வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 17-ம் தேதி காலை புதுச்சேரி-நெல்லூர் இடையே சென்னை அருகே கரையை கடக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் 35 கி.மீ. முதல் 55 கி.மீ வரை இருக்கும்.
இதுகுறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 490 கி.மீ தொலைவில் இது நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவைக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் வரும் அக்.17ஆம் தேதி அதிகாலை நேரத்தில் கரையை கடக்கும்.
கரையைக் கடக்கும்போது தரைக் காற்றின் வேகம் சுமார் 35 முதல் 55 கி.மீ வேகத்தில் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக் கூடும். வட தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்” இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.