கரூர் கூட்டநெரிசில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அரசுத் தரப்பின் செயல்பாடு ஏமாற்றம் அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. இது தவெகவுக்கு அரசியல் ரீதியான வெற்றியாகும். தமிழக அரசுக்கு ஆரம்ப கால பின்னடைவாக இது தெரியும். ஆனால் தாங்கள் மனுத்தாக்கல் செய்யவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாக காணொலி காட்சி மூலம் ஆஜராகி தெரிவித்துள்ளனர். அப்போது உத்தரவு பிறப்பிப்பதை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்திருக்கலாம். காரணம் உச்சநீதிமன்றம் அப்போது என்ன உத்தரவிட்டாலும், எஸ்.ஐ.டி அதிகாரிகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப் போகிறார்கள்.
தீர்ப்பு சமீபத்திய நிகழ்வுகளை கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத வேண்டும். காரணம் அது உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுகிற குற்றமாக உள்ளது. அப்போது இவ்வளவு அவசரமாக தீர்ப்பை வழங்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுகிறது. தவெக தரப்பில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணையும், பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணையும் கோரப்பட்ட நிலையில் இரண்டையும் ஏற்கும் விதமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், விஜய் மீது தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் அப்படியே இருக்கிறது. அது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அறிக்கை கேட்டிருப்பதாக சொல்கிறார்கள்.
தனி நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் என்பது அரசியல் ரீதியாக விஐயை பாதிக்கும். அது நீக்கப்படாத வரை விஜய் மீது அந்த குற்றச்சாட்டுகள் அப்படியே தான் இருக்கும். ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சூமோட்டோவாக சில விஷயங்களை சொல்வதற்கான சட்ட உரிமைகள் இருக்கிறது. தனி நீதிபதியின் தீர்ப்பில் எனக்கு தவறாக பட்டது, விஜய் தரப்புக்கு எதிராக பெரிய அளவில் விமர்சனங்களை வைக்கிற போது, ஏன் அவரது தரப்பிடம் கருத்துக் கேட்கப்படவில்லை. அவருடைய தரப்புக்கு வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும்.
அதை தாண்டி நாம் பார்க்க வேண்டியது எஸ்.ஐ.டி. தற்போது அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டு வேறு எஸ்.ஐ.டி-ஐ அமைத்து விட்டது. தமிழ் தெரிந்த, தமிழ்நாட்டை சேர்ந்த 2 அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என்று சொல்கிறது. வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றுள்ளது. சனி கிழமை உத்தரவு தயார் செய்து, ஓய்வுபெற்ற நீதிபதியின் சம்மதம் வாங்கியுள்ளனர். இந்த வழக்கில் உத்தரவு உடனடியாக வழங்கிட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இதன் பின்னணியில் இரு தரப்புக்கும் அரசியல் உள்ளது.
மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக, திமுகவை வீழ்த்த நினைக்கிறார்கள். மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் நோக்கமும் அதுதான். அதற்கு விஜய் வாக்குகள் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைப்பது வெளிப்படையாக தெரிகிறது. விஜய் தரப்புக்கு இந்த விவகாரத்தில் தாமாகவே முன்வந்து ஆதரவு கிடைக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் கூட்டணி சேர்வார்களா எனபது பல மாதங்களுக்கு பிறகு வருகிற விஷயமாகும். எனக்கு தெரிந்து கூட்டணி சேர மாட்டார்கள் என்று நினைக்கிறேன். யார் முதலமைச்சர் என்கிற ஒரே காரணம் தான். விஜய் சட்ட ரீதியாக வெற்றி கிடைத்த பின்னர் எதற்காக அவர் அதிமுக, பாஜக உடன் கூட்டணி சேர வேண்டும்? எனவே அவர்கள் அடக்கி வாசிப்பார்கள்.
சனிக் கிழமை விஜய் கரூர் செல்வதாக சொல்கிறார்கள். திங்கட்கிழமை தீபாவளி என்பதால், கடைத்தெருக்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் வியாபாரம் நடைபெறும். அப்போது காவல்துறை கடைத்தெரு கூட்டத்தை பார்ப்பார்களா? விஜய் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்ப்பார்களா? இதை அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தவெக தரப்புக்கு ஒரு நிவாரணம் கிடைத்துவிட்டது. கடந்த இரண்டு வாரங்களாக சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர் கொண்டார்கள். தற்போது உச்சநீதிமன்றமே தங்கள் தரப்பு நியாயத்தை உணர்ந்து விட்டது. இதில் சதி இருப்பதை? உணர்ந்ததால் தானே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்படி உணர்ந்ததால் தானே உச்சநீதிமன்ற நீதிபதி வந்து விசாரிக்கிறார் என்று தவெக தரப்பில் சொல்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதி விசாரணையோ அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணையோ, ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை என்பது ஒரு எல்லைக்கு தான் தெரியும். எப்படி பார்த்தாலும் அது தமிழக அரசுக்கு தான் அறிக்கையாக மாறி வரும். இரண்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கான ஒரு பணியாக தான் நான் இதை பார்க்கிறேன்.
இந்த விவகாரத்தில் திமுக சரியான எதிர்வினை ஆற்றவில்லை என்று பார்க்கிறேன். 2 பேர் சிபிஐ விசாரணை கோருகிற போது, அவர்களின் பின்னணியை தமிழக அரசுத் தரப்பு விசாரித்திருக்க வேண்டாமா? பன்னீர்செல்வத்தின் மனைவி 3 நாட்களுக்கு முன்பே அவருக்கும், தனக்கும் தொடர்பில்லை என்று பேட்டி கொடுத்துள்ளார். இவற்றை எல்லாம் ஏன் நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமையே எடுத்துக்கொண்டு போக வில்லை. இதை தாண்டியும் பல விஷயங்கள் நடைபெற்றுள்ளது. உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் திருத்தம் செய்ய தமிழ்நாடு அரசு பல படிநிலைகளை தாண்ட வேண்டும். அப்படி தாண்டக்கூடிய நிலையில், தமிழக அரசின் துறைகள் தயாராக உள்ளதா? என்பது எனக்கு சந்தேகமாகதான் உள்ளது. அவர்கள் ஒருவேளை விஜய்க்கு வாக்குகள் கூடட்டும். நமக்கு என்ன வந்தது என்று அரசியல் ரீதியாக நினைக்கிறார்களா? என்று சந்தேகம் ஏற்படுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.