கனமழை எதிரொலி- சென்னையில் விமான சேவை பாதிப்பு
கனமழை காரணமாக சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன.

வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அநேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் 2வது நாளாக இன்றும் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது. பொன்னேரி, மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பெரியபாளையம் ஆகிய இடங்களில் 2வது நாளாக நேற்றிரவு தொடங்கி அதிகாலை வரை மிதமான மழை பெய்தது. தொடர்ந்து விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் அதிகளவு மழை பொழிவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில் கனமழை காரணமாக சென்னையில் விமான சேவை ஸ்தம்பித்துள்ளது. விமான ஓடுதளத்தில் மழை நீர் தேங்கியதால், சென்னைக்கு வந்த 10 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. துபாய், அபுதாபி, லண்டன், சார்ஜா, சிங்கப்பூர் உட்பட 10 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமிட்டு பறந்தன. சென்னையில் இருந்து டெல்லி, அந்தமான், துபாய், லண்டன் உள்ளிட்ட 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்படும். சென்னையில் இருந்து 9 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 3 முதல் 6 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


