துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
மலையாள சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் சீதாராமம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். தற்போது இவருடைய நடிப்பில் காந்தா எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் வலம் வரும் துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் லோகா சாப்டர் 1: சந்திரா எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் இந்திய அளவில் சிறந்த படமாக பலராலும் கொண்டாடப்பட்டு, மலையாள சினிமாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் லோகா சாப்டர் 2 படத்தையும் தயாரிக்கிறார். இதில் டோவினோ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தியது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் இரண்டு சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 8) காலையிலேயே சென்னை, அபிராமபுரத்தில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அதாவது சட்ட விரோதமாக பூடானிலிருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்தது தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. துல்கர் சல்மான் வீட்டில் மட்டுமல்லாமல் அவருடைய தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் அமலாக்கத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் திரைப்பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.