மக்களுடைய வாக்குகளில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அது ஜனநாயகத்தில் விரோதமான செயல் எனவும் அதில் சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 1957-ஆம் ஆண்டு சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட தியாகி இமானுவேல் சேகரன் இறந்த நாளான செப்டம்பர் 11 ஆம் தேதியை, மனித உரிமை மீட்பு நாளாக புதிய தமிழகம் கட்சி அனுசரித்து வருவதாக குறிப்பிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்தில், செப்டம்பர் 11 ஆம் தேதி அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் அதற்கு ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அரசியல் கட்சியினர் அனைவரும் அதில் கலந்து கொள்ளும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராமநாதபுரம் பரமக்குடியில் இந்த நிகழ்ச்சி நடைபெறவதாவும் 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார். தமிழ்நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சுமார் 5 லட்சம் ஏக்கர்களை தனிநபர் சட்டவிரோதமாக வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி, அதை மீட்பதற்கு தொடர்ந்து குரல் கொடுத்ததன் அடிப்படையில் சில கோவில் நிலங்களை மீட்பதற்கு சேகர்பாபு முயற்சி எடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் பல கோயில்களில் சட்டவிரோதமாக 54 பேர் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். அறநிலை துறையில் முறைகேடு நடைபெறுவதையொட்டி புதிய தமிழகம் கட்சி சார்பாக செப்டம்பர் 24-ஆம் தேதி விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதையும் அறிவித்தார். பீகாரில் நடைபெற்ற வாக்காளர் முறைகேடு குறித்த கேள்விக்கு,
ஜனநாயகத்தில் யாருடைய வாக்குகளில் முறைகேடு நடைபெற்றாலும் அது ஜனநாயகத்தின் விரோதமான செயல் தான் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்டிருந்த மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முதலீடுகளை ஈர்க்க முதல்வர் வெளிநாடு சென்றிருப்பதற்கு, கிருஷ்ணசாமி வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதலீட்டின் பயன் மக்களுக்கு செல்கிறதா என்று பார்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.த வெ க மாநாடில் இளைஞர் ஒருவர் தூக்கி வீசப்பட்டதற்கு விஜய் மேல் வழக்கு பதிவு செய்திருப்பது தவறான செயல் என புதிய தமிழக கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி கண்டித்தார்.