சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் களைகட்டிய தீபாவளி விற்பனை.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை நேற்று களைகட்டியது. தியாகராய்நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட முக்கிய வணிக மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாகவே வணிகம் சூடுபிடித்திருந்தது. குறிப்பாக நேற்று, கடைசி நிமிடப் பரிசு மற்றும் புத்தாடை வாங்க மக்கள் பெருமளவில் திரண்டனர். தியாகராய்நகர் ரங்கநாதன் தெருவில் மனித தலைகள் மட்டுமே தெரியும் அளவுக்கு கூட்டம் காணப்பட்டது.

மக்கள் பாதுகாப்பிற்காக சுமார் 1,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டதுடன், ஒலி பெருக்கி வழியாக மக்கள் தங்களின் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளுமாறு எச்சரித்தனர். சிலர் சாதாரண உடையிலும் கூட்டத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
புத்தாடைகள் வாங்கிய பின், மக்கள் பெரும்பாலும் உணவகங்கள் மற்றும் இனிப்பகங்களை நோக்கிச் சென்றனர். இதனால் உணவகங்களிலும் மக்கள் கூட்டம் பெருகி, நீண்ட நேரம் காத்திருந்து உணவருந்தும் நிலை ஏற்பட்டது.
புறநகரைப் பொறுத்தவரை தாம்பரம், மேடவாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, பூந்தமல்லி போன்ற பகுதிகளிலும் தீபாவளி ஷாப்பிங் களைகட்டியது. சாலையோர கடைகளில் அலங்காரப் பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனால் அந்த கடைகளிலும் கூட்டம் பெருகியது.
புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில் நகரை நோக்கி நுழைந்ததால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெருங்களத்தூர் முதல் பல்லாவரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். போக்குவரத்து காவல்துறையினர் இடம்தோறும் நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மழையும், நெரிசலும் இருந்தபோதிலும், தீபாவளி உற்சாகம் குறையாமல், சென்னை முழுவதும் விற்பனை களைகட்டிய நிலையில் மக்களின் மகிழ்ச்சி முகங்களில் பளிச்சிடியது.
கெட்அவுட் புஸ்ஸி – துரத்தும் லாபி! தவெகவில் அதிகரிக்கும் உட்கட்சி பூசல்! விஜயை கதறவிடும் ரசிகர்கள்!