விஜய்க்கு 23 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் மூலமாக பிம்பங்களை கட்டமைப்பதாகவும், இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது என்றும் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

திமுகவின் ரகசிய கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருப்பது குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக தனித்து போட்டியிட்டால் 23 சதவீதம் வாக்குகளை பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக 23 சதவீதம் வாக்குகளை வாங்கிவிட்டது என்றால் அதிமுக பூஜியமாகிவிட்டதா? திமுக 50 சதவீதம் என்கிறபோது, எஞ்சியுள்ள 27 சதவீதத்தில் தான் அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட மற்றக் கட்சிகள் பெறுமா? மற்ற கட்சிகளை எல்லாம் விழுங்கி விஜய் 23 சதவீதம் எடுத்துவிட்டாரா? இந்த கருத்துக் கணிப்பை திமுக நடத்தியதாக ஸ்கூப் நியூசை வெளியிட்டிருக்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கிறார். பாஜக கூட்டணி 18 சதவீதம் என்கிறபோது அதில் பாஜகவுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். இருவரும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் வாக்குகளை வாங்குவார்கள். நாதக 8 சதவீதம் வாக்குகள் உள்ளன. இது தவிர்த்து டிடிவி, ஓபிஎஸ், பாமகவுக்கு வாக்குகள் கிடையாதா?. எந்த அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பை நடத்தினார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற பிம்பங்கள் தொடர்ந்து உருவாக்குவார்கள். மக்கள் ஏற்றுக்கொள்கிற வகையில் இவர்கள் தொடர்ந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி கொண்டே இருப்பார்கள். எனவே இவர்களை இனிமேலும் நம்பக்கூடாது.
அதிமுக, பாஜக, தவெக கூட்டணி அமைந்தால், திமுகவுக்கு பெரிய அளவில் போட்டியாக அமையும் என்று சொல்கிறார்கள். அதிமுகவுக்கு தற்போது 20 சதவீதம் வாக்குகள் இருக்கும் நிலையில், அரசுக்கு எதிரான மனநிலை 3 சதவீதம் என வைத்துக் கொண்டோம் என்றால்? 23 சதவீதம் வாக்குகள் வரும். டிடிவி, ஓபிஎஸ் வெளியேறிய நிலையில், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கி போய்விடுவார். எனவே மொத்தம் பாஜக – அதிமுக கூட்டணியிடம் 27 சதவீதம் வாக்குகள் தான் இருக்கும். விஜய் எத்தனை சதவீதம் வாக்குகளை பெறுவார் என்று யாருக்கும் தெரியாது.
விஜயகாந்தை போன்று ஒரு தனி தொகுதியில் நின்று விஜயால் வெற்றி பெற முடியுமா? வெற்றி பெற வேண்டும் என்றால் 45 சதவீதம் வாக்குகளை பெற வேண்டும். தவெக எந்த தொகுதியில் நின்றாலும் 10 சதவீதத்திற்கு மேலாக வாக்குகளை பெற முடியாது. அதற்கு மேல் தவெக பெற வேண்டும் எனில் அதிமுக, பாஜக, நாதக என அனைத்துக்கட்சிகளும் அழிந்து விஜய் தான் ரட்சகன் என்று போனால் தான் முடியும். எனவே அதிமுக, பாஜக, தவெக கூட்டணி சேர்ந்தாலும், அவர்களுக்குளளாக தான் வாக்குகளை பிரித்துக்கொள்ள வேண்டும். சிபிஐ விசாரணை மூலமாக அமித்ஷா விஜயை காப்பாற்றி இருக்கிறார். எனவே 3 பேரும் சேர்ந்தாலும் 3ஆம் இடத்தைதான் பிடிக்க முடியுமே தவிர, அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது.
இன்றைக்கு இருக்கக்கூடிய ஜென் ஸீ கிட்கள், மோகத்திற்கும் படாடோபத்திற்கும், கற்பனை உலகத்தில் சஞ்சரிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். பி.டி.எஸ் என்கிற கொரியன் டான்ஸ் குழு உள்ளது. 6 பேர் கொண்ட குழுவினர் மனநலனை பாதுகாப்பது குறித்தும், பள்ளி பருவ மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து பேசுகிறார்கள். செல்ஃப் லவ், இன்டிவிஜுவலிசம் குறித்தும் பேசுகிறார்கள். இந்தியா உள்ளிட்ட உலகம் முழுவதும் குழந்தைகள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அவர்களுக்கு அடிமையாகி உள்ளனர். சமூக ஊடங்களில் 2 நிமிட ஷாட்ஸ், ரீல்ஸ் பார்ப்பவர்கள் தான் இருக்கிறார்கள். டான்ஸ், பாட்டு, நகைச்சுவை போன்றவற்றுக்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் அடிமையாகி உள்ளது.
இன்றைக்கு இருக்கும் மாணவர்களை சுற்றி போதை பொருட்கள், சினிமா மோகம், வீடியோ கேம்ஸ் மோகம், சமூக வலைதளங்கள் என எதாவது ஒன்றின் மீது மோகமாக உள்ளனர். கருத்துக்கணிப்பு ஒன்றில் மெட்ரோ நகரங்களில் உள்ள இளைஞர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 2.30 மணி முதல் 3 மணி நேரம் வரை சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். கிராமப்புற பகுதிகளில் உள்ளவர்கள் 2 மணி நேரம் செலவிடுகிறார்கள். அவர்களுடைய ஒட்டுமொத்த உலகமும் மாய பிம்பத்தால் கட்டுண்டு கிடக்கிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனம் மெட்டா. இந்நிறுவனத்தின் வருமானம் ஆண்டிற்கு ரூ.14 லட்சத்து 61 ஆயிரம் கோடியாகும். இது தமிழ்நாட்டின் 3.5 வருடத்திற்கான பட்ஜெட் ஆகும். டிக்டாக், பைட்டான்ஸ் என்கிற சீன நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் கோடி. குளோபல் வீடியோ கேம் தொழில்துறையின் ஆண்டு வருமானம் ரூ. 16 லட்சத்து 67 ஆயிரம் கோடியாகும். இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் ரூ.34 லட்சம் கோடியாகும். தமிழ்நாட்டின் 2025-26க்கான மொத்த பட்ஜெட் ரூ.3.32 லட்சம் கோடியாகும். இந்திய வருவாயில், மெட்டாவின் பங்கு மட்டும் 42 சதவீதம். வீடியோ கேம் 47 சதவீதம்.
மெட்டாவின் வருமானம் தமிழ்நாட்டின் பட்ஜெட்டை விட 4 மடங்கு அதிகம். இப்படி ஒட்டுமொத்த இளைஞர்கள் பட்டாளத்தையும் இந்த சமூக வலைதள நிறுவனங்கள் தன் கைகளுக்குள் வைத்திருக்கின்றன. சமூக வலைதளங்களில் இந்தியாவில் விளம்பர வருவாயாக ஆண்டிற்கு ரூ.12 ஆயிரத்து 500 கோடி கிடைக்கிறது. அரசியல் கட்சிகள் மட்டும் விளம்பரமாக ரூ.800 கோடிகளை வழங்குகின்றன. இ-காமர்ஸ் விளம்பரங்கள் மட்டும் ரூ.15,500 கோடிக்கு செய்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த இளைஞர்களையும் கைகளில் வைத்திருக்கிறார்கள்.
பிடிஎஸ்க்கு குழந்தைகள் வரை அடிமை. அதேபோல் விஜயின் டான்சுக்கு இந்த ஜென்ஸீ கிட்கள் அடிமை. இந்த 5 நிமிட சந்தோஷத்திற்கு தங்களை அடிமையாக்கி, விட்டில் பூச்சிகளாக மாறி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இளைய சமுதாயம் எப்படிப்பட்ட ஒரு பிம்பத்தில் மாட்டிக்கொண்டு நிற்கிறது என்று பாருங்கள். இவர்களை எந்த வகையில் பக்குவப்படுத்த வேண்டும்? இவர்கள் மனதில் டான்சும், பாட்டும், களியாட்டங்களும் தான் அவர்கள் மனதில் போய் நிற்கிறது. நாம் சொல்கிற அரசியல் கருத்துக்கள், தத்துவார்த்த கருத்துக்கள் எதுவும் அவர்களிடம் போய் சேரவில்லை. இப்படிபட்ட ஒரு தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று நாம் வேதனைப்பட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்த தத்துவங்களை, இந்த பக்குவங்களை அவர்களுக்கு பிடித்த மொழியில் நாம் இறக்க வேண்டும். லட்சியம் இல்லாத ஒருவரை யாரும் அடிமைப்படுத்தி விடலாம். லட்சியம் உள்ளவர்களை யாரும் அடிமை படுத்த முடியாது. அப்போது அந்த லட்சிய விதைகளை விதைக்க வேண்டிய கட்டாயம் அரசியல் கட்சிகளுக்கு, சித்தாந்தவாதிகளுக்கு, பத்திரிகைகளுக்கு பங்கு உள்ளது. ஜென்ஸீ கிட்களை நாம் குறைசொல்லி பயனில்லை. அவர்களை லட்சிய பாதைக்கு கொண்டுவருவதற்கான மிகப்பெரிய முயற்சியை அரசும் முன்னெடுக்க வேண்டும். ஊடகங்கள், படித்தவர்கள் என அனைவரும் முன்னெடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் இந்த விட்டில் பூச்சிகளை சிறகடிக்கும் கழுகாக மாற்ற முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.