தனுஷின் 55 ஆவது படம் ஜூன் மாதத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நிலையில் ஓய்வே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே குபேரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ள தனுஷ் தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தேரே இஷ்க் மெய்ன் எனும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் போர் தொழில் பட இயக்குனரிடம் கதை கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி தன்னை ஒரு சிறந்த இயக்குனராகவும் நிரூபித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தைத் தானே இயக்கி நடித்து வருகிறார். அடுத்ததாக அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தான் நடிகர் தனுஷ், அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
அதன்படி கோபுரம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜையும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பாக நடந்து முடிந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்காலிகமாக D55 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.