ரூ.7.44 கோடி மதிப்பீட்டில் உழைக்கும் பெண்களுக்கான தங்கும் விடுதி திறப்பு
கூடுவாஞ்சேரியில் 7.44 கோடி மதிப்பீட்டில் உழைக்கும் பெண்களுக்கான தங்கும் விடுதியை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நகராட்சி டிபென்ஸ் காலனி பிரதான சாலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில்,தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் மூலம் ரூபாய் 7.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தரை தளத்துடன் கூடிய நான்கு அடுக்குமாடி கட்டிடத்தில் 120 படுக்கை வசதிகளுடன் (AC & Non AC) கட்டப்பட்டுள்ள அரசு பணிபுரியும் மகளிர் விடுதியினை மாண்புமிகு தமிழக முதல்வர்கள் காணொளி காட்சியின் வாயிலாக திறந்தார்.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் மகளிர்க்காக கட்டப்பட்டுள்ள இவ்விடுதியில் இருவர் மற்றும் நால்வர் தங்கும் வசதியுடன் கூடிய 120 படுக்கை வசதியும்,சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,பாதுகாப்பு வசதி, இலவச WIFI. பயோமெட்ரிக், பொழுதுபோக்கு அறை ஆகிய நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் இராகுல் நாத்,திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ,நந்திரவம்- கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்தி,நகர்மன்ற துணைத்தலைவர் ஜி.கே.லோகநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து,பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் அரசு துறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துக்கொண்டனர்.