தனுஷ் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக ‘இட்லி கடை’ திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இதற்கிடையில் தனுஷ் அப்துல் கலாம் மற்றும் இளையராஜாவின் பயோபிக் படங்களிலும், D55, D56 போன்ற படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அதே சமயம் D54 படத்திலும் நடித்துள்ளார். அதாவது தனுஷின் 54வது படமாக உருவாகும் இந்த படத்தை ‘போர் தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க மமிதா பைஜு, ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கே.எஸ். ரவிக்குமார் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விறுவிறுப்பான த்ரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதன்படி சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பும் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்காக தனுஷ் எந்த அளவிற்கு தனது உழைப்பை கொடுத்துள்ளார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ராமநாதபுரத்தில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட 104–105° காய்ச்சலுடன் இரண்டு நாட்கள் மழை தொடர்பான காட்சியில் நடித்தாராம் தனுஷ். மாத்திரைகள் மற்றும் ஊசிகளுடன் படப்பிடிப்பை தொடர்ந்தாராம். படப்பிடிப்பு முடிந்த பின்னர்தான் டைரக்டர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனுஷின் உடல்நிலை குறித்து தெரிய வந்ததாம். ஏற்கனவே தனுஷ் சினிமாவிற்காக ஓயாது ஓடிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த தகவலும் அவர், மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர்களில் ஒருவர் என்பதை காட்டுகிறது.


