நடிகர் இளவரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை… மன்னிப்பு கேட்ட நடிகர்…
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை தி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறி, ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2022-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணை முடுக்கி விரைவில் நீதிமன்றத்தில் சமர்பிக்கவும் உத்தரவு பிறப்பித்தது. மேலும், முறைகேடு தொடர்பாக அளித்த புகாரில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்தது.

ஆனால், குறிப்பிட்ட காலத்தில் விசாரணை முடியவில்லை என குற்றம் சாட்டி ஒளிப்பதிவாளர் சங்க செயலாளரும், நடிகருமான இளவரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் போலீசார் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது காவல்துறை சார்பாக ஆஜர் ஆன வழக்கறிஞர், நடிகர் இளவரசு விசாரணைக்காக காவல்நிலையம் வந்ததையும், அங்கு போலீசார் விசாரணை நடத்தியதையும் தெரிவித்தார். ஆனால், இதனை இளவரசு மறுத்து தான் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, காவல் நிலையத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிப் பதிவுகளை வழக்கறிஞர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். இதை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். நீங்கள் மன்னிப்பு கூறினால் அதை ஏற்க தயார் என்றும், இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக மனுதாரரான நடிகர் இளவரசு மன்னிப்பு கோரி விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த வழக்கை பிப்ரவரி 5-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.