spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா

-

- Advertisement -

சென்னை தனியார் கல்வி நிறுவனம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ஒற்றையர் மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழாஇந்நிலையில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் 2032 ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் நோக்குடன், வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் இந்த வருடத்திற்கான ஊக்கத் தொகையாக ரூபாய் 2 கோடியே 7 லட்சம் வழங்கப்பட்டது.

we-r-hiring

இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மனு பாக்கர், பிரதமர் உங்களை போனில் அழைத்து பேசியது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு, பிரதமர் என்னை அழைத்து பதக்கம் வென்றதற்காக பாராட்டினர், அடுத்தடுத்த பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. நான் வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என எதிர்பார்த்தேன், ஆனால் வெண்கலம் தான் கிடைத்தது. சிறிய புள்ளி அளவில் தான் வெள்ளிப் பதக்கத்தை தவற விட்டேன். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என பேசினார்.

கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டையும் எவ்வாறு சமாளித்தீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் கல்வியையும் விட்டுக்கொடுக்கவில்லை, விளையாட்டையும் விட்டுக் கொடுக்கவில்லை. நீங்கள் தான் உங்கள் கல்வி மற்றும் விளையாட்டை சரி சமமாக கையாள வேண்டும். எனது பெற்றோர் நான் கல்வி பயில்வதை எனது மதிப்பெண் அட்டை மூலமாக கண்காணித்து கொண்டே இருப்பார்கள். கல்விக்கும், விளையாட்டுக்கும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க செய்தார்கள் என பேசினார்.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழாமேலும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு, எனக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும், எனது வீட்டில் எனது அம்மா சமைக்கும் தோசை மிகவும் பிடிக்கும் என பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலினை தெரியுமா என்ற கேள்விக்கு, தெரியாது என்று பதில் அளித்த மனு பாக்கர் பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு, நன்றாக தெரியும் என்றும், நடிகர் விஜய் தெரியுமா என்ற கேள்விக்கு, விஜய் ‘ஐ தெரியும் எனவும் அவர் பதில் அளித்தார்.

உங்களுக்கு ஷூட்டிங் விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது என்று மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு, எனக்கு பள்ளிப் பருவத்தில் தான் ஷூட்டிங் மீது ஆர்வம் வந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்து தான் தேசிய ஷூட்டிங் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழாஎன் உடல் வலிமையை கொண்டு குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்த நான், ஷூட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அது தான் எனது முதல் படி எனவும், யாரை உங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு,  மற்றொருவரை போல வர முயற்சி செய்ய வேண்டாம். உங்களின் ஒரு நல்ல பகுதியை எடுத்துக் கொண்டு நீங்கள் நீங்களாக உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். மற்றொருவரை பார்த்து காபி அடிக்க வேண்டாம். ஆனால் ஒருவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளுங்கள் என பதில் அளித்தார்.

தொடர்ந்து மாணவியின் கோரிக்கையை ஏற்று, Dheka tenu pheli pheli bar ve எனும் இந்தி பாடலை பாடினார், அடுத்ததாக காலா சேஸ்மா எனும் இந்தி பாடலுக்கு நடனமும் ஆடினார் மனு பாக்கர்.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழாதொடர்ந்து மாணவர்கள் மத்தியில் மேடையில் பேசிய மனு பாக்கர், கடுமையான உழைப்பு இருந்தால் பெரிதாக சாதிக்கலாம், பெரிய கனவு காண்பது மூலம் பெரிய இலக்கை அடையளாம். நாம் தோல்வியிலும் தளராமல் இருக்க வேண்டும். பள்ளி காலத்தில் போட்டியில் கலந்து கொள்ள தொடங்கினேன். முதலில் வீட்டிலும் அடுத்து பள்ளியிலும்  நமக்கு ஆதரவு கிடைக்க வேணும், அது எனக்கு கிடைத்தது.

பொதுவாகவே நிறைய வேலை வாய்ப்பு உள்ளது, டாக்டர் இஞ்சினியர் மட்டுமே படிப்பு அல்ல, அதை தாண்டி நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக விளையாட்டு துறையிலும்  வேலை வாய்ப்பு உள்ளது, உலகம் சுற்ற ஆசை படுபபவர்கள் விளையாட்டு துறையயை தேர்வு செய்யுங்கள், பாதி உலகத்தை நான் சுற்றி விட்டேன்.

எப்போதும் நமது பின்புலம் பற்றி அவமானப்பட வேண்டாம், நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதெல்லாம் முக்கியமல்ல, எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது, பல விசயங்கள் தெரியாமல் இருந்தேன், பிறகு கற்று கொண்டேன், கற்று கொடுத்தார்கள். டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட போது மிகவும் பதட்டமடைந்தேன், சுயநம்பிக்கை இல்லாமல் இருந்தேன். ஒரு கட்டத்தில் அதை புறந்தள்ளி வெற்றி பெற வேண்டியிருந்தது, தோல்விகள் பல அடைந்ததால் தான் என்னால் வெற்றி அடைய முடிந்தது என பேசினார்.

இந்நிகழ்ச்சியை அடுத்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய இந்திய வீராங்கனை மனு பாக்கர், உங்கள் வெற்றிக்கான காரணம் என்ன என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ஒரு நபர் மட்டுமே எனது வெற்றிக்கு பொறுப்பானவராக இருக்க முடியாது. என் குடும்பம், பயிற்சியாளர் பால், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் பலரின் பங்களிப்பு, நம் நாட்டிற்கு பதக்கம் கிடைக்க மிகப் பெரிய காரணமாக இருந்தது. இன்னும் பல ஆண்டுகள் நீண்ட பயணம் உள்ளது என பதில் அளித்தார்.

சென்னையில் மனு பாக்கருக்கு பாராட்டு விழாஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்ற நாடுகளை விட இந்தியா பின்தங்கி இருப்பது குறித்து உங்களின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஆம் பல நாடுகள் நம்மை விட முன்னிலை வகிக்கின்றன. நாம் அனைவரும் பதக்கப் பட்டியலை உயர்த்தும் நம்பிக்கையுடன் இருப்போம். மற்ற நாடுகளிடம் ஒன்று உள்ளது, அவர்கள் குழந்தைகளை இளவயதிலேயே விளையாட்டு துறையில் முன்னோக்கி செல்ல செய்கிறார்கள். நம் நாட்டிலும் அந்த வகையான திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும், அதுவே சிறந்ததாக இருக்கும் என பேசினார்.

தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசிய மனு பாக்கர், பெண்களைப் பற்றிப் பேசினால், பெண்கள் நம் நாட்டின் 50 சதவீத மக்கள் தொகையை உருவாக்குகிறார்கள். அடிப்படை உரிமை என்பது சுதந்திரத்தின் அடிப்படையில் தான் கிடைக்கிறது. பெண்களுக்காக சமூகத்தை மேம்படுத்த அனைவரும் இணைந்து செயல் பட வேண்டும். ஒவ்வொரு நபரின் கடமையாக இது இருப்பது அவசியம். நாம் அனைவரும் இணைந்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். நாம் முன்னேற்ற பாதையில் உள்ளோம் என பதில் அளித்தார்.

மேலும் வினேஷ் குறித்து பேசிய மனு பாக்கர், அவர் எனக்கு அக்கா போன்ற மரியாதையானவர், அவரிடம் எனக்கு நல்ல மரியாதை உள்ளது, என்னை விடவும் வயதில் பெரியவர். நான் அவரை எப்போதும் போராளியாகவே பார்த்திருக்கிறேன். அவர் எல்லா சிரமங்களையும் சமாளிக்க தகுதியானவர். அவர் மீள்வதையும் நான் பார்த்துள்ளேன். அவர் இனியும் தொடர்ந்து முன்னேறுவார் என பேசினார்.

இறுதியாக மனுபாகரின் அடுத்த கட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் தற்போது ஓய்வெடுக்க விரும்புகிறேன், எனது தோளில் சுமையை குறைத்து, மூன்று மாதங்களுக்கு ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளேன். 4 அல்லது 5 மாதங்கள் கழித்து மீண்டும் எனது பணியை துவங்குவேன் என பேசினார்.

MUST READ