இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ரெட்ரோ படம் குறித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்பராஜ் தொடர்ந்து வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், பிரகாஷ்ராஜ், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது ஆக்ஷன் கலந்த காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது. (நாளை) மே 1ல் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ட்ரைலரை பார்க்கும்போது இந்த படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் போல் தெரிகிறது. இருப்பினும் கார்த்திக் சுப்பராஜ் ஒவ்வொரு பேட்டியிலும் இது காதல் படம் தான் என்று கூறி வருகிறார். எனவே இது எந்த மாதிரியான கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய கார்த்திக் சுப்பராஜ், “இதுவரை ரெட்ரோ கதைக்களம் எதைப் பற்றியது என்பதை நான் அதிகம் வெளிப்படுத்தவில்லை. தியேட்டரில் ஒரு குழுவாக படத்தை பார்க்கும்போது ஒரு முழுமையான அனுபவத்தை வழங்க விரும்புகிறோம். பார்வையாளர்களுக்கு இது பிடிக்கும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.