90 காலகட்டங்களில் பல்வேறு ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இவர் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதேசமயம் இவரது நடனத்திற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்த சிம்ரன் வாரணம் ஆயிரம், பேட்ட போன்ற படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதற்கிடையில் ஐந்தாம் படை, சீமராஜா போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார். கடைசியாக பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் திரைப்படத்திலும் நடிகை சிம்ரன் வில்லியாக மிரட்டி இருந்தார். இந்நிலையில் பாலியல் சீண்டல் குறித்து அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார் சிம்ரன்.
அதாவது சமீப காலமாக திரைத்துறையில் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து வெளிவரும் பாலியல் புகார்கள் பெரும் பூகம்பத்தை கிளப்பி இருக்கிறது.
இந்த சமயத்தில் நடிகை சிம்ரன் தானும் பாலியல் சீண்டலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். “ஒரு பெண் மீது பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டால் அதை உடனடியாக வெளியில் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எப்படி சொல்ல முடியும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கு சில மணி நேரங்கள் தேவைப்படுகிறது. பொறுமையாக அதை யோசித்து தான் அதற்கு ரியாக் செய்ய முடியும். சிறுவயதிலிருந்தே இது போன்ற பிரச்சனைகளை கடந்து தான் வந்திருக்கிறேன். ஆனால் அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. இனிமேல் இது போன்ற பிரச்சனை வந்தால் அதை எதிர்த்துப் போராட வேண்டும். அமைதி காக்க கூடாது. அப்படி இருந்தால் அது தவறு” என்று பாலியல் சீண்டல் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் சிம்ரன்.