இயக்குனர் சேரன், விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவருடைய இயக்கத்தில் வெளியான வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் தனித்துவமான படங்களாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. மேலும் இவர், நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய சேரன், நடிகர் விஜய் சேதுபதி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “விஜய் சேதுபதிக்காக நான் எழுதிய கதை ரொம்ப முக்கியமானது. அது இல்லை என்கிறபோது அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் எனக்கு அது ஒரு பெரிய ஏமாற்றம். மனநிலை பாதிக்கப்பட்ட இடத்திற்கே போயிட்டேன். அதுல இருந்து மீண்டு வரவே கஷ்டப்பட்டேன். ஒரு கதையை யோசிச்சு, எழுதி, டெவலப் பண்ணி வச்சா, திடீர்னு அந்த கஷ்டத்தை உணராமல் ஒருத்தர் வேணாம்னு சொல்லிட்டு போறது ரொம்ப கஷ்டமா இருக்கு. சினிமால கதையை நேசிச்சு வர்றவங்க ரொம்ப கம்மி ஆகிட்டாங்க” என்று தெரிவித்துள்ளார்.
அதாவது இயக்குனர் சேரன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல விஜய் சேதுபதி தான் காரணம் என பல தகவல்கள் வெளியான நிலையில் அப்பொழுதே விஜய் சேதுபதிக்காக அவர் கதை ஒன்றை தயாரித்து வைத்திருந்தார் எனவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர்களது கூட்டணியில் புதிய படம் உருவாகும் எனவும் செய்திகள் வெளிவந்தது. அதன் பின்னர் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த படம் நடக்காது என இயக்குனர் சேரன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


