டியூட் படம் தான் நம்பர் 1 என்று தயாரிப்பாளர் பேட்டி கொடுத்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டியூட் திரைப்படம் நேற்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தை கீர்த்திஸ்வரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. சாய் அபியங்கர் இதனை இசையமைப்பாளராகவும், நிகேத் பொம்மி இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கின்றனர். இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காதல், காமெடி, ஆக்சன், எமோஷன் ஆகியவை கலந்த கமர்சியல் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதன்படி இப்படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும், உலக அளவில் ரூ.22 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ரவி சங்கர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது அவர், “தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் டியூட் படம் தான் நம்பர் 1 படமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த படத்தின் வசூல் இரண்டு மடங்கு அதிகம். நிச்சயமாக எண்கள் எங்களை ஆச்சரியப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
டியூட் திரைப்படம் வெளியான அதே நாளில் பைசன், டீசல் ஆகிய படங்களும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.