புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாத கைதிகளை சந்திக்க வேண்டும் என உறவினர்கள் சிறை வாசலில் காத்திருப்பு. சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பு. உயிருடன் உள்ளார்களா, இல்லையா என உறவினர்கள் கேள்வி.
சென்னை புழல் மத்திய சிறையில் சுமார் 4000க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் இந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு, கோவை அத்வானி வெடிகுண்டு வழக்கு என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட பயங்கரவாத கைதிகள் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர். அண்மை காலமாக சிறையில் காவலர்கள் சிறப்பு சோதனையின் போது பயங்கரவாத கைதிகள் போலீசை தாக்குவதும், காவலர்கள் கைதிகளை தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரது குடும்பத்தினர் இருவரையும் சந்திக்க வேண்டும் என புழல் சிறைக்கு வந்தனர். அங்கு சிறைத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சிறை வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனது மகன் பிலால் மாலிக்கை போலீஸ் தாக்குவதாகவும், தவறு செய்தால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான் எனவும், போலீஸ் அடிக்க கூடாது எனவும், தனது மகன் இருக்கிறானா இல்லையா எனவும், எனது மகனை பார்த்து கட்டிப்பிடித்து கொஞ்ச வேண்டும் என அவரது தாய் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் செய்தியாளர்களிடம் பேசுகையில் இஸ்லாமிய சிறை கைதிகளை காவலர்களே அடித்து கையை உடைத்து விட்டு, என்கவுன்ட்டர் போல தற்காப்பு தாக்குதல் என சிறை காவலர்கள் பாவிப்பதாகவும், கடந்த 1999ல் பாக்ஸர் வடிவேல் என்ற கைதியை சிறைக்குள் அடித்து கொன்று மாரடைப்பில் உயிரிழந்ததால் கலவரம் ஏற்பட்டதாக கைதிகள் கொல்லப்பட்ட சிறைச்சாலை என்றார். சிறைக்குள் நடப்பது யாருக்கும் தெரியாது எனவும், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் மீது தாக்குதல் நடைபெற்று வருவதாகவும், அவர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், சிறைக்குள் நடப்பதை தடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பன்னா இஸ்மாயில் மனைவி கூறுகையில் பொய் வழக்கில் தமது கணவர் 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறை கூடமா, சித்திரவதை கூடமா என கேள்வி எழுப்பினார். உறவினர் மட்டுமின்றி, வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், உயிருடன் உள்ளார்களா இல்லையா எனவும், அவரை கண்ணால் பார்க்க வேண்டும் எனவும் அவர்களை சந்திக்கும் வரையில் இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்தார். சிறுபான்மையினர் நலன் என கூறி வரும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பிலால் மாலிக் மனைவி கூறுகையில் 12 ஆண்டுகளாக பொய் வழக்கில் சிறையில் உள்ளதாகவும், அண்மை காலமாக வழக்கறிஞர் சந்திக்க கூட அனுமதி மறுக்கப்பட்டு வருவதாகவும், ஜாமீன், பரோல் ஏதும் வழங்கப்படவில்லை எனவும் கூறினார்.
செய்திகளில் வந்ததை பார்த்து தமது மகனை பார்க்க வேண்டும் என தாய் வந்துள்ளதாக பிலால் மாலிக் சகோதரர் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் விடுதலை செய்வதாக முதலமைச்சர் கூறிய நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தற்போது தனது தம்பியை நேரில் பார்த்தால் அவர் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட காயங்கள் தெரிந்து விடும் என்பதால் தங்களை அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். திட்டமிட்டு அதே அதிகாரி சிறைகளிலும் பிலால் மாலிக், போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் ஆகியோரை தாக்கியுள்ளதாக குற்றம் சாட்டினார்.
முஸ்லீம் அதிகாரியை கொண்டே இவர்கள் மீது சிறைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்லாமிய பயங்கரவாத கைதிகளை நேரில் சந்திக்க வேண்டும் என குடும்பத்தினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது. இதனிடையே சிறையில் காவலர்களை தாக்கி தகராறில் ஈடுபடும் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் 3மாதங்கள் ரத்து செய்யப்படும் எனவும், சிறை விதிகளின்படி தற்போது உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்குப்பதிவு!