டு, நீராடி, கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். பாற்கடல் கடையப்பட்டதும், மகாலட்சுமி அவதரித்ததும், அமுதம் பெற்றதும் இந்த மார்கழியில் தான். ஆகையால் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவோம் என்பது ஐதீகம். இதனால் மனதில் மகிழ்ச்சி பொங்கும் என்பது ஒரு நம்பிக்கை.

மார்க்கண்டேயர் புராணத்தில், மார்க்கண்டேயர் தனது 16 வயதில் மரணம் தனக்கு நிச்சயம் என்பதை உணர்ந்து உலக வாழ்வை தவிர்த்து விட்டு இறை சிந்தனையோடு சிவலிங்கத்தை பூஜித்து வந்தார். தனது அதீத பக்தியினால் சிவபெருமானை கட்டி தழுவிருந்தார். அவரை கொண்டு செல்ல நினைத்த எமதர்மனையே சிவபெருமான் வதைத்த கதை தான் மார்க்கண்டேய சரித்திரம். ”மரணத்தை வெல்லும் மார்கழி” என்பதே இந்த மாதத்தின் சிறப்பு. எனவேதான் ம்ருத்யுஞ்ஜய ஓமம் செய்ய மார்கழி மாதத்தை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆண்டாள் அரங்கநாதனை மணாளனாக அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு விரதம் இருந்த மாதம் மார்கழி. ராம பக்த ஆஞ்சநே பெருமானும் மார்கழி மாதம் அமாவாசை அன்று அவதரித்தார்.

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதேசி வைகுண்ட ஏகாதேசி என கொண்டாடுகிறோம். இந்துக்கள் எல்லோரும் விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதேசி. அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது,அன்றைய தினத்தில் பெருமாளை தரிசிப்பவர்கள் மோட்சம் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் ஆடல்வல்லான் சிவபெருமானின் திருவாதிரைத் (ஆருத்திரா) திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. சிதம்பர கனக சபை அரங்கேரிய இந்த பௌர்னமி நாளில் ஆருத்திரா தரிசனம் கொண்டாடப்படுகிறது.

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இம்மாதம் தனுர் மாதம் என்று அழைக்கப்படுகிறது. தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான், குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவ கிரகங்களின் அரசனாகிய சூரியன் குருகுல வாசம் செய்யும் நேரம் என்பதால் அந்தக் காலத்தில் உயிர்க்கொலை கூடாது என்பதால் அரசர்கள் உட்பட சத்ரியர்கள் யாரும் போர் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் என கூறப்படுகிறது.

”மாதங்களில் நான் மார்கழி”என கீதையில் கண்ணன் சொன்னது பக்தி மார்க்கத்தால் மட்டுமே என்னை அடைய முடியும் என்பதை நாம் உணர வேண்டியது அவசியம்.

ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் கிருஷ்ணபரமாத்மாவின் ஒவ்வொரு பெயரையும் சொல்லி அழைக்கிறது வேதம். அந்த வகையில் மார்கழிக்கான பெயர் “கேசவன்” கண்ணனின் நாமாவளிகளில் உன்னதமான சிறப்பினைக் கொண்ட பெயர் கேசவன். அழகிய கூந்தலைக்கொண்டவர் என்பதாலும், கேசி என்ற அசுரனைக் கொன்றதாலும் கிருஷ்ணர் ‘கேசவன்’ எனப்போற்றப்பட்டார்.

‘மாதாவை வணங்காத குழந்தையும், மார்கழியில் இறைவனை வணங்காத மனிதனும் வீண்’ என்பார்கள். இந்த அற்புதமான மார்கழி மாதத்தில் ஆண்டவனை மனமார துதித்து மகிழ்ச்சியான வாழ்வினை மேற்கொள்வோம்.