தலைவர் 173 படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ரஜினியின் 173 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த படத்தை கமல் தயாரிக்கப்போவதாகவும், சுந்தர்.சி இயக்கப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் சுந்தர்.சி இந்த படத்தில் இருந்து விலகுவதாக திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன் பிறகு கமல்ஹாசனும் நல்ல கதை அமையும் வரை இயக்குனரை தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். எனவே சுந்தர்.சி -யின் கதை ரஜினிக்கு திருப்தி கொடுக்காததால் தான் தலைவர் 173 படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சிக்கு கிடைக்கவில்லை என்ற பேச்சு அடிபடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ‘தலைவர் 173’ படத்தை இயக்கப்போகும் அந்த இயக்குனர் யாராக இருக்கும்? என பலரும் சமூக வலைதளங்களில் விவாதித்து வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது சமீபத்தில் நடிகர் தனுஷ், ரஜினிகாந்திடம் கதை சொன்னதாகவும், இந்த திட்டம் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் புதிய தகவல் கசிந்துள்ளது. ஆகையினால் தனுஷின் கதை, ரஜினிக்கு பிடித்தால் இந்த கூட்டணி இணையும் என்று நம்பப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருப்பதோடு இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


