தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் துணிவு படத்திற்கு பிறகு தனது 62 ஆவது படமான விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் நேற்று அப்பல்லோ மருத்துவமனையில் சாதாரண பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக நடிகர் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது உண்மைதான் ஆனால் மூளையில் இல்லை. கழுத்தின் கீழ் பகுதியில் சின்ன பல்ஜ் போன்ற புடைப்பு இருந்ததனால் அதை அறுவை சிகிச்சையின் மூலம் அரை மணி நேரத்தில் மருத்துவர்கள் சரி செய்து விட்டனர். விரைவில் அஜித் வீடு திரும்புவார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம், “அஜித்துக்கு மூளைக்கும் காதுக்கும் இடையில் வீக்கம் இருந்ததனால் , அதனை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி இருக்கிறோம். அஜித் இப்போது நலமுடன் இருக்கிறார். அஜித் தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இன்று அல்லது நாளை டிஸ்டார்ஜ் செய்யப்படுவார்” என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.