நாளை (அக்டோபர் 31) ஓடிடியில் லோகா சாப்டர் 1 மற்றும் காந்தாரா சாப்டர் 1 ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.
லோகா சாப்டர் 1: சந்திரா

கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லேன், சாண்டி மாஸ்டர் ஆகியோரின் நடிப்பில் திரைக்கு வந்த படம் தான் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. இந்த படத்தை துல்கர் சல்மான் தயாரிக்க டோமினிக் அருண் இயக்கி இருந்தார். சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் மலையாளத்தில் வெளியான இந்த படம் தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு உலக அளவில் ரசிகர்களை கவர்ந்து ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.
மேலும் இந்த படமானது இந்திய அளவில் சிறந்த படங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் நாளை (அக்டோபர் 31) ஜியோ ஹாட்ஸ்டாரில் மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காந்தாரா சாப்டர் 1
ரிஷப் ஷெட்டியின் நடிப்பிலும், இயக்கத்திலும் கடந்த அக்டோபர் 2ஆம் பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் தான் ‘காந்தாரா சாப்டர் 1’. இந்த படத்தில் ருக்மினி வசந்த், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தரமான மேக்கிங்கில் ‘காந்தாரா’ படத்தின் ப்ரீக்குவல் கதையாக வெளியான இந்த படம் முதல் பாகத்தைப் போல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
அடுத்தது நாளை (அக்டோபர் 31) இந்த படத்தின் ஆங்கில வெர்ஷன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இந்த படம் அமேசான் பிரைமில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


