இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், நந்தமுரி பாலகிருஷ்ணாவை சந்தித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இதைத் தொடர்ந்து இவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹுரா ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. பின்னர் மீண்டும் முயற்சியை கைவிடாமல் மார்க் ஆண்டனி எனும் தரமான படத்தை இயக்கி இழந்த வெற்றியை திரும்ப பெற்றார் ஆதிக். அதேசமயம் இவருக்கு அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்க குட் பேட் அக்லி படத்தை களம் இறக்கினார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் வாரி குவித்தது. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்ற பல தகவல்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில்தான் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு ஆதிக்கை வரவழைத்ததாக சொல்லப்படுகிறது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபுவும் நந்தமுரி பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து பேசி இருப்பதாகவும், ஆதிக் – நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் புதிய படம் உருவாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


