நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமல்லாமல் பைக், கார் ஓட்டுவதிலும் ஆர்வமுடையவர். அந்த வகையில் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நண்பர்களுடன் இணைந்து பைக் ரைடு செல்லுவார். இந்நிலையில் தான் அஜித்குமார் கார் ரேஸிங் அணியை தொடங்கி கடந்த ஜனவரி மாதத்தில் துபாயில் நடைபெற்ற 24H தொடரில் தனது அணியினருடன் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்தார். அதைத்தொடர்ந்து இத்தாலி, பெல்ஜியம் நாடுகளிலும் நடந்த பந்தயத்திலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். இதற்கிடையில் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த விருது சமீபத்தில் ஜனாதிபதி மாளிகையில் அஜித்துக்கு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சென்னை திரும்பிய அஜித்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக அஜித்தின் காலில் சிறிய அளவில் அடிபட்டதாக சொல்லப்படுகிறது. எனவே நேற்று (ஏப்ரல் 30) பிசியோ சிகிச்சைக்காக சென்னை, கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் அஜித். பரிசோதனை முடிந்ததும் நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.