ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய், ஜனநாயகன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்க சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் மகளாக மமிதா பைஜு நடிக்கிறார் என தகவல் வெளியாகி வருகிறது. இவர்களுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படம் அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு 2025 ஜூன் மாதத்தில் நிறைவு பெறும் என்று தகவல் கசிந்தது.
ஆனால் சமீபத்திய தகவல் என்னவென்றால், ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு அடுத்த 25 நாட்களுக்குள் முடிவடைந்து விடும் எனவும், படப்பிடிப்பை முடித்த கையோடு நடிகர் விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்த உள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் ஏற்கனவே 2025 அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருவது குறிப்பிடத்தக்கது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.