துணைவேந்தர் நியமனம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்ட விவவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும் என்று பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வலியுறுத்தி உள்ளார்.

துணை வேந்தர்கள் நியமன விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் வெளியாகி உள்ள தகவல்கள் குறித்தும், இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்தும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பின் நகல்கள் நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் 2 விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. முதலாவது சட்டரீதியாக வைக்கப்பட்ட வாதங்கள், அதற்கான உத்தரவுகள் இடம்பெற்றுள்ளன. மற்றொன்று மூத்த வழக்கறிஞர் மீது வைக்கப்பட்ட விமர்சனம். வழக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பில் தங்களுக்கு உரிய கால அவகாசம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் அதை ஏற்காமல் மனுதாரர் தரப்பு வழக்கறிஞரை வாதிட செய்ய சொல்லி அறிவுத்தினர்.
அவர்கள் தரப்பு வாதம் மத்திய அரசு இயற்றிய யுஜிசி சட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தம் உள்ளது. அதை நீதிமன்றம் ஏற்று இடைக்கால தடை விதித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுக்கும், அதிகாரிகளால் வகுக்கப்படும் விதிகளுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கிறது. சட்டத்திற்கும், விதிகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டால் சட்டம்தான் செல்லும். யுஜிசி சட்டத்தில் எந்த இடத்திலும் துணை வேந்தர் நியமனம் தொடர்பாக விதிகளே கிடையாது. அந்த சட்டத்தில் சில தகுதிகளை குறிப்பிடுகிறார்கள். அதை நாம் விரும்பினால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அதை நீங்கள் கட்டாயம் என்று சொல்கிறபோது அங்குதான் கூட்டாட்சி தத்துவம் என்பது ஒழிக்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட காமராஜர் பல்கலைக்கழக சட்டத்திற்கான மதிப்பு அங்கே போய்விடுகிறது. எனவே நீதிபதிகள், அதிகாரிகள் இயற்றிய ஒரு விதியை, சட்டப்பேரவையில் இயற்றிய விதிகளுக்கு மேலாக வைத்து பார்ப்பது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் தலைமையிலான அமர்வு செய்த அரசியல் சட்டத் தவறு. எனவே இந்த இடைக்காலத் தீர்ப்பு என்பது அரசியல் சட்ட விரோத தீர்ப்பு என்றுதான் நான் பார்க்கிறேன். இரண்டாவது விஷயம் மூத்த வழக்கறிஞர் வில்சனை நடத்திய விதம். தீர்ப்பில் அவர் குறித்து சொல்லி இருக்கிற விசமர்சனங்கள். மற்றொருபுறம் பாஜக வழக்கறிஞர் ஷேசாத்ரி நாயுடு வருகிறார். அவரை நீதிபதிகள் வரவேற்று முன்வரிசையில் உட்கார வைக்கிறார். விசாரணையின்போது வில்சன், தான் ஆன்லைனில் உள்ளதால் தனக்கு வாதங்கள் கேட்கவில்லை என்று சொல்கிறார். அப்போது மற்றதெல்லாம் கேட்கிறது. இது மட்டும் கேட்கவில்லையா என்று கிண்டல் செய்து சிரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நாங்கள் தேவைப்பட்டால் மெமோ பைல் செய்துவிட்டு வாக் அவுட் செய்திருப்போம் என்று சொல்கிறார். அதை நீதிபதி லெட்சுமி நாராயணன் கண்டிக்கிறார்.
ஆனால் தீர்ப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு உதவி செய்தார். மூத்த வழக்கறிஞர் வில்சன் நீதிமன்ற விசாரணைக்கு தடை ஏற்படுத்தினார் என்று சொல்கிறார்கள். அவர் உயர் கல்வித்துறைக்காக ஆஜராகினார். உயர்கல்வித்துறை அவரிடம் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதை தான் அவர் கேட்கிறார். இது எப்படி விசாரணையை தடை செய்வதாகும். அடுத்து மூத்த வழக்கறிஞர் வில்சனின் அறிவுரை எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி சொல்கிற நீதிபதிகள், அவர்கள் சரியாக இருக்க வேண்டும் அல்லவா? இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நீதித்துறை மரபுகளை மீறுகிறார் என்று ஏராளமான வழக்குகளில் சொல்ல முடியும். எச்சில் இலை வழக்கில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தவுக்கு, இவர் ஒற்றை நீதிபதி உட்கார்ந்து அந்த தீர்ப்பு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார். உச்ச நீதிமன்றத்தின் வழக்கை உயர் நீதிமன்றம் மாற்ற முடியுமா? மாணவி லாவண்யா வழக்கில் பாஜக தலைவர் அண்ணாமலையை புகழ்ந்து எழுதுகிறார். உங்களால் அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்து செயல்பட முடியவில்லை என்றால், ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பிவிட்டு பாஜக, ஆர்எஸ்எஸ்-ல் சேர்ந்து பணியாற்றலாம். யாரும் குற்றம் சொல்லப் போவது இல்லை. 2வது நீதிபதி லட்சுமி நாராயணனின் சகோதரர் அந்த நீதிமன்றத்தில் பிராக்டிஸ் செய்கிறார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக செனட் உறுப்பினராக 2 முறை வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கவே கூடாது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று விசல்சன் பல முறை சொல்கிறார். மேலும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நோட்டிபிகேஷனே போலியானது என்று சொல்கிறார். உயர் கல்வித்துறை மூத்த வழக்கறிஞர் சொல்கிறார். அதை நீதிமன்றம் தீர்ப்பில் எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா? அல்லது அதற்கு பதிலாவது சொல்லி இருக்கிறார்களா? நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயத்தை எழுதி, அதற்கான பதிலை சொல்லி மறுப்பதுதான் நீதித்துறையின் மரபு, மாண்பு ஆகும். வில்சன் சொல்கிறார் அது மோசடியானது என்று. அப்போது இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடுங்கள். அந்த மோசடியான ஆவணத்தை வைத்து, நீங்கள் உத்தரவு போடுகிறீர்கள் என்றால் என்ன அர்த்தம். மூத்த வழக்கறிஞர் வில்சன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் நான் முறையிட்டேன். அவர் உங்களிடம் சென்று சொல்ல சொன்னார். என்னை நம்புங்கள் என்று சொல்கிறார். ஆனால் அதை ஏற்கவில்லை. மொத்தத்தில் நடைபெற்றது எல்லாம் நீதித்துறையின் மாண்பை கெடுக்கும் விதமாக தான் அமைந்துள்ளன.
உச்சநீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனு இன்றைக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த், கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. அப்போது நல்ல செய்தி வந்துவிடும். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. இடைக்காலத் தடை தொடர்பான விஷயம் மேல்முறையீட்டில் ஸ்டே கொடுத்தால் நின்றுவிடும். இன்றைய தேதிக்கு ஆளுநர் தான் நியமிக்க முடியும். டிரான்ஸ்பர் பெட்டிஷனில் எடுத்து நீங்கள் இதை விசாரிக்கக் கூடாது என்று நிறுத்தினால், இதற்கும் சேர்த்து ஸ்டே கொடுத்தால்தான் பழைய நிலை வரும். அப்போது 2 வழக்குகளிலும் என்ன உத்தரவு போடுவார்கள் என்று நமக்கு தெரியாது. தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தான் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அது வந்த பிறகுதான் அது குறித்து தெரியும். டாஸ்மாக் தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு சரியான முறையில் பரிசீலித்து சொன்னார்கள். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் அணுகி தடை வாங்க வேண்டும். ஏனென்றால் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடிய பிரச்சினையாக இந்த விவகாரம் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.