கரூர் விவகாரத்தை சமாளிக்க தெரியாமல் விஜய் தன்னிச்சையாகவே வீட்டிற்குள் சென்று பதுங்கியுள்ளதாகவும், ஆனால் அவரை புஸ்ஸி ஆனந்த் தவறாக வழிநடத்துவதாக தகவல்கள் கசியவிடப்படுவதாகவும் பத்திரிகையாளர் மில்டன் தெரிவித்துள்ளார்.

தவெகவில் நடைபெறுகிற உட்கட்சி மோதல்கள் குறித்து பத்திரிகையாளர் மில்டன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் சம்பவம் தவெகவுக்குள் ஒரு பெரிய அதிர்வலையை கொடுத்துள்ளது. விஜய் தொடங்கி கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் வரை பெரிய அடி விழுந்திருக்கிறது. அவருடைய கட்சியில் உறுப்பினராக இல்லாமல், அவருக்கு ஆதரவாக இருந்த ஒரு பெரிய கூட்டம் பரவலாக காலியாகி விட்டது. ஒரு பிரச்சினை என்று வருகிறபோது அதை எதிர்கொள்ளாமல் விஜய் தலை தெறிக்க ஓடினார். அப்படி பட்ட ஒருவர் எப்படி நமக்கு தலைவராக இருப்பார்? என்கிற எண்ணத்திற்கு எல்லோரும் வந்துவிட்டனர்.
நடுநிலையாளர்கள் என்கிற பெயரில் இவ்வளவு நாளாக விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தவர்கள் மத்தியிலும் ஒரு ஓட்டை விழுந்துவிட்டது. அதேபோல் விஜய் குடும்பம் வரை இந்த பிரச்சினை விவாதப் பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பிரிவினர் தான் தவெக ஆதரவாளர்கள் என்கிற பெயரில் தங்களை அடையாளப் படுத்தி கொள்கிற டிவிட்டர் சமூக வலைதள ஐடிக்களாகும். விஜய், அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டை மீட்பார் என்று நம்பினார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு இவர்களே தற்போது விஜய் யார் என்று உணர்ந்து கொண்டார்கள்.
பிரபல தொலைக்காட்சிகளில் விஜய் குறித்து பல்வேறு பொய்யான தகவல்கள் கசிய விடப்பட்ட நிலையில், அவர்களை தவெகவினரே விமர்சிக்க தொடங்கிவிட்டனர். ஒட்டுமொத்தமாக விஜய்க்கு இருந்த நெக்சஸ் காலியாகி உள்ளது. விஜயை, யார் யார் எல்லாம் ஊதி பெரிதாக காட்டினார்களோ அவர்கள் எல்லோரும் இன்று பொது சமூகத்தால் கேள்வி எழுப்பப்படுகிறார்கள். விஜயை எதிர்ப்பவர்களுக்கு வலுவான ஆதாரங்களும், சான்றுகளும் கிடைத்துள்ளன.
அதேவேளையில் இவை எல்லாவற்றிலும் ஒரு பேட்டனை நாம் பார்க்கலாம். இந்த சம்பவங்கள் எதுவுமே விஜய்க்கு தெரியாது. அவரை சுற்றி இருப்பவர்கள் செய்யக்கூடிய தவறு என்று சொல்வார்கள். இதுதான் மிகவும் ஆபத்தானது. விஜய்க்கு எல்லாமே தெரியும். அவர் தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் பங்கருக்குள் பதுங்கி இருக்கிறார். அவர்தான் இந்த வழக்கு விஷயமாக யாரும் பேச வேண்டாம் என்று சொன்னார். அவர் தான் இந்த வழக்கில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துப் போய் இருக்கிறார் என்று சொல்கிறோம்.
அதேநேரத்தில் தவெகவினர் விஜயை, புஸ்ஸி ஆனந்த் கெடுக்கிறார். ஜான் ஆரோக்கியசாமி கெடுக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள். கெட்அவுட் புஸ்ஸி என்று சொல்கிறார்கள். அவர் போய்விட்டால் என்ன கட்சி அது? புஸ்ஸியை அனுப்பி விட்டால் கட்சியில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்று விஜய்க்கு தெரியாது. காரணம் தவெகவின் ஒட்டுமொத்த கட்டமைப்பும் புஸ்ஸி ஆனந்த் தான். அவருக்கு தெரியாமல், எந்த நிர்வாகியும் நியமிக்கப்பட்டது கிடையாது. அவரை வெளியே அனுப்பிவிட்டால், என்ன செய்வார்கள்? விஜயை பொருத்தவரை புஸ்ஸி ஆனந்த் என்பவர் ஒரு பிஆர்ஓ போன்றவர். அவர்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்.
அவர்கள் தரப்பில் இருந்து ஸ்டோரி சொல்ல, அதை நிறைவேற்ற ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ஜான் ஆரோக்கியசாமி போன்றவர்களை நியமித்திருந்தார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு இவர்கள் எல்லாம் தலைமறைவாகியதும் விஜய் தனித்து விடப்படுகிறார். வெளியே போய் பேசினால் மாட்டிக்கொள்வோம் என்று தனித்து இருக்கிறார். ஆனால் சுற்றி இருப்பவர்களுக்கு புஸ்ஸி ஆனந்த்தான் அவரை தவறாக வழிநடத்துகிறார் என்று தகவல் செல்கிறது. ஆனால் உண்மை அப்படி இல்லை. ஆனால் இவர்கள் புஸ்ஸி ஆனந்தை அடித்துவிட்டு, பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளலாம் என நினைப்பார்கள். இன்னும் 10 நாள் கழித்து அவர்களே விஜயை யார் என்று தெரிந்துகொள்வார்கள்.
விஜயின் மனசாட்சி தான் புஸ்ஸி. கட்சிக்கு கட்டமைப்பு வேண்டும். நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்கிற மேலிடத்திடன் உத்தரவை செய்து கொடுப்பதற்கான ஒரு மெட்டீரியல் ஆனந்த். எல்லாவற்றையும் செய்து கொண்டுவந்து அவர் கொடுத்து விட்டார். அப்படி நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் பேசுவது சூப்பர் ஸ்டாரான விஜய்க்கு சரிப்பட்டு வராது. அதை பேசுவதற்கான அடியாள் தான் விஜய். அதை தாண்டி அவரால் எதுவும் செய்ய முடியாது. செய்யவும் தெரியாது. அந்த இடத்தில் புஸ்ஸி ஆனந்த் ஒரு ஓரமாக இருக்கிறார்.
இந்த பிரச்சினை அடுத்தக்கட்டமாக கட்சியை கலைப்பது. அல்லது கட்சியை கொண்டுபோய் அதிமுக, பாஜகவிடம் அடகு வைப்பதில்தான் முடியும். தற்போது அதிமுகவுடன் செல்வது தான் கட்சியில் நமக்கு இருக்கும் பலவீனங்களை மறைப்பதற்கான ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறார்கள். இந்த இடத்தை நோக்கி நகர்த்திவிட வேண்டும் என்பது தவெகவில் இருக்கிற பிரதான கோரிக்கையாகும்.
விஜயை முதலமைச்சர் ஆக்க தான் தாங்கள் கட்சிக்கு வந்திருப்பதாக நிர்வாகிகள் சொல்கிறார்கள். அதற்கு முதலில் 234 தொகுதிகளில் போட்டியிட ஆட்கள் வேண்டும். தவெகவில் எம்எல்ஏ சீட்டிற்கு ரூ.2.5 கோடி கேட்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை புஸ்ஸி ஆனந்திடம் விண்ணப்பம் கொடுத்தவர்கள் எம்எல்ஏ சீட் கேட்டிருப்பவர்கள் 5 பேர் தான். இவர்களை தாண்டி அந்த கட்சியில் தேர்தலில் போட்டியிட ஆட்கள் கிடையாது.
6 மாதத்தில் தேர்தல் வர உள்ள நிலையில் எப்படி வேட்பாளர்களை நிறுத்தி, பிரச்சாரம் செய்வார்கள். அதிமுக, தவெக, பாஜக கூட்டணி என்பதே அங்கிருந்து தொடங்கியதுதான். நாம் பலவீனமாக இருக்கிறோம். அதிமுக – பாஜக கூட்டணி சென்றால் தான் திமுகவை வீழ்த்த முடியும் தொண்டர்களை நம்ப வைப்பதற்கான சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விஜய்க்கு தான் வாக்களிப்பேன் என்று சொல்பவர்கள் அவருடைய இலக்கு அல்ல. அந்த நபர்களில் பாதி பேரையாவது அப்படியே கொண்டுவந்து அதிமுக – பாஜக கூட்டணிக்கு வலு சேர்த்தால் போதும். அந்த வேலையை வெற்றிகரமாக பாஜக கையில் எடுத்துவிட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.